ஒருநாள் ஒரு குரு தன் சீடர்களை அழைத்து, "நான் மிகவும் வயதாகி விட்டேன். இன்னும் சில நாட்களில் நான் மரித்து போவேன். எனவே என்னால் இனி இந்த மடத்தை நிர்வகிக்க இயலாது. உங்களில் ஒருவரை நான் இந்த மடத்திற்கு குருவாகவும் தலைவனாகவும் ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கு தகுதியானவர்களை ஒரு போட்டியின் மூலம் நான் தேர்வு செய்ய போகிறேன்" என்று கூறினார். சொல்லி முடித்ததும் சீடர்களுக்குள் சலசலப்பு. "நான் தான் அதற்கு தகுதியானவன்" "இல்லை, நான் தான்" என்று. குரு அவர்களிடம், "இரண்டு நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். நீங்கள் காண்பவற்றில் எது மிகச் சிறந்ததோ அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தால், அதில் எது சிறந்தது என்பதை பார்த்து, கொண்டுவந்தவனை இந்த மடத்தின் தலைவன் ஆக்குவேன்" என்றார். உடனே, சீடர்கள் அனைவரும் பல திசைகளுக்கும் பிரிந்து சென்று தேட ஆரம்பித்தனர்.
இந்த வலைத்தளமானது என்னுடைய ஆன்மீக கவிதை, பொது கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். என்னுடைய கவிதைகள் தூய தமிழ் மரபுவழி கவிதைகளாக எழுதப்பட்டவை. மேலும் திருக்குறள் வடிவிலான என் சொந்த குறள்களும் (கடவுள் வாழ்த்து, இயற்கை சிறப்பு) இங்கு இடம்பெற்றுள்ளன. சில தமிழ் வார்த்தைகள் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தால் mike.xavier.tut@gmail.com (or) mike.xavier@hotmail.co.uk என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம் Michael Xavier, Chennai (India)
வெள்ளி, 30 அக்டோபர், 2020
தலைமைப் பண்பு
ஒருநாள் ஒரு குரு தன் சீடர்களை அழைத்து, "நான் மிகவும் வயதாகி விட்டேன். இன்னும் சில நாட்களில் நான் மரித்து போவேன். எனவே என்னால் இனி இந்த மடத்தை நிர்வகிக்க இயலாது. உங்களில் ஒருவரை நான் இந்த மடத்திற்கு குருவாகவும் தலைவனாகவும் ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கு தகுதியானவர்களை ஒரு போட்டியின் மூலம் நான் தேர்வு செய்ய போகிறேன்" என்று கூறினார். சொல்லி முடித்ததும் சீடர்களுக்குள் சலசலப்பு. "நான் தான் அதற்கு தகுதியானவன்" "இல்லை, நான் தான்" என்று. குரு அவர்களிடம், "இரண்டு நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். நீங்கள் காண்பவற்றில் எது மிகச் சிறந்ததோ அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தால், அதில் எது சிறந்தது என்பதை பார்த்து, கொண்டுவந்தவனை இந்த மடத்தின் தலைவன் ஆக்குவேன்" என்றார். உடனே, சீடர்கள் அனைவரும் பல திசைகளுக்கும் பிரிந்து சென்று தேட ஆரம்பித்தனர்.
பதறிய காரியம் சிதறும்
ஒரு அரசன் தன் மனைவியின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அவளை தன் உயிராகவே மதித்தான். அவர்களுக்கு அழகான வயது வந்த இரு பெண் குழந்தைகள். ஆயினும், மனைவி மீதே அதிகம் அன்பு செலுத்தினான், ஒருநாள், அரசியார் ஒரு காய்ச்சல் வந்து இறந்து போனார். மனைவியை இழந்த துக்கத்தில் அரசன் மிகவும் வாடிப் போனான். பல மாதங்களாக வேதனையுற்று தவித்தான். பின்பு, தன்னுடைய ராஜ்யத்தில் பணியாற்றும் இரு கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தான். அவர்களிடம் அரசியாரின் ஓவியத்தைக் கொடுத்து, "அரசியாரின் நினைவு நாள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வந்து விடும். அதற்குள் மிக அழகான அரசியாரின் சிற்பத்தை ஒன்று என் படுக்கை அறையிலும் இன்னொன்று அரண்மனையின் விதானத்திலும் வைக்கும்படி இருவரும் ஆளுக்கொரு சிற்பத்தை செய்து தாருங்கள்" என்றான். ஒரு சிற்பியின் பெயர் கேலோ. மற்றொருவரின் பெயர் டாரஸ்.
டாரஸ், தான் அந்த சிற்பத்தை சீக்கிரமாக முடித்து கொடுத்து அரசனிடம் நல்ல பெயரும் நல்ல வெகுமானமும் பெற வேண்டும் என்று நினைத்து அவசர அவசரமாக வேலையை தொடங்கினான். அந்த அவசரத்தில் முதலில் சரியான கல்லை தேர்ந்தெடுக்கவில்லை. உளியால் கல்லை செதுக்கும் போது, கல் சிதற தொடங்கியது. பின்பு அடுத்த கல்லை தேர்ந்தெடுத்தான். அதுவும் சரி வரவில்லை. கடைசியாக, பல முயற்சிக்குப்பின், ஒரு நல்ல கல்லை தேர்ந்தெடுத்தான். அதற்குள் ஒரு மாதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு மாதம் தான். என்ன செய்வதென்று தெரியாமல் பதைபதைத்தான் . கைகள் நடுங்க ஆரம்பித்தன. செதுக்கும் போதே உளியும் கையை விட்டு நழுவிச் சென்றது.
அரசியாரின் நினைவு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அரசரின் பணியாளர்கள் வந்து இருவரிடமிருந்தும் அந்த சிற்பங்களை வாங்கிச் சென்றனர்.
"எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்." (நீதிமொழிகள் 19:2)
"திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்." (நீதிமொழிகள் 21:5)
வியாழன், 29 அக்டோபர், 2020
மழலையின் மொழி (தமிழ் கவிதை)
கொஞ்சும் மழலையின் மொழிதான்
கொள்ளை கொள்ளும் இன்பம்
பிஞ்சுக் குழந்தையின் பேச்சில்
பிழைதான் காண்பவர் உண்டோ?
