சீயோனின் மீட்பு விளக்கின்
சுடரெனவும் அதன் வெற்றி
வெய்யோன் விடியல் ஒளியெனவும்
வெளிப்படும் வரையில் வாளாவிறேன்
சுடரெனவும் அதன் வெற்றி
வெய்யோன் விடியல் ஒளியெனவும்
வெளிப்படும் வரையில் வாளாவிறேன்
வேற்றினம் உன்வெற்றி காணும்
வேந்தரும் உன்மாட்சி காண்பர்
மாற்றொரு பெயரினை உனக்கு
மாட்சிமிகு இறைவன் சூட்டிடுவார்
மீட்பரின் கைதனில் நீஅழகிய
மணிமுடி அரசமகுட மாவாய்
விட்டுவிலக்க பட்டவள் என்றோ
வீண்பட்டது என்றோ அழைக்கப்படாய்
உன்கடவுள் உன்னில் மகிழ்வார்
உன்மதில் மேல்காவலர் நிற்பர்
என்றும் இராப்பகலாய் அவர்கள்
எக்காளம் சத்தம் ஒலிப்பர்.
ஆண்டவருக்கு நினைப்பு ஊட்டுவோரே
அமைதியாய் ஒருபொழுதும் இராதீர்
மாண்புமிகு அவர்புகழ் உலகினை
மூடும்வரை அவரை ஓயவிடாதீர்.
ஆண்டவர்தம் வலக்கையின் மேலும்
ஆற்றல்மிகு தன்புயத்தின் மீதும்
ஆணையிட்டார் - இனிஉன் உழைப்பை
அந்நியர் பகைவருக்கு கொடேன்
அறுவடை செய்தவரே அதனையுண்டு
ஆண்டவரை போற்றிப் பாடுவர்
ஆறுதலை அவர்கள் பெற்று
அவர்முன் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பர்
செல்வோம் வாயில்வழிச் செல்வோம்
சீராக நெடுஞ்சாலை அமைப்போம்
நல்லோர் வந்திடும் பாதையில்
நச்சுமுள் கல்லும் அகற்றிடுவோம்
பாருங்கள்! நம்மீட்பு வருகின்றது
படைத்தவர் வெற்றிப் பரிசினை
இருளில் கிடக்கும் நமக்கு
இனிதாய் கொடுக்க வருகின்றார்
இனிநாம் கடவுளால் மீட்கப்பட்டோர்
இறைவனின் புனித மக்களினம்
கனிவாய் கண்டெடுக்கப் பட்டவனென
கடவுளால் பெயர் பெறுவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக