வார்த்தைகள் எழவில்லை எந்தன்
வாய்மொழியும் தெளிவில்லை உந்தன்
பார்புகழ் மாண்பினைக் குறித்து
பாடவும் எனக்குத் தகுதியில்லை
வாய்மொழியும் தெளிவில்லை உந்தன்
பார்புகழ் மாண்பினைக் குறித்து
பாடவும் எனக்குத் தகுதியில்லை
என்னென்பேன் யாதென்பேன் உந்தன்
எல்லையில்லா கருணை தனையே
இன்னென்று எனைக்கண்ட இறைவா
இதழோசை முறையாய் இயம்புமோ?
ஓங்கியுன் மாட்சியை ஒலிக்க
ஓயாது நின்றாலும் எந்தன்
சங்கீதம் அணுவுக்கும் எட்டாது
சரணடைந்தேன் நான் பொருட்டல்ல
காலமில்லாக் காலமதில் என்வாழ்வு
கனிவோடு கணக்கிட்டு வைத்தீர்
தாளமில்லா பண்ணாகத் தாழ்ந்தபோது
தரமாக என்னிசை உயர்த்தினீர்
நுகங்கள் எந்தன் உயிர்மெய்
நுழைந்து என்னை நொறுக்க
யூகங்கள் என்மனம் வெறுக்க
யுத்தம் என்னுள் எழுந்தது
அம்புகள் என்னுள் பாய்ந்தும்
ஆயுதம் என்னை முட்டியும்
உம்புலம் என்னைக் காக்க
உறுதியாய் இன்னும் நிற்கிறேன்
சாவின் வாயிலைக் கண்டேன்
சடுதியில் ஆயுளை நீட்டினீர்
பூவின் வாடலை நீரும்நீக்கி
புத்துயிர் பலமுறை கொடுத்தீர்
என்னென்று சொல்வேன் யானும்
எட்டவில்லை எந்தன் மனதுக்கு
இன்னதென்று சொல்ல முடியா
இத்துணை எத்தனை அற்புதங்கள்
நாளும் சாகின்ற என்மனதை
நலிந்து மெலிந்த என்னுடலை
வாளும் கொன்ற என்னுயிரை
வலுவாக்கி மீளவும் தருகின்றீர்
என்னோடு நீரிருக்க நானும்
எதற்கு எவருக்கு அஞ்சணும்?
தன்னோடு ஒப்பில்லா தலைவன்
தயவுதான் எனக்கு வேண்டும்.
படைகள் என்னைச் சூழ்ந்தாலும்
பகைவர் என்னை வளைத்தாலும்
தடைகள் என்முன் நின்றாலும்
தாண்டிக் குதிப்பேன் உம்மாலே