குழலினிது யாழினிது என்பர்
குழந்தையின் சொல் கேளாதவர்
மழலையின் மொழியில் இறைவன்
மயக்கும் ஆற்றலை வைத்தார்
எத்தனை ஆற்றல் கொண்டது
எதிரியை அடக்கும் மொழியது
அத்தனை பகையும் ஒடுக்கிடும்
அற்புதம் உண்டு மழலையில்
திங்கள், 26 அக்டோபர், 2020
குழந்தைப் பருவம் ஒரு வசந்தம் (குழந்தைகளுக்காக)
அன்புக் குழந்தைகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
"குழந்தை", ஆஹா, எவ்வளவு இனிமையான, மென்மையான ஒரு வார்த்தை. அதை சொல்லும் போதே மனம் குளிரும். என் மனதில் எப்போதுமே ஒரு ஏக்கம் உண்டு. "குழந்தையாகவே எப்போதும் இருந்து விடலாமே!". எனக்கு அவ்வளவு பிடிக்கும் குழந்தை பருவத்தை. ஒரு மனிதனுடைய வாழ்வில் அது ஒரு வசந்த காலம். பணக்காரக் குடும்பமோ, ஏழைக் குடும்பமோ, எந்த நிலையிலும் குழந்தைப் பருவம் அதனை உணராது ஏதோ ஒரு அற்புதமான மன நிலையில் ஆனந்தமாக அமைதியாக இருக்குமே, அதை விட இந்த உலகத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி எதுவுமில்லை. தாயின் அணைப்பில், தந்தையின் பிணைப்பில் எந்தக் கவலையுமின்றி, ஆரவாரித்து கொண்டாடுவது, சகோதர, சகோதரியிடம் பேசி மகிழ்வது, தெருவில் உள்ள பிற குழந்தைகளிடம் ஓடியாடி விளையாடுவது எத்தனை மகிழ்ச்சி. ஏழ்மை நிலையிலும் இருப்பதைக் கொண்டு பகிர்ந்துண்டு வாழ்ந்த அந்த நாட்கள் வானத்தில் பறக்கும் நிலையை ஒத்தது. கள்ளம் கபடின்றி, சூதுவாது தெரியாது செய்த பிழைகள் கூட மனதில் நிற்பதில்லை. குழந்தைப் பருவம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு அற்புத காலம். அதை மாசின்றி கவலையின்றி எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமோ, அத்தனை மகிழ்ச்சியில் வைத்திருங்கள். இந்தக் காலம், ஆண்டுகள் செல்ல செல்ல நம்மை விட்டு விலகும். எனவே, எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் குழந்தை மன நிலையிலே, இருக்க ஆசைப்படுங்கள். எல்லாவற்றிலுமே, இளம்பருவம் என்பது அழகானது, இரசிக்கக் கூடியது, கொஞ்சக்கூடியது. அது மனிதனோ, விலங்குகளோ, பறவைகளோ, செடிகளோ, அதன் இளமைத் தோற்றம், இனிமையிலும் இனிமை. இந்தப் பருவத்தில், உங்கள் பார்வையை கைபேசியின் மீதோ, வேறு மின்னணு பொழுது போக்கு சாதனங்கள் மீதோ விழ விடாதீர்கள். அதெற்கென்று உள்ள காலம் வரை அதனை விட்டு முடிந்தவரை விலகி இருங்கள். தாய், தந்தையிடம் கொஞ்சி விளையாடுங்கள், இருபது வயது வரை கூட). சகோதர, சகோதரிகளிடம் பேசி மகிழுங்கள். ஓடியாடி விளையாடுங்கள் (பெற்றோரின் கண் பார்வைக்குள்ளாக).. உங்களுக்கு பிடித்தமானதை எழுதுங்கள், ஓவியமாக வரையுங்கள், பேசுங்கள். உங்கள் மனதில் பட்ட ஏதாவது ஆராய்ச்சி சிந்தனையை, ஆபத்தில்லாத முயற்சியை செய்து பாருங்கள். பாடுங்கள், ஆடுங்கள். கவிதைகளை, கதைகளைத் தீட்டுங்கள். மற்றக் குழந்தைகளிடம் (மட்டுமே) உங்கள் கருத்துக்களை, கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிற குழந்தைகளுடன், முற்றத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ சேர்ந்து, பகிர்ந்து உண்ணுங்கள். உங்கள் குடும்பத்தில் நடக்கும் எந்த ஒரு சண்டை சச்சரவையும் உங்கள் கவனத்தில் கொள்ளாதீர்கள். நல்ல பயனுள்ள புத்தகத்தை நாள்தோறும் படியுங்கள். உங்கள் பெற்றோரிடம் அல்லது உடன் பிறப்புக்களிடம் காணும் தவறுகளை அன்பாகச் சுட்டிக் காட்டுங்கள். நீங்கள் தவறு செய்யும் போது, உங்கள் பெற்றோர் உங்களைக் கண்டிப்பதையும் தண்டிப்பதையும் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் மீது உள்ள அக்கறையினால் தான், நீங்கள் வருங்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உங்கள் பெற்றோர் உங்களிடம் கண்டிப்பு காட்டுகின்றனர் என்பதனை உணருங்கள். ஏழைப் பெற்றோரின் துன்ப நிலையை எப்போதும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தொல்லை தராமல் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
"பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்". (சங்கீதம் 127:3)
"பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர்" (சங்கீதம் 8:2)
வெள்ளி, 23 அக்டோபர், 2020
யூகங்கள் பலநேரம் சரியானதை கொல்லும்
இப்படித்தான், பல பொருட்கள், பல கருத்துக்கள், பொதுக் கருத்து என்ற பெயரிலோ, விளம்பரத்தின் மூலமாகவோ சந்தைப்படுத்தப்படுகின்றன. பலவற்றை நாம் யூகங்களின் (Perception) அடிப்படையிலேயே தேர்வு செய்கிறோம் அல்லது பலரை யூகங்களின் அடிப்படையிலே கணிக்கிறோம். இதற்கு, சூழ்நிலை, பிரபலம், கவர்ச்சி, சந்தைப்படுத்துதல், விளம்பரம், பொதுச்சிந்தனை, குருட்டு நம்பிக்கை, வெகுஜன அபிப்பிராயம், வெகுஜன ஊடகம், பரிந்துரை எனப் பல ஊக்கிகள் (Stimuli) காரணமாகின்றன. பெரும்பாலான மக்கள் சுயமாய் சிந்தித்து செயல்படுவதில்லை. செம்மறி ஆட்டுக்கு கூட்டம்போல, ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்து செல்கின்றனர்.
அன்று சாகரடீசின் கொள்கைகளை, இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத இந்த உலகம் இன்று அவர்கள் போதனைகளை தத்துவங்களாக (மட்டுமே) ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று இயேசு கிறிஸ்து உலகில் இருந்தால் யாரும் அண்டாத தனி ஆளாக எங்கோ உலகின் ஒரு மூலையில் தன் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அவரைக் கடவுளாக நினைத்துக் கொண்டாடும் மக்கள் கிறிஸ்துவின் போதனைகளை உறங்கவைத்துவிட்டு, அவர் பெயரில் தங்களை சந்தைப்படுத்தி செல்வம் சேர்க்கும் மனிதர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சிறந்தவைகள் யாவும் தீண்டப்படாது. போலிகள் யாவும் மேடை ஏறும். இது சந்தைப்படுத்தும் உலகம். யூகங்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும். சரியானவை தோற்றுப் போகும்.
"ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்"என்றார். (1 சாமுவேல் 16:7)
"இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்." (உரோமையர் 12:2)
வியாழன், 22 அக்டோபர், 2020
பாவத்தை மறைத்தலா? அறிக்கையிடுதலா?
ஜெப்ரி டமேற், குழந்தை வளர்ப்பில் அவர்களின் பெற்றோர் செய்த பொறுப்பற்ற தன்மையினால் உருவான ஒரு மிகப் பெரிய சைக்கோ கொலையாளி. சிறு வயது முதலே திருட்டு, கேட்ட வார்த்தைகள், பிறரை அடித்து துன்புறுத்துவது, பள்ளி பருவத்திலேயே உடலுறவு கொள்வது, மிருகங்களோடு புணர்வது, அவற்றின் உறுப்புகளை அறுப்பது என வளர்ந்த அவனைப் பெற்றோர் முறையாக தண்டித்து வளர்க்காததனால், குற்ற உணர்ச்சியே இல்லாதவனாக வளர்ந்து தன் 18 வயதில் முதல் கொலையை செய்தான். இப்படி குற்ற உணர்ச்சி இல்லாமல் தடயங்களும் இல்லாமல் பல கொலைகள், கற்பழித்து கொலை செய்தல் என பல குற்றங்களை செய்து கொண்டே சென்றான். கொலைவெறியில் முற்றிப் போன அவனது மனதில், எந்த உளவியல் ஆலோசனைகளோ, அறிவுரைகளோ எடுபடவில்லை. முடிவில் சிறையில் உள்ள சகவாசியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டான்.
