ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

உலகம் ஒரு பொதுவுடைமை (தமிழ் கவிதை)

உலகம்   பெரியக்     குடும்பம்   -  அதில்
     உயிர்கள்   யாவும்   அங்கம்
இலக்கம்   மிகுதி   எனினும்
     இறைவனே  பேணிக்   காக்கிறவர்

குடும்பத்    தலைவன்  இறைவன்
     குறை   யொன்றும்  காணோம்
வாடும்   உயிர்களுக்கு  உணவினை
     வாரி     வழங்குபவர்   அவர்

இயற்கை    இவ்வீட்டின்   அலங்காரம்
      இறைவனே   உலகை  அலங்கரித்தார்
இயற்கை    யில்லா    இவ்வுலகம்
      இன்னுயிர்   இழந்த   உடலாகும்

உலகம்    மனிதர்     உடைமையன்று
     உயிர்கள்    யாவுக்கும்  பொதுவுடைமை
கலகம்    செய்யும்    மனிதரே
     காட்டினை    அழிப்பது   முறையோ?

உயிர்கள்    ஒவ்வொன்றும்  உறைந்திட
      உறைவிடம்   அமைத்தார்  இறைவன்
ஆயினும்     உங்கள்    பேராசையில்
      அவற்றின்   உறைவிடம்  சிதைக்கின்றீர்

காட்டினை    அழித்தால்   விலங்குகள்
      காணும்     புகலிடம்    எங்கே ?
நாட்டினை      நாடிஅவை   வரும்
      நாசமாகும்    சூழல்    எல்லாம்

மனிதரே!     உணர்வுக்   கொள்வீர்
      மற்றவரும்   வாழ    வேண்டும்
தனியாய்      நீவிர்     வாழ்வதற்கு
      தந்ததில்லை   உலகின்  வளமை

அவசியத்தின்     தேவையை   அழித்து
      ஆடம்பரம்    தேடுவது     ஏனோ ?
விவசாயத்தின்    நிலங்களை   அழித்து
       வியாபாரம்    செய்வதும்   ஏனோ?

சுத்தநீர்      சுகாதாரக்    காற்று
     சுற்றுச்சூழல்    யாவர்தம்    உரிமை
பித்துபிடித்து   பேராசையில்   மற்றவர்
     பிறப்புரிமை    நீர்ஏன்   மறுக்கின்றீர்?

இறைவன்    நம்தந்தை   யானால்
     இன்னுமேன்   பிரிவினை   நமக்குள்
கறைபடிந்த    சுயநலம்    எல்லாம்
     கெட்டழித்தது    சமத்துவம்  தன்னை

மனிதரே!    இறைவனின்   உடைமையிது
      மயங்காதீர்    உங்கள்    உடைமையென
இனியிதனை    இறைவனும்   பொறுத்திடார்
      இருக்கும்       உரிமை      அறுத்திடுவார்

காலம்   பலவும்     பாடங்களே 
     கண்டீர்   அதனில்  அனுபவங்களை
புலம்மீறி     நீவிர்நெறி  பிறழ்ந்தால்
     புவியும்   பொறுமை   இழந்திடும்

கண்ணில்    காணும்    சுகங்களை
     கடமையின்றி   களிக்க  ஆசித்தால்
கண்ணில்   தெரியாக்   காரணியால்
     காண்பீர்    உங்கள்   முடிவினையே

பசித்தவர்     வயிறு    வறண்டிருக்க
      பகட்டில்    பெருமை   அடைவதேன்?
பசித்தவர்      யாரும்    புசிக்கும்படி
      பகிர்ந்து    அளித்து    பெருமைப்படு

செல்வமும்    உன்னிடம்   விலகிடும்
      செருக்கு    யாவும்    தொலைந்திடும்
செல்லுமிடம்   முடிவில்    சவக்குழி
       சேர்ந்(த்)தவை    உன்னுடன்   வந்திடுமோ?

காண்பவை       கண்டுக்     களித்தபின்
      காணாதிருப்பாய்    நாள்   ஒன்றில்
ஆண்டவை     எல்லாம்    யாருக்கோ
      அடங்கிடும்    உன்ஆவி    பிரிந்தபின்

சுயநலமாய்     உந்தன்    வட்டத்தை 
     சுருக்கிக்     கொண்டாய்    சிலருக்குள்
அயலானாய்    உந்தன்    சோதரனையும்
     அலட்சியமாய்   நீயும்   அவமதித்தாய்

இறைவன்   நமதுதந்தை   யென்பதை
      இன்னும்   நீயே     மறுப்பதனால்
குறையுள்ள   மனிதரை    நீயும்ஒரே
      குடும்பத்தில்   ஏற்க    மறுக்கிறாய்

