ஞாயிறு, 31 ஜனவரி, 2021

என்னை நடத்தும் இறைவா (தமிழ் கவிதை)

என்னோடு  முன்செல்லும்  இறைவா 
   என்னை   உம்பாதையில்   நடத்தும்
உன்னோடு   வாழும்   வாழ்க்கை 
   உண்மையில்   மகிழ்வு  அன்றோ 

தந்தையாய்  என்னை  அறிவுறுத்தும் 
   தாயினும்  உம்மன்பைக்  காட்டும்
மந்தையாய்   எம்மை   மேய்த்தருளும் 
   மண்கலம்    நாங்கள்   குயவனே 

வற்றாத    அருளூற்று   எம்மில் 
  வழிந்தோடச்  செய்யும்  அருளாழியே 
உற்றார்   உறவுஎன்  உயிரனைத்தும் 
  உம்மிலே  உருவுக்    கண்டேன் 

மெய்யிலே   எனக்கு   அசீரளித்து 
    மென்மையாய்   கணம்   பண்ணும் 
பொய்யிலே  நானும்   வீழ்ந்திடாது 
     பொறுமையும்  பொதித்து  வையும் 

அன்பிலே   நானும்   வேரூன்றி 
    அனைவர்  தமையும்  நேசிக்கணும் 
துன்பம்    என்றொன்று  வந்தாலும் 
     துவண்டு   போகா  திருக்கணும் 

கண்ணை    இமைக்  காப்பதுபோல் 
   கடவுள்நீர்   எமைக்   காப்பீர் 
விண்ணை   மண்ணை   ஆளும் 
   வேந்தர்நீர்   விடுதலை  தருவீர்

எமதுதேவை   யாதென  நீரறிவீர் 
    என்னக்குறை  எனக்குநீர்  வைத்தீர் 
உமதருள்   எமக்கென்றும்  கிடைக்க 
    உள்ளத்தால்  நான்  புலம்புவதேன்?

அவசரமும்  ஆதங்கமும்  எனைவருத்த 
    அறிவற்ற   மனிதனாய்   ஆனேனே 
பாவமும்    பதற்றமும்   சேர்ந்தேநான் 
     படைத்தவர்   உம்முன்   விலங்கானேன் 

அமைந்த   என்மனனும்   சொல்லும் 
    ஆண்டவர்   யாவும்   காண்பாரேன்றே 
ஊமையாய்   என்மனதும்   இருந்தால் 
     உளைச்சல்  ஏதுஉடல்  மனதுக்கு?

அநீதிக்கண்டு   நான்   பொருமினேன் 
    அச்சம்கொண்டு  நான்   வருந்தினேன் 
நீதிக்கொண்டு   ஆளும்    இறைவன் 
    நீங்குவாரோ   என்   மனமே 

என்னைநான்   படைத்தது   இல்லை 
    என்னால்   படைத்தும்   ஏதுமில்லை 
பின்னையேது   புலம்பினாய்  மனமே 
    படைத்தவரே  உன்முடிவு  மட்டும் 

என்னைப்   படைத்தும்   அவரன்றோ 
   எதிரியை   படைத்தும்  அவரன்றோ 
தன்னைப்   பொதுவில்   வைத்தவரவர் 
    தீயோர்   நல்லாருக்கும்  கடவுளே 

ஆதியும்   அந்தமும்   ஆனவரே 
    அனைத்துக்கும்   அதிபதி  நீரே 
சோதியும்   என்மீட்பும் ஆண்டவரே 
     சோதனை   நின்றெனைக்   காப்பீரே    


வியாழன், 7 ஜனவரி, 2021

விடுதலை நாள் அறிவிக்க

என்மேல்    உம்ஆவியை   ஊற்றும் 
   எனக்கு   அருள்பொழிவு  செய்யும் 
வானகம்   இருந்தே   உந்தன் 
   வரமதை  பொழிவீர்   இறைவா 

ஒடுக்கப்பட்டோர்   வாழ்வு   பெறும் 
   ஒப்பில்லா  நற்செய்தி   நவிலவும் 
நடுக்கமுள்ளோர்  உள்ளம்  உடைந்தோர் 
   நலமும்   திடமும்   பெறவும் 

சிறைப்பட்டோர்   விடுதலை  நாளினை 
   சிக்குண்டோர்   விடியலின்  நாளினை 
பறைசாற்றவும்  ஆண்டவர்   என்னைப் 
   பணியாளாய்  அனுப்பி   உள்ளார் 

ஆண்டவர்   அருள்தரும்   ஆண்டினை 
   அறிவிக்கவும்   நம்கடவுள்  அநீதிக்கு 
தண்டனை   கொடுக்கும்   நாளினை
    தெரிவிக்கவும்  என்னை  அனுப்பினார் 

துயருற்று   அழுவோர்    தம்கண்ணீர் 
   துடைக்கவும்  ஆறுதல்  பெறவும் 
ஆயரற்று   தவிக்கும்   ஆடுகளை 
   ஆயன்தேடி  மீட்கும்   நாளினை 
இயம்பவும்   சாம்பலுக்கு பதிலாய் 
    இன்பமும் புலம்பலுக்குப்  பதிலாய் 
உயர்வின்   தைலம்   வழங்கிடவும் 
    உடைந்த   உள்ளத்திற்குப்  பதிலாய் 
நயம்புகழ்   ஆடையென  வழங்கவும் 
    நீதிக்கு  குரலெழுப்பவும்  அனுப்பினார் 

நீவீர்    ஆண்டவரின்   குருக்களென 
   நீதியின்  கடவுளின்'  பணியாளரென 
ஆவீரென்றே ஆண்டவர்  உரைத்தார் 
   அவர்கள்தம்  வாக்கை  மாற்றிடார் 

வேற்றினத்தார்  செல்வம்  நம்பங்காகும் 
    வேண்டிய   மட்டும்   அவர்கொடுப்பார் 
தூற்றிய    வாய்களும்   போற்றிடும் 
    தூயவர்   நம்துணை   நின்றாரென்றே 
   
இகழ்ச்சிக்கு   மாற்றாய்    நாமும் 
    இருமடங்கு   நன்மை  பெறுவோம் 
மகிழ்ச்சியும்  செல்வமும்  நம்மிடம் 
    முடியாது    நின்று   நிலைக்கும் 

ஆண்டவர்    நீதியை   விரும்புவார் 
    அநீதியும் கொள்ளையும் வெறுக்கிறார் 
மீண்டவரோடே  சமரசம்  செய்வார் 
    மக்களினம்   நடுவில்   புகழடைவோம் 

ஆண்டவரில்   நான்   அகமகிழ்வேன் 
    ஆனந்திக்கும்  அவரில்  என்னுள்ளம் 
விண்ணின்    சுடரொளி   போன்றே 
    விடுதலை   ஆடையெனக்கு  உடுத்தினார்  


     

புதன், 6 ஜனவரி, 2021

பாருங்கள்! நம்மீட்பு வருகின்றது

சீயோனின்   மீட்பு   விளக்கின் 
   சுடரெனவும் அதன்  வெற்றி 
வெய்யோன்  விடியல்  ஒளியெனவும் 
   வெளிப்படும்   வரையில்  வாளாவிறேன் 

வேற்றினம்  உன்வெற்றி   காணும் 
   வேந்தரும்  உன்மாட்சி  காண்பர் 
மாற்றொரு  பெயரினை  உனக்கு 
   மாட்சிமிகு  இறைவன்  சூட்டிடுவார் 

மீட்பரின்   கைதனில்  நீஅழகிய 
   மணிமுடி  அரசமகுட   மாவாய்
விட்டுவிலக்க   பட்டவள்   என்றோ 
   வீண்பட்டது  என்றோ  அழைக்கப்படாய் 

உன்கடவுள்   உன்னில்   மகிழ்வார் 
   உன்மதில்  மேல்காவலர்  நிற்பர் 
என்றும்   இராப்பகலாய்  அவர்கள் 
   எக்காளம்  சத்தம்  ஒலிப்பர்.

ஆண்டவருக்கு  நினைப்பு  ஊட்டுவோரே 
   அமைதியாய்    ஒருபொழுதும்  இராதீர் 
மாண்புமிகு   அவர்புகழ்   உலகினை 
   மூடும்வரை   அவரை  ஓயவிடாதீர்.

ஆண்டவர்தம்    வலக்கையின்   மேலும் 
   ஆற்றல்மிகு    தன்புயத்தின்   மீதும் 
ஆணையிட்டார் - இனிஉன்  உழைப்பை 
   அந்நியர்   பகைவருக்கு   கொடேன் 

அறுவடை   செய்தவரே   அதனையுண்டு 
    ஆண்டவரை   போற்றிப்   பாடுவர் 
ஆறுதலை   அவர்கள்     பெற்று 
     அவர்முன்    மகிழ்ந்து   ஆர்ப்பரிப்பர் 