ஒரு பாவத்தை மறைத்தல் என்பது பல பாவங்களுக்கு கூட்டி செல்லும் வழியாகும். முதல் பாவத்திலேயே குற்ற உணர்ச்சியோடு, பாவத்தை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டால், அது நம்மை அந்த பாவத்திலிருந்து விடுவிப்பதுமன்றி வேறு பாவத்திற்கும் இட்டுச் செல்லாது. சில வேளைகளில் நமது தவறுகளை நாமே நியாயப்படுத்தி கொள்கிறோம், "இது சின்ன தவறு தானே" "எல்லோரும் செய்வது தானே நானும் செய்தேன்""இது எல்லாம் பாவம் இல்லை" "அவன் அப்படி செய்ததனால் நான் செய்தேன்" என்று. நமது குற்றங்களுக்காக உடனுக்குடன் இறைவனிடம் அவற்றை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்பு கோரினால், நம் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டு, அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ முடியும்.
செவ்வாய், 20 அக்டோபர், 2020
யுத்தம் செய்ய வருகின்றார்! (தமிழ் கவிதை)
யெஹோவா நமக்காய் வழக்காட!
எத்தனை எதிரிகள் வந்தாலும்,
எட்டுத் திசையும் சிதறிடுவர்.
வேலையும் ஈட்டியும் எறிந்திடுவார்.
சொல்லினில் தீக்கனல் பறந்திடும்.
சுற்றிலும் தீயோரை அழித்திடும்.
கடுஞ்சினம் கண்களில் தெரிய,
காடும் மலையும் கருகிடும்.
ஒடுங்கிடும் இந்த வையகம்.
ஓசையுடன் அனல் கக்கும்.
முகில்களைத் திரட்டி வந்திடுவார்.
முனகும் குரலுக்குச் செவிகொடுப்பார்
அகிலம் முழுதும் தீர்ப்பளிக்க,
ஆண்டவர் இதோ எழுந்திடுவார்.
காற்றையும் நீரையும் அழைத்திடுவார்.
கனல் நெருப்பையும் சேர்த்திடுவார்.
ஆற்றையும் அலையும் பெருக்கெடுக்க,
ஆழியில் அதிர்ச்சியை ஆக்கிடுவார்.
தீங்கினைப் பொறுக்கா இறைவனவர்!
தீயினால் பகைவரை அழித்திடுவார்.
ஓங்கிடும் அவர்தம் குரலால்,
ஓங்கிய மரங்களும் வீழ்ந்திடும்.
நீதியும் நியாயமும் நிலைநாட்ட,
நெருப்பாய் அவரும் வந்திடுவார்.
கதியும் நாதியுமற்ற மனிதருக்கு,
களிக்கும் தீர்ப்பை அளித்திடுவார்.
பாவிகள் அனைவரும் அவர்முன்னே,
பதறுகள் போன்றே ஆகிடுவர்.
சாவிலும் கொடிய வருத்தமதை,
சதிகாரர் யாவரும் அடைந்திடுவர்.
காரிருள் உலகினை மறைக்க,
கதிரவன் போல்நீதி எழுந்திடும்.
பேரிடியும் மின்னலும் தாக்கும்,
பொய்மை கயமை தனையே.
பாரினில் பேரமைதி நிலவும்.
பரமனின் மாட்சி விளங்கும்.
நேரிய மனங்களோடு அன்பும்,
நீதியும் ஒன்றாய்த் தழுவும்.
நம்பிக்கைக் குருட்டு மனிதரே!
நாடியே இறைவனை நாடுங்கள்.
தேம்பியே உங்கள் பாவத்திற்காய்,
தேவனின் மன்னிப்பைத் தேடுங்கள்.
திங்கள், 19 அக்டோபர், 2020
மறப்பதா? மன்னிப்பதா? (தமிழ் கவிதை)
எப்படி மன்னிக்க வேண்டும்?
என்று இறைவனிடம் கேட்டேன்.
என்னைப்போல் மன்னித்திடு என்றார்.
நான் சொன்னேன் இறைவா!
நீரோ கடவுள் மன்னிக்க!
நான் மனிதன் அன்றோ !
நாளும் நினைவுகள் நொறுக்க!
மன்னிக்கும் முதல்படி மறப்பது.
மற்றவர் பிழைதனை மறப்பது.
இன்னா செய்தாரை ஒறுக்க,
இனியவை செய்துவிடு என்றார்.
தீமைசெய்த பகைவருக்கு எப்படி
துணிந்து நன்மைகள் செய்வேன்?
இமைமூடும் பொழுதும் அவர்செய்த
இன்னல்கள் எண்ணம் வருமே!
மறக்கும் மனிதர் இயல்பினில்,
மற்றவர் பிழைகள் மறந்துபோகா.
இறக்கும் வரையிலும் ஏனிந்த
இறுக்கம் மனதில் இருக்கும்?
தொலைந்து போவென்று சொல்ல,
தொல்லைகள் இவை இல்லை.
கலைந்துப் போகா வண்ணம்,
குத்திய துரோகச் சின்னங்கள்.
வடுக்கள் வெளியில் தோன்ற,
வேதனை அதிகம் கொண்டேன்
இடுக்கண் நேரும் பொழுதும்,
இவையே வருத்தக் கண்டேன்.
இறைவா! வரமொன்று தாரும்!
இனியவை என்னுள்ளம் சூழ்ந்திட,
கறையாவும் மறைந்திடும் வண்ணம்,
களைகளை மறந்திட வேண்டும்.
கதிர்களோடு சேர்ந்து வளரும்
களைகளை என்னுள் களைந்திடும்!
புதிர்போன்ற எந்தன் வாழ்வில்,
புனிதம் நிறைந்திட வேண்டும்!
மன்னிக்க இயலா நிலையில்,
மறக்க வேண்டும் பகைவரை.
எண்ணிய எண்ணம் யாவிலும்,
எதிர்பார்ப்பு என்பது நீங்கனும்.
தப்பியும் தவறான எண்ணம்
தங்கிட வேண்டா மனதினில்.
சிப்பிக்குள் முத்தாய் உம்நினைவு,
சிந்தையில் இருக்க வேண்டும்!
என்னுள்ளம் உமது சொந்தம்.
ஏற்றிடுவீர் உம்மொளி விளக்கை.
மின்னும் ஒளிச்சுடர் போன்றே,
மனதில் மிளிரனும் அன்புநேசம்.