நெருப்பும்   நீர்,நிலமும்    இறைத்தூதர்
      நெடுகடலும்    காற்றும்   பணியாளர்
விருப்பம்போல்   வாழ்பவர்க்   கவை
      விடுக்கும்    எச்சரிக்கை     கடுமை

மனிதரே!    உணர்வுக்    கொள்வீர்
     மனிதாபி    மானம்மங்க   விடாதீர்
இனிவரும்    நாட்களில்   உங்கள்
      இதயத்தை   மாற்றிக்   கொள்வீர்   

சனி, 29 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 14 (மனமே! அமைதி கொள்வாய் )

மனமே! அமைதி கொள்வாய்
        மந்திரம் சொல்வேன் கேட்பாய்
தினமே   உன்னைக்   காண்கின்றவர்
        திக்கற்று அலைய விடார்

உன்னைப் படைத்தது நீயல்ல
       உன்னால் படைத்ததும் எதுவுமல்ல
பின்னை   ஏனிந்தக்    கலக்கம்
       படைத்தவர்   யாவும்  செய்திட

எதனைநீ     கொண்டு    வந்தாய்?
      எத்தனை    செயல்    செய்திட்டாய் ?
அதனைநீ      அறிந்தப்    பின்னரும்
      அச்சம்      கொள்வது   எதற்காக?

வருந்தியக்     காரியம்    குலைந்ததா?
      வருத்தியத்    துன்பம்   நிலைத்ததா?
திருந்திய     மாற்றம்    சளைத்ததா?
      தீங்காய்     உன்னைத்   துளைத்ததா?

அச்சம்    பலவும்நீ       கொண்டாய்
        அதனில்   உண்மை   ஒன்றாய்
துச்சமும்   இல்லையென்   றுணர்ந்தாய்
        தெளிந்த  பின்னும்ஏன்   துவண்டாய்?

சோதனை    என்றே     நினைப்பதில்
      சோர்ந்தே    நீயேன்     போகிறாய் ?
சாதனை      பலவும்     உன்மூலம்
      சாதித்தவர்     இறைவன்   அன்றோ!

தோல்விக்     கண்டு    சளைத்துப்போய்
      தொல்லை   என்றேத்   துவளாதே
வேள்வி      என்றே     விரும்பியதனை
       வெற்றிப்    படியாய்    ஆக்குவாய்

துரோகம்    செய்தோரை     நீயும்
       தூக்கி    எறிந்திடு  நினைவினின்று
துரோகிகள்    வதைபடும்   காலமுண்டு
       துணிந்து    அவரை    எதிர்கொள்வாய்

எதிர்பார்ப்பு     மிகுந்த      தெனில்
       ஏமாற்றம்    அதிகம்   உண்டு
எதிர்வருவதை  ஏற்றுக்    கொண்டு
       எளிமையாய்   உனைக்   காட்டு

பகட்டில்   உனைப்பரிகசிப்    போரிடம் 
      பந்தயம்     காட்ட     முனையாதே
புகட்டும்    அறிவால்    விஞ்சியே
      புகழை    எக்காலமும்   உருவாக்கு

செருக்குடன்     எள்ளி     நகைப்போரை
       சொந்தம்     என்றேக்   கொள்ளாதே
பொருட்டாய்    அவர்தம்   சொல்லில்
       போராடி      உன்னை   வருந்தாதே

நிம்மதி        எங்கேயென்று    நீயும்
     நித்தம்     நிலைதடு     மாறுவதேன்?
அம்மதி         உன்னகத்தே   உண்டென
      அறிந்து    உன்னை     மாற்றிடுவாய்

பதற்றமுடன்     பணிநீ    செய்யின்
      பக்குவம்      இல்லை   என்றாகும்
பிதற்றும்      நிலையைத்    தவிர்த்திட
      பிழையை    நீயும்      விலக்கிடு

விரக்தி       உன்னை     விரட்டிட
       விபரீத     எண்ணம்    கொள்ளாதே
இரக்கமுடன்    உனைக்    காக்க
       இறைவன்   உண்டென   மறவாதே

தனிமை      உன்னைத்    துரத்திட
      தனித்து    நீயும்      புலம்பாதே
இனிமை     நிறைந்த   உறவுண்டு
      இறைவன்   அவரே   என்றறிவாய்

நட்டம்     நலிவுறச்    செய்தாலும்
      நம்பிக்கை   வைத்து   நடத்துவாய்
சட்டம்     அநீதியாய்     நின்றாலும்
      சகித்து   இறைவனிடம்   நிறுத்துவாய்

தாழ்வு      நிலைகண்டு    தளராதே
      தாழ்ந்தோர்    உன்னிலும்   கீழுண்டு
வாழ்வு     அளிப்பவர்    இறைவனன்றி
      வாழ்பவர்     அவர்தம்   ஆற்றலாலன்று

