இனியும் கவலையேது மனமே
இறைவன் உன்துணை இருக்க
பனியும் உருகும் பகலவன்முன்
பாவமும் ஒழியும் பரமன்முன்
இறைவன் உன்துணை இருக்க
பனியும் உருகும் பகலவன்முன்
பாவமும் ஒழியும் பரமன்முன்
அனைத்தும் ஆண்டவர் காண
ஆறுதல் காண்பாய் மனமே!
வனைத்து எனை வடிவமைத்த
வல்லவர் இருக்க வருத்தமேது?
என்னறிவு அவரே தந்தது
என்வலிமை அவர் ஈந்தது
என்நலம் என்னுயிர் உடல்
என்றெல்லாம் அவர் உடைமை
நாளை என்னவென்று அறியேன்
நன்மை தீமையேது அறியேன்
வேளை ஒன்றென வைத்திட்டார்
வேந்தன் என்பதையே அறிவேன்
வெற்றுப் பாத்திரம் நானெனவே
வெறுமை என்னும் சுயமெனவே
உற்றுப் பார்த்தும் ஒன்றுமில்லை
உடையது அவரால் உடையதுவே
அறியாத விடயங்கள் பலவுண்டு
ஆயினும் அவரே விளக்கிட்டார்
முறியாத ஏற்றநல் வேளையில்
முழுமையும் என்மதி புகுத்தினார்
இல்லாமை என்றென இருக்கையில்
இருப்பது என்பதும் இல்லாமையில்
கல்லாமை பலவும் இருந்திட்டும்
கற்றோர் ஞானம் ஈந்தவரவர்
இணையொன்று எனக்கு உண்டோ
இறைவன் அருளுக்கு ஈடாக?
துணையென்று ஆயுள் முழுதும்
தூயவர் ஒருவர் மட்டும்
நிலையற்ற நிலையில் நிலைத்து
நிற்கும் நித்தியம் நானல்ல
நிலைபெற்ற நித்திய வாழ்வுக்கு
நிலைத்தவர் கருணை வேண்டும்
வாழ்வின்றி வாழும் வாழ்க்கையில்
வாழ்வே வாழ்பவர் வாழ்த்துதலில்
தாழ்வின்றி தாசனைத் தாங்கிடும்
தாளாளர் தயைநிறை தலைவரே
தேவையென்று நானும் தேடியதில்லை
தேவையை தேவனே தெரிந்திட்டார்
எவையென்று என்மனம் ஏங்கும்முன்
எல்லாமும் எனக்கே தந்திட்டார்
கோடிகோடி எனநான் கொண்டாலும்
கொள்ளேன் என்மனம் நோக்கில்
தேடித்தேடி தேய்ந்தது தேகமும்
தேவை யாதென தெரியாது
உலகத்தார் உறவுகள் உடன்பிறப்பென
உழைப்பு ஊதியம் உள்ளவையென
கலகத்தார் கலந்த கலப்பினால்
கடந்த காலமும் கசந்ததே
பணிந்தேன் பரம்பொருள் பதம்தனை
பற்றினேன் பற்றற்றார் பாதைதனை
அணிந்தேன் அணிகலனாய் அறமதை
ஆற்றினேன் ஆண்டவர் முதலென
இருளினில் ஒளியெனவே
மருளினில் தெளிவெனவே
அருளினைப் பொழிந்திடவே
ஆண்டவர் இருக்கின்றார்
தனிமையில் துணையெனவே
தவிப்பினில் அணைப்பெனவே
இனிமையில் இணையெனவே
இறைவன் இருக்கின்றார்
பிணியினில் மருந்தெனவே
பிழையினில் திருந்திடவே
பணியினில் சிறந்திடவே
படைத்தவர் இருக்கின்றார்
வளர்ச்சியில் வழியெனவே
வழிகளில் ஒளியெனவே
தளர்ச்சியில் திடமெனவே
தலைவர் இருக்கின்றார்
துயரினில் ஆறுதலாய்
துணைவரும் தோழராய்
தூயரில் தூயவராய்
துதியுடன் எழுகின்றார்
அடிமையில் விடுதலையாய்
அழுகையில் அக்களிப்பாய்
மடிமையில் பரவசமாய்
மன்னவன் இருக்கின்றார்
குறையினில் நிறைவெனவே
கொடுமையில் மீட்பெனவே
மறையினில் பூரணமாய்
மாண்புடன் மிளிர்கின்றார்
வெறுமையில் முழுதெனவே
வறட்சியில் வளமெனவே
வறுமையில் வாழ்வெனவே
வல்லவர் இருக்கின்றார்
கருணையின் வடிவனவே
கடுமையில் கனிவெனவே
உருவறியா இறையெனவே
உன்னதர் உறைகின்றார்
நலிவினில் நலமெனவே
நடுக்கத்தில் பலமெனவே
சலிப்பினில் சரதமெனவே
சர்வவல்லவர் இருக்கின்றார்