அகந்தையை ஆணடவர் வெறுப்பார்
அவனை தட்டிக் கேட்க முடியாமல் பலரும் வாய் பொத்தி நின்றனர். பலநாட்கள் இப்படி அவனுடைய கூத்து நடந்தது. ஒருநாள் அது மன்னர் ஜாங் யோங் காதிற்கு எட்டியது. மன்னர் தன் உடைகளைக் களைந்து பாமர உடை அணிந்து, வாங் சுவின் அலுவலகம் சென்றார். ஒரு மனுவை வாங் சுவிடம் நீட்ட, வெளியில் சென்று காத்திருக்குமாறு ஆணை இட்டான். மன்னரும் பவ்வியமாக, வெளியில் சென்றுக் காத்திருந்தார். அதற்குள், மன்னரின் உதவியாளர் ஒருவன் வாங் சுவை சந்திக்க வருவதாக தகவல் கிடைக்க, வாங் சுவும் அவனை வரவேற்க வாசலில் காத்திருந்தான். வந்த மன்னனின் உதவியாளர், வாங் சுவிடம் ஒரு மடலை கொடுத்து விட்டு சென்று விட்டான். அதை விரித்து படித்து பார்த்த வாங் சுவுக்கு அதிர்ச்சியில் உடம்பு வியர்த்தது. அதில், "மன்னர் உங்களை சந்திப்பதற்காக வெகு நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார். நீரும் அவரை அசட்டை செய்து விட்டீர்" என்று எழுதப் பட்டிருந்தது. வாசலுக்கு வெளியே நின்ற எல்லோரையும் நோக்கினான். அங்கு அவர்களில் ஒருவராய் மன்னர் பாமர உடையில் காத்திருந்தார். நேராகச் சென்று மன்னரின் காலடியில் விழுந்து, "மன்னரே! என்னை மன்னியுங்கள். தாங்கள் இப்படி பாமர கோலத்தில் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆதலால் உங்களைக் காத்திருக்க வைத்து விட்டேன். நீங்கள் அழைத்திருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!" என்று கதறினான். மன்னர் அவனிடம் சொன்னார், "அப்படியென்றால் நீ, மன்னர் ஜாங் யோங் என்ற மனிதருக்கும் அவருடைய மாண்பிற்கும் மதிப்பு அளிக்கவில்லை. மாறாக என் அரச உடைக்கும் என் அரச பதவிக்கும் மட்டுமே மதிப்பு அளித்திருக்கிறாய்". பின்பு, மன்னர் அவனுடைய பதவியைப் பறித்து, நூறு கசையடி கொடுக்க ஆணையிட்டார்.
இன்று, மக்கள் பணியில், பொதுச் சேவையில் அரசு மருத்துவ மனைகளில் வேலை செய்யும் சிலர் தங்கள் அதிகாரத் தோரணையில் ஏழைகளிடம், எளிய உடை அணிந்தவர்களிடம் ஒரு விதமாகவும் செல்வர்களிடம், அதிகாரம் மிக்கவர்களிடம் ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகின்றனர். சில அரசு வங்கிகளில் வேலை செய்யும் வயது மூத்த பக்குவப்பட்ட முதிய அலுவலர்களிடம் கூட இந்த நடைமுறைகளைக் காண முடிகிறது. மக்கள் பணிகளை செய்வதற்கே இவர்கள் அரசாங்கத்திடமிருந்து (மக்களிடமிருந்து பெறப்பட்ட) வருமானத்தை வாங்குகின்றனர். அதை செய்வதற்கு ஆணவம், செருக்கு மற்றும் கையூட்டு(அதற்கு உரிய பெயர் திருட்டு, பிச்சை, வழிப்பறி).
"உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்; ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்; அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன்". (எசாயா 13:11)
"இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி." (நீதிமொழிகள் 16:5)
"இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்! ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்! செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!" (1 சாமுவேல் 2:3)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்." என்று வலியுறுத்தி உள்ளார்.
அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். (1 கொரிந்தியர் 13:4-7).
ஞாயிறு, 18 அக்டோபர், 2020
அழிவுக்குக் கொண்டு செல்லும் ஆராய்ச்சிகள்
நாளடைவில் அந்தப் புறாவும் சில முட்டைகளைப் பொறித்து குஞ்சுகளாக்கியது. குஞ்சுகள் சீக்கிரம் வளர்வதற்காக, மருந்துகள் கலந்த உணவைக் கொடுத்தான். சில மடிந்து போயின, சில உடல் ஊனமாயின. பேராசை அந்த மனிதனை இன்னும் விட்டுவைக்கவில்லை. ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்தான். பல்வேறு ஆராய்ச்சிகளை அவன் செய்ததனால், மந்திரப் புறாவும் அதன் குஞ்சுகளும் மடிந்து போயின.
தேவதை என்பது இந்த உலகம் மற்றும் பிரபஞ்சம். மந்திரப் புறா என்பது உலகின் இயற்கை வளங்கள். சாதாரணப் புறா என்பது மனிதனால் செயற்கையாய் உண்டாக்கப்பட்டவை.
நோய்களை ஏற்படுத்த கூடிய நுண்ணுயிர் மற்றும் வேதியியல் காரணிகள் உருவாக்கப்படுகின்றன. முன்னேற்றப்பாதை என்ற பெயரில் அழிவுக்கான பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. மனிதனுக்குத் தேவையானது உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம். ஆனால் இவற்றைத் தவிர்த்து தேவையற்ற பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை இந்த உலகினை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு நானும் நீங்களும் உடந்தையாகின்றோம்.
"ஆண்;டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.
உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே; உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே.
உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை.
உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே; ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.
மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது; தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன." (சீராக் 3:20-24)
சனி, 17 அக்டோபர், 2020
பொறாமை பொல்லாங்கும் செய்யும் (இன்றைய சிந்தனைக்கு)
மார்க் ஒரு நிதி நிறுவனத்தில் காசாளராக பணி புரிபவர். மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு ஒரு நடுத்தரமான சொந்த வீட்டில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் வீட்டின் அருகில் காலியாக இருந்த அந்த வீட்டிற்கு ஒரு குடும்பம் வந்து குடியேறியது. அந்த வீடு ஒரு கார்பொரேட் நிறுவனத்தின் பங்களா. பீட்டர் என்பவர் குடும்பத்தோடு அந்த வீட்டிற்கு குறைவான பொருட்களோடு வந்து இறங்கினார். பீட்டர் அந்த கார்பொரேட் நிறுவனத்திற்கு அந்த ஊரின் புதிய கிளைக்கு மேலாளராக பணி மாற்றம் செய்யப் பட்டிருந்தார். மார்க்கை விட பீட்டருக்கு சற்று சம்பளம் அதிகம். ஒருவரை ஒருவர் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். மார்க்கும் பீட்டரும் ஒரே கல்வி தகுதி என்றாலும் மார்க்கை விட பீட்டர் பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் கூடுதல் வருமானத்தில் இருந்தது மாற்குவிற்கு சற்று பொறாமையை உண்டு பண்ணியது. இதை விட கூடுதலாக தாழ்வு மனப்பான்மை உண்டாகியது. எனவே பீட்டருக்கு முன்னால், தன்னை உயர்த்தி காட்டி கொள்ள விரும்பினார். ஒவ்வொரு நாளும் பீட்டர் வீட்டுக்கு புதிது புதிதாக வீட்டு தளவாடங்கள், அடுப்பறை உபகரணங்கள், வீட்டு உபயோக, மின்சாதனங்கள், மின்னணு சாதனங்கள் என்று வந்து இறங்கின. இதைப் பார்த்த மாற்குவின் மனதில் போட்டி மனப்பான்மை உருவாகியது. மார்க்கும் புதிது புதிதாக சாமான்களை கடனில் வாங்கி வீட்டில் குவித்தார். கடன் சுமை அதிகமாக வட்டிக்கே, வருமானத்தில் பெரும் பங்கு போனது. குடும்பத்தின் அத்தியாவசிய தேவையின் அளவைக் குறைத்துக் கொண்டார். சில நேரங்களில் பணத்தேவை அதிகரிக்க, அலுவலக பணத்திலிருந்து சிறிது சிறிதாக கையாடல் செய்ய ஆரம்பித்தார். ஒரு ஆண்டு கழித்து, அவர் அலுவலகத்தில் நடந்த தணிக்கையில் மார்க் கையாடல் செய்தது அம்பலம் ஆனது. அவரின் குடும்ப சூழ்நிலை கருதி நிறுவனமும் மன்னித்து எடுத்த பணத்தை விரைவில் கட்டிவிடுமாறு சொல்லி எச்சரித்து வேலையில் வைத்துக் கொண்டது. புதிதாக வாங்கிய பொருட்களை எல்லாம் அதை விட குறைந்த விலைக்கு விற்று அலுவலகத்தில் பணத்தைக் கட்டினார். கடன் சுமையில் சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை. திடீரென்று இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள், பீட்டர் பணி மாறுதல் காரணமாக குடும்பத்தோடு வெளியூர் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். முதல் நாள் அவர் கொண்டு வந்த சாமான்கள் மட்டுமே வண்டியில் ஏற்றப்பட்டன. என்னவென்று மார்க் சென்று விசாரிக்க, புதிது புதிதாக இறங்கிய சாமான்கள் அனைத்தும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும் அடுத்து வரும் மேலாளருக்கு விட்டு செல்ல வேண்டும் எனத் தெரிந்து கொண்டார். பொறாமையிலும் போட்டி மனப்பான்மையிலும் தான் செய்த தவறை எண்ணி நோவதைத் தவிர மார்க்குக்கு வழியில்லை.
"சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?". (நீதிமொழிகள் 27:4)
"ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு. (நீதிமொழிகள் 13:7)
விடியும் வரைக் காத்திருப்போம் (தமிழ் கவிதை)
விடியல் நிச்சயம் இருக்கும்
கூடிடும் இருளையும் தாண்டி
குதித்துவரும் விடியல் நமக்காய்
உழைத்துக் களைத்தோம் நாமும்
உரிமையை இழந்து தவித்தோம்
பிழைத்துப் போகும் வாழ்வில்
பிணைகள் இருக்கக் கண்டோம்
சவால்கள் பலவும் நம்மிடம்
சாதனை ஆக்கும் வழியுண்டு
அவாள்கள் ஆயிரம் கெடுத்தும்
ஆதவனைப் போல் எழுவோம்
நீதியைக் கொல்வோர் முன்னால்
நியாயம் என்றும் எடுபடுவதில்லை
சதியால் ஒடுக்கிடும் சண்டாளர்
சடையைப் பிடித்து உலுக்கணும்
விடியல் நமக்கும் உண்டு
வீணர்கள் ஓயும் காலத்தில்
ஆடிய ஆட்டங்கள் யாவும்
ஆண்டவனால் அடங்கிப் போகும்
காத்திருப்போம் காலம் கனியும்வரை
காப்பவரின் கருணை நோக்கியே
ஆத்திரத்தை அடக்கியே சுயத்தை
ஆண்டிட வேண்டுவோம் முதலில்
நிச்சயம் நிம்மதி கிடைக்கும்
நீதியும் நியாயமும் தழைக்கும்
அச்சப்படத் தேவையன்று நமக்கு
ஆண்டவர் துணையுண்டு என்றும்
ஒடுக்குவோரைக் கண்டு நாமும்
ஓடியோடிக் கலைத்தது போதும்
மிடுக்குடன் அவரை எதிர்கொள்ள
மீட்பரின் பெருந்துணை உதவிடும்
சோர்ந்திட வேண்டா சோதனையில்
சளைத்திட வேண்டா வேதனையில்
தேர்ந்தவர் நம்மைக் காண்கையில்
தேவையில்லாக் கவலை எதற்கு?
துன்பம் ஒருகாலம் உண்டெனில்
துள்ளிக் குதிக்கும் காலமுமுண்டு
இன்பம் நமக்குக் கொடுக்கையில்
இறைவனைத் தடுக்க எவருண்டு?
ஆண்டுகள் பலவும் கடந்தாலும்
ஆண்டவரில் நம்பிக்கை நமக்குண்டு
மீண்டெழும் காலம் வரையிலும்
மீட்புக்காக காத்து இருப்போம்
நீதியின் கதிரவன் நம்மீது
நிலைத்து ஒளிவீசச் செய்வார்
விதியென்று எதுவும் இல்லை
விடியலைத் தேடிக் காத்திருப்போம்
வெள்ளி, 16 அக்டோபர், 2020
வழி தவறிய ஆடு.... (தமிழ் கவிதை)
மேய்ப்பவர் இறைவன் தாம்
சிந்தையாய் கண்ணும் கருத்துமாய்
சீரியவழி அவர் நடத்திட்டார்
பச்சைப் புல்வெளி தனிலே
பசியை எனக்கு ஆற்றிட்டார்
மூச்சை இட்டு இளைப்பாற
மேய்ச்சல் நிலம் மேய்த்திட்டார்
தாகம் எனக்கு தீர்த்திடவே
தண்ணீர் அருவி அழைத்திட்டார்
அகம் என்னில் குளிர்வுறவே
ஆறுதல் எனக்குத் தந்திட்டார்
அச்சம்சூழ் இருண்ட பள்ளத்தாக்கில்
அழைத்து எம்மை சென்றிட்டார்
அச்சம் கொள்ளோம் அவரிருக்க
அவரின் கோல்கம்பு துணையிருக்க
நேர்வழி எம்மை நடத்தும்போது
நோக்கிட்டேன் பிறிதொரு வழியை
ஆர்வத்தில் ஓடுனேன் ஆங்கே
ஆசைகள் தீர்க்கும் வழியென
ஐயகோ! தவறிநான் வந்திட்டேன்
ஐயமும் அச்சமும் சூழகண்டேன்
தீயஓநாய் கூட்டம் என்னைத்
துரத்தி வேட்டையாட வந்தனவே.
மெய்நடுங்கி மனம் ஒடுங்கி
மேய்ப்பனை நோக்கி கதறினேன்
மேய்ப்பன் எந்தன் குரல்கேட்டார்
மேய்ப்பன் குரலை நான்கேட்டேன்
நம்பிக்கை என்னுள் பிறந்தது
நாடித்தேடி அவரிடம் ஓடினேன்
தேம்பி தேம்பி அழுகையிலே
தேறுதல் எனக்குத் தந்திட்டார்
அன்பில் என்னை அரவணைத்தார்
ஆதரவாய் தோளில் சுமந்தார்
இன்பமாய் அவர் அருகிலிருப்பேன்
இனியென்றும் விலகிடேன் அவரை
வியாழன், 15 அக்டோபர், 2020
தவறான புரிதலா? புரிதலில் தவறா? (இன்றைய சிந்தனைக்கு)
புரிந்து கொள்ளுதல் மூன்று வகையிலானது.
முதல் வகைப் புரிதல் என்பது, தன் நிலையிலிருந்து தன் உணர்வுகளின் அல்லது தனது அபிப்ராயத்தை ஒட்டிப் பிறரைப் புரிந்து கொள்வது.