செல்வோம் வாயில்வழிச்  செல்வோம் 
    சீராக    நெடுஞ்சாலை   அமைப்போம் 
நல்லோர்   வந்திடும்    பாதையில் 
    நச்சுமுள்  கல்லும்  அகற்றிடுவோம் 

பாருங்கள்!  நம்மீட்பு   வருகின்றது 
   படைத்தவர்  வெற்றிப்    பரிசினை 
இருளில்   கிடக்கும்    நமக்கு 
   இனிதாய்    கொடுக்க  வருகின்றார் 

இனிநாம்  கடவுளால்  மீட்கப்பட்டோர் 
    இறைவனின்   புனித  மக்களினம் 
கனிவாய்   கண்டெடுக்கப்  பட்டவனென 
    கடவுளால்   பெயர்    பெறுவாய்.


செவ்வாய், 5 ஜனவரி, 2021

ஓ அநீதி இழைக்கும் தலைவனே!

 ஓ  அநீதி இழைக்கும் தலைவனே!

ஓ  பாகுபாடு  காட்டும்  ஆட்சியாளரே!
ஓ  நீதியை  அழிக்கும்  நாடே!
ஓ  கொடுமை  துணைநிற்கும்  மக்களே!

இறைவன்  நம்மைக்  காண்பதில்லை 
இயன்றவரை  அநீதி  இழைப்போம் 
குறைச்  சொல்வோரை   அடக்குவோம் 
குற்றம்  காண்போரை  நசுக்குவோம் 

எமை   எதிர்க்கயார்   உண்டென்றே 
எண்ணியது   எல்லாம்  செய்கின்றீர் 
ஊமைபோல்  குடிமக்கள்  இருக்க 
ஊடகத்தை  பொய்மையில்  நடத்துகின்றீர் 

பொய்யும்   புரட்டும்   பேசியே 
பொழுது    எல்லாம்   கழிக்கின்றீர் 
மெய்யை   வருத்தி    உழைக்கும் 
மானிடருக்கு  சமூகநீதி  மறுக்கின்றீர் 

தலைவனே!   அநீதரின்  கைப்பாவையே 
தம்விருப்பம்   போன்றுனை   இயக்கும் 
நூலைப்    பிடித்தவரின்   ச(சா)தியினை 
நுழைத்து   நுகத்தை    வைத்தாயே.

நீதியை   நியாயத்தை  வளைத்தாய் 
நீசரை    உன்னருகில்   வைத்தாய் 
மதியை   இழந்து   பொய்யாய்  - உனை 
மதிப்போரின்  புகழில்நீ   சிக்கினாய் 

எங்கும்   அவர்கள்   ஆதிக்கம்தான் 
எதிலும்    அவர்கள்   ஆட்டம்தான் 
மங்கும்    உன்புகழ்     யாவும்இனி 
மதிப்பவர்   உனைஒருவர்   இலார்

சமூகநீதி   கெடுக்கும்   சண்டாளனை 
சீர்கல்வித்  துறையில்  நியமித்தாய் - தன் 
சமூகம்   மேன்படவே   தன்சதியால் 
சகலத்தையும்   அவன்   செய்வான்.

உன்கூடவே   இருந்து   அவனும் 
உனக்குக்   குழி   பறிப்பான்.
உன்மேல்   அவர்கள்   ஆதிக்கம் 
உயரும்   என்பதை உணர்வாய் 

பிறரை    ஆதிக்கத்தால்  நசுக்கும் 
பிற்போக்கு கொள்கை  பூணுவோரே 
அறநூலை   மறந்து   நீங்கள் 
அக்கிரமத்தை  தரித்து  உள்ளீர் 

வாழ்வதற்கு   வகைத்தேடி  நீங்கள் 
வேற்றோரின்  காலும்  பிடிப்பீர் 
வாழ்வுதந்த  மனிதரையே  நீங்கள் 
வாழாதபடி  காலில்   மிதிப்பீர்.

விடம்மிக்க   பாம்பிலும்  உங்கள் 
வினை  கொடியதும்  கொடியது 
இடம்கிட்ட   நீங்கள்   உடையோனின் 
இடத்தையும்  சேர்த்து  பிடிப்பீர்

நன்றிகெட்ட   இனமே   உன்னை 
நன்றாய்   நாட்டிலும்  உன்நாடு 
அன்றியும்  வளர்க்கும்  பிறமறை 
ஆதிகுடியை  ஏன்   ஒடுக்குகின்றாய்?

