வீற்றிருப்பார் தூயவர் புடைசூழ.
மண்ணகம் அவர்தம் கால்மணை;
மாந்தர் அவர்முன் தூசிபோன்றே.
எனில், மாந்தர் எத்தகுகோவில்
எல்லாம் வல்லவருக்குக் கட்ட ?
புனிதம்நிறை இறைவன் இங்கு
புகுந்திட உகந்த இடமேது?
அனைத்தும் அவர்கையால் உண்டாகின
அகிலத்தில் காணும் யாவும்
வனைந்தவர் இறைவன் அன்றோ !
வணங்கிட முழுஉள்ளம் போதுமே !
யாருக்கு அவரை இணையாக்குவீர்கள்?
யாரும் இறைவனைக் காணாதிருக்க.
உருவத்தைக் கொடுத்து இறைவனின்
உன்னதத்தைக் கெடுக்க இயலுமோ?
ஏழையும் வருந்தும் எளியவரும்
ஏகமாய் அவர்சொல் அஞ்சுபவரும்
உழைத்தும் உரிமை இழக்கும்
உழைப்பாளியும் இறைவன் சொந்தம்
சிலைகளை வணங்குதலும் அவற்றிக்கு
சிந்தும் உயிரின் இரத்தமும்
பாலையும் உணவுப் படையலும்
படைப்பதும் இறைவனுக்கு அருவருப்பு
இறைவனை மகிழ்விப்பதாய் இவர்கள்,
இன்னா செய்து மகிழ்கின்றனர்.
பாறையாம் இறைவன் அழைத்தபோது,
பதில் எவரும் கொடுக்கவில்லை.
அவர்கள் தமக்குரியத் தண்டனையை
ஆண்டவர் தெரிந்து வைப்பார்
அவர்கள் அஞ்சும் வண்ணம்
அனைத்தையும் அவர் செய்வார்
ஆண்டவர் அழைத்தபோது அவர்கள்
அலட்சியமாய் செவிகொட வில்லை
மீண்டும் மீண்டும் அவர்முன்னே
மிகுந்த பாவம் செய்தார்கள்.
கடவுளின் வாக்குக்கு அஞ்சுவோரே!
கேளீர் இதனை நீங்களும் !
கடவுளின் பெயரால் உங்களைக்
கழிக்கும் யாவரும் வெட்கமுறுவர்.
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோட
ஆர்ப்பரித்த வெள்ளமென அந்நியர்
பேறுகள் செல்வம் யாவும்நம்மிடம்
பாய்ந்து வரச்செய்வார் ஆண்டவர்
நீங்கள் நிறைவுப் பெறுவீர்கள்
நெஞ்சிலணைத்து சுமக்கப் படுவீர்கள்
தாங்கும் அவர்தம் மடியில்
தாலாட்டப் படுவீர்கள் என்றும்.
தாய்தன் பிள்ளையைத் தேற்றுவதினும்
தாராளமாய் நம்மைத் தேற்றுவார்
ஓய்வின்றி இதயம் மகிழும்
ஒடுங்கிய மேனியும் பொலிவுறும்
அவர்தம் ஆற்றலை தமது
அடியவருக்கு காட்டுவார் என்பதும்
அவர்தம் சினம்பகை வருக்கெதிராய்
ஆளும் என்பதும் உணர்வீர்கள்
நெருப்பென இறைவன் வருவார்
நடுங்குவர் பகைவர் யாவரும்
கரும்புகை தோன்றும் எங்கும்
கண்டனம் வீழும் மானிடர்மீது