இதில் பலர் தவறு செய்வார்கள். ஒன்று தவறாகப் புரிந்து கொள்ளுதல் (misunderstanding) அல்லது புரிதலில் தவறுதல் (missing of understanding)
இரண்டாவது வகைப் புரிதல் என்பது அடுத்தவரின் நிலையிலிருந்து, அவர்களின் உணர்வுகளின் அல்லது அபிப்ராயத்தை ஒட்டிப் பிறரைப் புரிந்து கொள்வது.
மூன்றாவது, ஆங்கிலத்தில் HALO EFFECT என்பார்கள். அதாவது, ஒருவரின் ஒரே ஒரு குணத்தின் அடிப்படையிலோ அல்லது சந்தர்ப்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்வின் அடிப்படையிலோ வைத்து ஒருவரைப் புரிந்து கொள்ளுதல். இது மிக மிகத் தவறான ஒரு அணுகுமுறை.
புரிதல் தவறுகளில் (Missing of Understanding), அகங்காரம்(Ego), உயர்வு மனப்பான்மை (Superiority Complex), மூன்றாம் நபர்களின் புறணிகள், தூண்டுதல்கள் (Gossips and Ignition or inducing), அலை பாயும் எண்ணம் (Look for better) காரணிகளாக அமைகின்றன.
"இதற்குக் காரணம் யாது?” என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே; உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.
உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால் எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.
ஏனெனில், “மணமுறிவை நான் வெறுக்கிறேன்” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். “மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள். (மலாக்கி 13 : 16 )
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
ஆபத்து வீட்டின் கதவை தட்டும் வரை (இன்றைய சிந்தனைக்கு)
பலர் இன்று தங்கள் ஆடம்பர மோகத்தில் களித்து, இறைவனை மறந்து வாழ்கின்றனர். தெய்வ பயமின்றி "வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதற்கே" என்ற நோக்கோடு எல்லை மீறிச் செல்கின்றனர். இறைவனைப் பற்றிய நினைவுகள் அவர்கள் வீட்டில் இருப்பதில்லை, ஆபத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டும் வரை.
"ஆண்டவரின் தீர்ப்பு வருமுன் உன்னையே ஆராய்ந்து பார்; கடவுள் சந்திக்க வரும் நாளில் நீ மன்னிப்பு பெறுவாய். நோய்வாய்ப்படுமுன் உன்னையே தாழ்த்திடு; பாவம் செய்தபின் மனந்திரும்பு. நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில் செலுத்த எதுவும் தடையாய் இருக்க வேண்டாம்; அதை நிறைவேற்ற இறக்கும்வரையில் நீ காத்திருக்கவேண்டாம். நேர்ச்சை செய்யுமுன் அதைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்துகொள்; இதில் ஆண்டவரைச் சோதிப்பவனாய் இருந்துவிடாதே. இறுதி நாளில் வரவிருக்கும் அவரது சீற்றத்தை நினைவில் கொள்; அவர் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு பழிவாங்கும் நேரத்தையும் எண்ணிப்பார். நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார். காலை தொடங்கி மாலைக்குள் காலங்கள் மாறுகின்றன; ஆண்டவர் திருமுன் அனைத்தும் விரைகின்றன". (சீராக் 18 : 20 - 26 )
புதன், 14 அக்டோபர், 2020
தென்றலின் பயணம் (தமிழ் கவிதை)
தென்றல் அமைதியின் அடையாளம்
தென்றல் ஆறுதலின் அடையாளம்
தென்றல் ஆனந்தத்தின் அடையாளம்
தென்றல் தெய்வீகத்தின் அடையாளம்
தென்றல் தேற்றுதலின் அடையாளம்
தென்றல் குளிர்ச்சியின் அடையாளம்
தென்றல் தாழ்ச்சியின் அடையாளம்
தென்றல் இனிமையின் அடையாளம்
தென்றல் இளமையின் அடையாளம்
தென்றல் இறைசந்நிதி அடையாளம்
தென்றல் இரக்கத்தின் அடையாளம்
தென்றல் உணர்வின் அடையாளம்
தென்றல் ஊக்கத்தின் அடையாளம்
தென்றல் மணத்தின் அடையாளம்
தென்றல் குணத்தின் அடையாளம்
காற்றிலே பிறந்து அடர்ந்த
காட்டிலே வளர்ந்து மரங்களின்
கீற்றினில் தவழ்ந்து மெல்லிய
கிளைகளில் அசைந்து வரும்
நறுமண மலர்களில் தழுவி
நலந்தரு செடியினில் அருகி
குருமலை இடையினில் கடந்து
குளிரருவியில் குளித்து வரும்
மாலையின் மங்கிய பொழுதில்
மயக்கும் நிலவின் ஒளியில்
அலையின் மெல்லிய தாலாட்டில்
அசைந்து வரும் தென்றல்
மழையின் சாரல் நனைந்து
மரங்களின் விரல்கள் அசைத்து
ஏழையின் வியர்வையில் ஊர்ந்து
எளிமையாய் வந்திடும் தென்றல்
ஆள்பவன் முதல் ஆண்டிவரை
அனைவரையும் தழுவிக் கொள்ளும்
உள்ளம் கொள்ளை கொள்ள
உடலை வருடி வரும்
அதன் இனிமையில் மெய்சிலிர்க்கும்
அதன் குளுமையை மனங்குளிரும்
பேதமில்லாது யாவினிலும் அன்பினை
பொழிந்து வரும் தென்றல்
இறைவனின் அருட்கொடை தென்றல்
இயற்கையின் குழந்தை அதுவும்
இறைவனின் பிரசன்னம் நமக்கு
இனியத் தென்றலின் வடிவாகும்
தென்றலைப் போன்றே நாமும்
தேடிச்சென்று அன்பைப் பகிர்வோம்
இன்முகம் காட்டி யாரிடமும்
இனிய உறவை வளர்ப்போம்.
யாவும் நல்லன, மனிதனை தவிர (இன்றைய சிந்தனைக்கு)
கடவுள் தான் படைத்த யாவற்றையும் நல்லது எனக் கண்டார்.
(தொடக்கநூல் 1 : 1 - 25 ) மனிதனை படைக்கும் வரை.....
ஆம், இந்த உலகில் ஆராய்ச்சி என்ற பெயரில், தொழில் நுட்பம் என்ற பெயரில், வளர்ச்சி என்ற பெயரில், பாதுகாப்பு என்ற பெயரில், விஞ்ஞானம் என்ற பெயரில், பொருளாதாரம் என்ற பெயரில், மதவாதம் என்ற பெயரில், இனவாதம் என்ற பெயரில், தீவிரவாதம் என்ற பெயரில் மிகப்பெரிய அழிவு சக்தியாக இருக்கின்றான். இன்று உலகில் இருக்கும் அணு ஆயுதங்களும், வேதியியல் ஆயுதங்களும், உயிரியல் ஆயுதங்களும் மற்றும் பிற சூழல் மாசுபாடுகளும் இந்த உலகத்தை நூற்றுக்கும் மேல் தடவைகள் அழிக்கும் திறன் படைத்தவை. அவற்றை உண்டாக்கிய அந்த மிகப்பெரிய அழிவு சக்தி மனிதன் மனிதன் மட்டுமே. இதில், நான் மனிதனாய் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.