இனியும்   இறைவன்   பொருத்திரார் 
இருட்டிலே   உங்களை  கிடத்துவார் 
கனியும்   காலம்   எதுவென்றாலும் 
கண்டிப்பாய்  உங்களை  தண்டிப்பார் 

ஓ'தலைவனே    உனக்கு   ஐயோ !
ஒடுக்கி   மக்களை   நீயும் 
அடக்கி   நடத்த  நினைத்தாயே 
அடங்கும்   உன்புலங்கள்  யாவும் 

வடக்கில்   இருந்து   வரும்சத்தம் 
வாட்டி     உன்னை   வதைத்திடுமே 
முடக்கிப்   போடும்   உன்வலிமை 
முடங்கிப்   போகும்   முழக்கத்தால் 

அநீதத்திற்கு  துணைநின்ற நாடே 
அழுகையும்  கதறலும்  ஒலிக்கும் 
நீதியற்ற  வழக்குரைஞரே நீதிபதிகளே 
நிற்கதியற்று   நீரும்   போவீர்கள் 

ஊழல்மிகு  ஆட்சியாளர்  அதிகாரிகளே 
உரிமையை   மறுக்கும்   காவலரே 
அழல்மிகு   படுகுழி   உங்களை 
அணைத்திட  காத்துக்  கொண்டிருக்கும் 

பணத்திற்காய்  உண்மையை  நீதியை 
பலிகொடுக்கும்   ஊடகத்தாரே  பொய்யரே 
பிணத்திற்கு    நீங்களும்   ஒப்பானவர்கள் 
பிழைக்க  மாட்டீர்கள்   தீர்ப்பின்முன்   

வானமும்   பூமியும்   சாட்சிசொல்லும் 
வாய்மையும்   நீதியும்  தழைத்தோங்கும் 
தானமும்  சமத்துவமும் நிலைத்தோங்கும் 
தாமாய்    இறைவன்   எமைஆண்டிடுவார் 


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

எம்மீது இரங்க மாட்டீரோ ? எம் இறைவனே !

 விண்ணினின்று   நோக்கும்   என்னை 
   விரைந்து   பதில்   தாரும் 
மாண்பும்   தூய்மையும்   நிறைந்த 
   மேலோகம்    நின்று   காணும் 

உம்மாற்றலும்   ஆர்வமும்  எங்கே ?
   உம்மடியான்  மீதுகொண்ட  அன்பும் 
தம்மிரக்க    பெருக்கமும்   எங்கே ?
   தடுத்துள்ளீர்  அவற்றை  எனக்கு.

நேசரிடம்  இன்றிஎங்கு  செல்வோம் ?
   ஆபிரகாம்   எம்மை   அறியார் 
இசுரயேல்  எம்மை   ஏற்றிரார் 
   இறைவனே  எம்தந்தை  நீரே !

முன்னையக்   காலம்   தொட்டு 
    மீட்பர்    என்பது   உம்பெயர் 
என்னையும்  உமது  வழியினின்று 
    எட்டிவிலக  செய்வதும்  ஏனோ?

உமக்கு  அஞ்சி   நடவாதபடிஎம்  
    உள்ளதை  கடினப்படுத்திய  தேனோ?
உமக்குரிய  மக்களை  முன்னிட்டு 
    உடனே   நீர்திரும்பி   வாரும் 

உம்மால்   என்றுமே   ஆளப்படாத 
    ஊதாரிகள்   போன்றே  ஆனோம் 
உம்பெயரால்   அழைக்கப்  படாத 
    உதிரிகள்   போன்றே   ஆனோம் 


சனி, 2 ஜனவரி, 2021

இறங்கி வாரும் இறைவா (தமிழ் கவிதை)


 வானத்தைப்    பிளந்து    இறங்கி 
   வரமாட்டீரோ   என்   இறைவனே !
வானம்     தொடும்   மலைகளும் 
   வல்லவர்   திருமுன்   நடுங்குமே !

விறகின்மேல்  நெருப்பு   கொழுந்து 
     விட்டு    எரிவது    போன்றும் 
விறைக்கும்   நீரும்   கொதிக்கும் 
     வண்ணம்  நிலைமை  இருக்கும் 

ஆதலின்   உம்பெயர்   எதிரிக்கும் 
     அறிய   வேற்றினம்  நடுங்கும் 
மோதலில்   மேகம்தீ    பரப்பும் 
      மலைகள்  உம்முன்  உருகிஓடும் 

தம்மை    நம்பும்   அடியார்க்கு 
    தக்கபதில்   தரும்   கடவுள் 
உம்மை    அன்றி    வேறுயார்?
    உதவிடும்  புகலிடம்  வேறேது?