கடவுள் படைத்தவற்றில் யாவும்
நானொரு நாடோடி மனிதன் (தமிழ் கவிதை )
நிரந்தர வசிப்பிடம் எனக்கில்லை
இன்னொரு இடம் என்றாலும்
இறைவன் தந்தால் அங்கிருப்பேன்
பாலையோ சோலையோ கவலையில்லை
பரமனின் துணை எங்குமுண்டு
காலையோ மாலையோ எப்போதும்
காண்பவர் எந்தன் அருகிலுண்டு
தூரம்பல கடந்து வந்தேன்
துயரம் என்னை ஆழ்த்தவில்லை
பாரம்பல சுமந்தாலும் எந்தன்
பாரத்தையும் சுமப்பவர் இறைவன்
பாதையில் கற்களும் முட்களும்
பரவிதான் கிடந்தாலும் எந்தன்
பாதம் சேதம் அடையாது
பாதுகாப்பவர் இறைவன் அன்றோ!
வானம்பாடி பறவையைப் போன்றே
வானில் பறக்க ஆசிக்கிறேன்
கானம்பாடி இறைவன் புகழை
காற்றில் ஒலிக்க யாசிக்கிறேன்
நானொரு நாடோடி மனிதன்
நாள்தோறும் பயணம் கண்டேன்
ஏனொரு மனிதனாய் பிறந்தேன்?
என்னும் ஏக்கம் கொண்டேன்.
காலையில் மலரும் மலர்போல
காட்சிக்கு எழிலாய் ஆசிக்கிறேன்
மாலையில் தொடுத்து உந்தன்
மலரடி கிடைக்க யாசிக்கிறேன்
நானொரு நாடோடி மனிதன்
நடந்துக் களைத்து சோர்வுற்றேன்
தானொரு பிறவி உண்டெனில்
தருவாய் இருக்க ஆசிக்கிறேன்
கிளைகள் பரப்பி இருக்கணும்
கனிகள் நிறைந்து கிடைக்கணும்
களைத்துப் போன உயிர்களுக்கு
கனிந்த புகலிடம் கொடுக்கணும்
என்னுள் ஆயிரம் ஏக்கங்கள்
எழுத்தில் வடிக்க இயலாது
சின்னதாய் சிறகுகள் இருப்பினும்
சிட்டுக்குருவி போல பறக்கணும்
நானொரு நாடோடி மனிதன்
நாட்டுவேன் எந்தன் கூடாரத்தை
பின்னொரு கட்டளை என்றால்
பின்பற்றிச் செல்வேன் இறைவனை
குறைகள் ஒன்றும் எனக்கில்லை
குசலம் இறைவன் பேணும்போது
பறைகள் தட்டி முழங்கிடுவேன்
பாறையாம் மீட்பருக்கு நன்றியினை
ஆயினும் ஆசைகள் அதிகமுண்டு
அதில் ஆகாய விண்மீனுண்டு
கையினில் எட்டா வானத்தில்
கண்சிமிட்டி மின்ன வேண்டும்
படர்ந்திடும் கொடிபோல் உம்மை
பற்றிப்பிடிக்க ஏக்கம் உண்டு
தொடர்ந்திடும் நிழல் போன்றே
தொட்டுப் பின்வர ஆசையுண்டு
மழைதரும் மேகம் போன்றே
மண்ணின் தாகம் தீர்க்கணும்
தழைத்திடும் தளிர் போலவும்
தானியம் கொடுக்கவும் ஆசை
நானொரு நாடோடி மனிதன்
நாழிகை நானும் அறியேன்
மானொடு கால்கள் இருப்பின்
மாநிலம் சுற்றித் திரிவேன்
மகரந்தம் சேர்க்கும் தேனியாய்
மண்டாது ஊறும் கேணியாய்
சிகரத்தை மூடும் பனியாய்
சீராய் பணிசெய்ய வேண்டும்
நானொரு நாடோடி மனிதன்
நாடுவேன் இறைவனைத் தாமே
தேனொழுகும் அவரின் வார்த்தை
தெவிட்டாது உண்ண ஆசிக்கிறேன்

வெள்ளி, 9 அக்டோபர், 2020
காலத்திற் செய்வார் கடவுள் (தமிழ் கவிதை)
திறக்க இல்லை ஒருவரும்
ஆட்டினேன் தலையை பிறர்க்கு
ஆனது இல்லை ஒன்றும்
நாடினேன் மனிதர் பலரை
நியாயமும் கிடைக்க வில்லை
ஓடினேன் பலருக்காய் வீணில்
ஓய்ந்தது என்னுடல் மட்டுமே
சுயபுத்தி திறனென்றே என்னில்
சூழவும் செருக்கு கொண்டேன்
இயலாமை தனையும் குறையென்று
இணங்க மனம் விரும்பவில்லை
பட்டபின், யாவும் விட்டபின்
புரிந்தேன் இறைவனே எல்லாமென்று!
ஆட்டமிட்ட வாழ்க்கை யாதும்
அடங்கிடுமே ஒருநாள் என்றே
வாழ்க்கைக் கொடுத்ததும் இறைவன்
வாழ வைப்பதும் இறைவனே
ஊழ்வினை அகற்றி நம்மை
உயிர்பெறச் செய்வதும் இறைவனே
எல்லாம் என்னால் என்று
ஏற்றிய நாட்களும் உண்டு
இல்லாமை நானென்று உணர்ந்து
இறைவனை அறிந்தேன் எல்லாமென்று
காலம் எனக்குக் கற்பித்தது
கடந்துப் போகும் யாவையுமே
கோலம் மனிதர் போடும்
கூத்தாடும் வெளி வேடம்
ஜனனம் முதல் மரணம்வரை
ஜீவனும் இறைவன் சொந்தம்
தானமும் வாழ்வு முழுதும்
தந்தவர் இறைவன் தாமே
நானென்றே பிறரென்றே வாழ்வின்
நாள்முழுதும் தொலைத்து நின்றேன்
தேனென்ற வார்த்தை பலவும்
தேடிநான் அலைந்து நின்றேன்
காலம் எனக்குப் போதித்தது
கடவுள் மட்டுமே எல்லாமென்று
கலம் இக்காலம் வேண்டிய
கரையை அடைதலை உணர்ந்தது
எத்தனை நாட்களும் ஆண்டுமாய்
எட்டவில்லை சிந்தனை யாதும்
இத்தனை நன்மைகள் எனக்கு
இறைவன் தாமே ஈன்றாரென்று
கழித்தேன் நாட்கள் பலவும்
களித்தேன் வீண் வாதத்தில்
அழித்தேன் வாய்ப்பு அனைத்தும்
ஆண்டவர் புகழைப் பாடிட
கடந்தபின் உணர்ந்தேன் எனினும்
கடவுளின் சித்தம் இதுவும்.
தொடர்ந்தே அந்நிலை கொள்ளாது
தொலைத்து விட்டேன் பழமைதனை
தெளிந்தேன் இப்பொழுது நானும்
தேடியோடி இறைவனை அடைய
ஒளிந்தேன் பாவச்சூழ் நிலைநின்று
ஒளிமிகு இறைமுன் நிலைநின்று
எதிரிகள் என்முன் நிற்பதில்லை
ஏனெனில் இறைவன் என்முன்னே
பதறியோடும் பதறுகள் யாவும்
பரமனின் தீர்ப்பின் முன்னே
வியாழன், 8 அக்டோபர், 2020
உடலே இசைக் கருவியாய்....... (தமிழ் கவிதை)
சங்கீத மொழியால் பாட்டிசைப்பேன்
இசையால் உம்புகழ் இசைப்பேன்
இறைவா! என்னுடலே கருவியாய்
அசையும் கைகள் தட்டியே
அழகிய மெட்டு இசைப்பேன்
சிரமே அசைத்து உந்தன்
சீர்புகழ் எடுத்து உரைப்பேன்
சுரமே எந்தன் மொழியாக
சுவையோடு வாய் மொழிவேன்
விழிகளின் நர்த்தனம் தான்
வீணையின் நாதம் போலாகும்
தாழிடும் இதழ்களின் ஓசையும்
தாளமாய் உம்மைப் போற்றும்
மூச்சிடும் நாசியின் ஒலியும்
மூங்கிலின் குழலோசை ஒலிக்கும்
பேச்சுறும் நாவின் நடனம்
பேரருளாளன் பெருமை இயற்றும்
குருதியின் ஓட்டம் உயிரின்
குரலாய் கானம் பாடிடும்
சுருதியுடன் நரம்பும் நிந்தன்
சூட்டும் புகழ் மீட்டிடுமே
தாங்கிடும் எலும்புகள் யாவும்
தம்புரு என்றே ஆகிடுமே
ஓங்கிடும் இதயத் துடிப்பும்
ஓசையிடும் தாளம் ஆகிடுமே
மூளையின் கட்டளை யாவும்
மேளதாள முழக்கம் ஆகுமே
சளைத்திடா எந்தன் மூச்சும்
சரணம் தொடுத்து இசைத்திடுமே
மறைக்கும் தோலும் தசையும்
மத்தளம் கொட்டி மகிழ்ந்திடுமே
அரைக்கும் பற்களும் பல்லவியாய்
அரும்புகழ் நாளும் பாடிடுமே
நடக்கும் கால்களின் அசைவும்
நர்த்தனம் செய்து நயந்திடுமே
அடங்கும் உள்ளவயம் யாவும்
யாழாய் மீட்டி ஒலித்திடுமே
சுதியும் லயமும் போன்றே
சுரமாய் உடலும் உயிருமிருக்க
மதியும் பாக்கள் படைத்திடுமே
மகிபன் திருநாமம் போற்றியே
செவ்வாய், 6 அக்டோபர், 2020
கவலை வேண்டாம் மனங்களே (தமிழ் கவிதை)
நேசிக்க ஒருவர் உண்டு
தேறுதல் தேடும் மனமே!
தேவன் உந்தன் அருகிலுண்டு
வாடும் இதயங்களே உங்கள்
வலியைப் போக்குவார் அவரே
தேடும் அமைதியை நாளும்
தேவன் தந்திடுவார் தயவாய்
உடைந்த உள்ளங்களே இறைவன்
உங்களை மிகுந்தே அறிவார்
படைத்த இறைவன் உம்மேல்
பரிவு காட்டா திருப்பாரோ?
பாரம்தாளா பெருஞ் சுமையால்
பரிதவிக்கும் மனங்களே நீங்கள்
பரமன் பாதம் இறக்கியே
பளுவின்றி சுகமாய் இளைப்பாறுவீர்
வேதனை நிறைந்த ஆன்மாவே
வெறுமையாய் நீயும் அமைந்திரு
சோதனை என்றே வந்தாலும்
சார்ந்திரு இறைவன் துணையிலே
"தொலைந்தது எனது வாழ்க்கை
தோல்வி நான்பல கண்டேன்" - என
கலைந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும்
கடவுளின் பாதம் சரணடைவீர்
வருந்திடும் உள்ளங்கள் யாவும்
வந்திட வேண்டும் இறைவனிடம்
பெருந்துணை அவரிடம் உண்டு
பெருந்துயர் எனினும் போக்கிடுவார்
பெருங்கடல் அடித்தளம் நடுங்கினாலும்
பேரிடி மின்னல் சூழ்ந்தாலும்
பெருங்குன்றும் நிலமும் அதிர்ந்தாலும்
பேணிக் காப்பவர் இறைவனே
கடலின் அலைகள் பொங்கினாலும்
கடும் வெள்ளம் பாய்ந்தாலும்
உடலின் வாதைஉறு தந்தாலும்
உரியவர் உற்றவேளை உதவிடுவார்
கவலை வேண்டாம் மனங்களே
காக்கும் இறைவன் காண்கின்றார்
குவலயம் நோக்கும் கடவுள் - உம்
குறைகளைத் தீர்க்க மாட்டாரோ?
வியாழன், 1 அக்டோபர், 2020
மன்னிக்க வரம்தாரும் இறைவா! (தமிழ் கவிதை)
மற்றவர் பிழைப் பொறுத்து
மன்னிக்க வரம்தாரும் இறைவா !
மனமுவந்து குறை மறந்து
மன்னிக்க வரம்தாரும் இறைவா !
மகிழ்வுடன் பகைவரை ஏற்க
அருள்கூர்ந்து எம்பிழை நீரும்
அயராமல் மன்னிப்பது போல்
பெருமனதாய் பிறர் குற்றம்
பொறுத்துவிட வரம் தாரும்
வருத்தி என்னை ஒடுக்கினோரை
வஞ்சம் வைத்து நினையாமல்
கருத்தில் பகையென யாவும்
கொள்ளாது மன்னிக்க வரம்தாரும்
என்னுடைமை பறித்தோரை செருவில்
ஏளனம் என்னைச் செய்தோரை
இன்னா எனக்குச் செய்தவரை
இனிதாய் மன்னிக்க வரம்தாரும்
துரத்தி என்னை வெறுத்தோரை
குரோதம் என்னில் கொண்டோரை
குணமாய் மன்னிக்க வரம்தாரும்
அன்புக்கு மாற்றாய் பகைப்போரை
ஆணவத்தில் என்னைப் பழித்தோரை
பின்புறம் வசைகள் பாடுவோரை
பண்பாய் மன்னிக்க வரம்தாரும்
தாழ்நிலை என்னில் விரும்புவோரை
தாழ்த்தி என்னை அடக்கினோரை
சூழ்நிலை கொண்டு இகழ்ந்தோரை
சுயமாய் மன்னிக்க வரம்தாரும்
இறைவார்த்தை எடுத்து உரைக்க
இகழ்ந்து என்னை விலக்கினோரை
கறைகள் மனத்தில் விதைத்தோரை
கனிவாய் மன்னிக்க வரம்தாரும்
மன்னிக்க வரம்தாரும் இறைவா! - எனை
மன்னித்து வரம்தாரும் இறைவா!
புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)
வல்லோன் கைவினை யாதும் மாசின்றி எல்லோர் நயம் படும் பொருள்: எல்லாம் வல்லவனாகிய இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...
-
சீயோனின் மீட்பு விளக்கின் சுடரெனவும் அதன் வெற்றி வெய்யோன் விடியல் ஒளியெனவும் வெளிப்படும் வரையில் வாளாவிறேன் வேற்றினம் உ...
-
மாந்தருள் சாதியைப் பேணும் கயவர் மதம்பிடிக் களிறினும் கேடு பொருள்: மனிதர்களுள் சாதியை சாதி வேற்றுமையைக் கடைபிடிக்கும் கயவர்கள் மதம் பிட...
-
ஏற்கனவே நான் முதல் பாகத்தில் சொன்னபடி , கி.மு. 1178 முதல் கி.மு. 650 வரை மத்திய ஆசியாவில் இருந்து கால்நடைகளோடு சிந்து சமவெளி பகுதியில் ...





