மகிழ்ச்சியாய்   நேர்மை  தனைக் 
    மதிப்போரும்  உம்மையும்  உம்வழி
புகழ்ச்சி   செய்வோரும்  உம்துணை 
   பெற்றிட    நீரும்   விரைகின்றீர் 

நெடுங்காலமாய்   பாவம்   செய்திருக்க 
   நாங்கள்    மீட்கப்படுவது  எங்ஙனம்?
கடும்பாவம்   உம்முன்   செய்தோம் 
   கண்டித்தீர்    உந்தன்   சினத்தால் 

நாங்கள்  தீட்டப்பட்ட   வரானோம் 
   நேரிய   எம்செயல்கள்  நைந்தன 
எங்கள்   தீச்செயல்  காற்றைப்போல் 
   எம்மை    அடித்துச்   செல்கின்றன 

உம்பெயர்   போற்றுவார்   இல்லை 
    உம்மைப்   பற்ற  முயல்பவரில்லை 
உம்முகம்    எமக்குநீர்   மறைத்தீர் 
    உளைசேற்றில்  எம்மை  அழியவிட்டீர் 

ஆயினும்    நீரேஎம்   தந்தை 
    ஆயனின்   மந்தை  நாங்கள் 
சேயில்லை  களிமண்  யாமும் 
    செய்திடுவீர்  குயவனே  உம்கையால் 

கடுஞ்சினம்   கொள்ளாதீர்   இறைவா 
    கருகிப்    போவோம்  இலைபோல் 
கடுமை  குற்றமும்   நினையாதிரும் 
    கண்ணோக்கும்  உம்மக்கள்  எம்மீதே 

உம்மக்கள்    எமக்கு    இழைக்கப்படும் 
   உளைச்சலை  அநீதியைக்   கண்டும் 
சும்மாக     நீரும்    இருப்பீரோ ? - மனிதர் 
   சூழ்ச்சியால்  எம்மை  வதைப்பீரோ?

வெள்ளி, 1 ஜனவரி, 2021

புத்தாண்டு வேண்டல் (தமிழ் கவிதை)

புதிய     ஆண்டினைத்  தந்தீர் 
   புதுமைகள்   பலவும்  செய்து 
உதயமாகிய   இந்த   ஆண்டில் 
   உம்மோடே   இருக்கணும்  இறைவா !

நன்றிகள்   பலவும்   உமக்கே 
   நாங்கள்   சொல்வோம்  என்றுமே 
இன்றுவரை   மேலாய்   எம்மை 
   இனிதாய்  நடத்தி   வருகின்றீர் 

ஓராண்டு  உமக்கோர்  நாள்போன்று 
    ஓய்ந்திடாமல்   எமைக்   காக்க 
பாராண்டு   நடத்தும்    பரமதந்தை 
     பாதம்    பணிந்து   வணங்கிடுவோம் 

நாங்கள்     உந்தன்    அடிமைகள் 
    நாளும்நீரே    கட்டளை   இடும் 
எங்கள்    வாழ்வும்   உம்மதே 
    என்றும்   நீரே   வழிநடத்தும் 

சுயத்தின்  வண்ணம்   நடக்காது 
   சூழ்நிலை   எம்மை  மாற்றாது 
தூயத்தந்தை   வழிகள்   நடந்து
    தூதராய்   எம்மை   மாற்றிடும் 

ஆண்டு    முழுதும்    எம்மோடு 
    அருகில்   நின்று   ஆண்டருளும் 
தொண்டு   உமக்கே  யாம்புரிய 
    தொழுது   நின்றோம்  உம்மிடமே 

வறுமை     எங்கும்    ஒழியனும் 
    வாட்டும்   பிணிகள்   தொலையனும் 
ஒருமைப்பாடு   உலகில்  நிலவணும் 
     ஓங்கும்   வன்முறை  சாகணும் 

அன்பும்    நீதியும்    ஆளணும் 
    ஆதிக்கம்  அடக்குமுறை   தீரணும் 
பண்பும்    பாசமும்   பெருகணும் 
    பொய்யும்   புரட்டும்  நீங்கனும் 

உம்மரசு    ஒன்றே    தீர்வாக 
   உலகை   ஆளும்   உம்கரத்தால் 
நம்பிக்கை   வேர்விட்டு   பரவ 
   நீதியால்    எம்மை   ஆண்டிடும்.

உம்மை    நாங்கள்   அறிந்ததுபோல் 
   உலகம்   முழுதும்   அறியணும் 
செம்மை    வாழ்வு    அடைந்திட 
   சேர்ந்திடும்   மக்கள்  யாவரையும் 


 
   

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...