தீயோர்      கண்டுப்      பொருமாதே 
     தீமைக்    கண்டு      வெகுளாதே
ஈயார்       செல்வம்   ஏழைக்கென
     இறைவன்   எழுதி   வைத்திட்டார்

மாற்றம்    வேண்டுமென்று   உலகில்
      மாந்தரை    மாற்ற     முயலாதே
மாற்றம்     உன்னில்    முதல்நடத்து
      மற்றதை   இறைவன்  நடத்துவார்

அன்பினை   ஆடையாய்   அணிவாய்
       ஆண்டவரின்    நம்பிக்கை   கொள்வாய்
என்புதனை    உருக்கும்    சினத்தைநீ
        ஏனுனக்குள்   வைத்திட   வேண்டும்

பொறுப்பவர்     உன்னைத்   தண்டித்தால்
       போகவழி     எங்குண்டு  உனக்கு ?
பொறுப்பாய்     நீயும்    இறைவன்போல்
       பிறர்      குற்றம்    குறைதனையே

அமைதிக்     கொள்வாய்    மனமே!
      அனைத்தும்   இறைவனிடம்  கொடுத்தே
சுமையான    எண்ணமதை   சுமக்காது
       சுகமாய்    நீவாழ     விரும்புகிறேன் 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 13 (புதிய சங்கீதம்)

இறைவனைப்   புகழும்   என்கீதம்
     இயற்றுவேன்    புதிய   சங்கீதம் 
நிறையவர்     அவர்தம்  மாண்பை 
     நினைத்துப்    பாடும்   நல்கீதம் 

இயற்கையில்  இணைந்துப்  பாடிடுவேன் 
       இனிமையாய்   அவரைப்   புகழ்ந்திடுவேன் 
செயற்கரிய     செயல்      அவர்தாமே 
       செய்ததனை    நித்தம்   சொல்லிடுவேன் 

மாட்சியை     ஆடையாய்     அணிந்தவர் 
     மகத்துவம்    வல்லமை    மிகுந்தவர் 
ஆட்சியை      அனைத்தும்    ஆள்பவர் 
     ஆயினும்    அனைத்தையும்   நேசிப்பவர் 

அமைதியின்    மன்னர்      அவரே 
      அறிவின்     ஊற்றும்    அவரே 
தீதறுக்கும்       தூயவர்      அவரே 
      திக்கற்றோர்   துணைவர்  அவரே 

விடுதலை    அளிக்கும்   இரட்சகர் 
       வேண்டலைக்   கேட்கும்   அருளாளர்
கெடுதலை   கொல்லும்    நீதிபதி 
      கேட்பதைக்   கொடுக்கும்   அதிபதி 

அன்பினில்   அவர்தாம்   அருட்கடல் 
      ஆற்றலில்   அவர்தாம்    பெருங்கடல் 
பண்பினைப்     போற்றும்    உயர்மலை 
      பரிவினை    நீட்டும்      வான்மழை 

பொறுமையில்   தாங்கும்   நிலமவர்
      பெருமையில்   ஓங்கும்   புகழவர்
வெறுமையில்    படைக்கும்   வல்லவர் 
       வெறுப்போரை    நேசிக்கும்   நல்லவர் 

ஞானத்தின்    உறைவிடம்    அவரே 
      ஞாயிற்றின்     ஒளிச்சுடர்   அவரே 
மனத்தின்      மகிழ்வும்      அவரே 
       மதியின்    நிறைவும்    அவரே  

எண்ணங்களை    ஊடுருவி    அறிவார் 
       எம்மெய்      அன்பிலும்    தெரிவார்
வண்ணங்களில்   மனிதரை   அறியார் 
       வஞ்சனை     யாதும்    தெரியார் 

நல்லோர்     தீயோர்     யாவருக்கும் 
      நலமே     நல்கும்     நாயகனவர் 
கல்லார்      கற்றார்     பிரிவின்றி  
     கற்பிக்கும்    கல்விக்    கடலவர் 

இருளை    அகற்றும்    ஒளியவர் 
     இருண்ட     வாழ்வின்    வழியவர்
அருளை      நிறைத்த    ஆழியவர்
      ஆறுதல்   யாருக்கும்   பாலிப்பவர் 

மாட்சியை     என்றும்    மறைப்பவர்
    மாந்தர்      நிலையை   உணர்பவர் 
காட்சியில்     காணிடா    கடவுளவர் 
    கண்டிட     முடியா     ஒளியுமவர் 

அஞ்சத்தகு     மாண்பை    உடையவர் 
     அளப்பரிய   தூய்மை    உடையவர் 
அஞ்சத்தகுப்    படையை    உடையவர் 
     ஆடையாய்    ஒளியை   உடையவர் 

மனிதர்      யாவரும்    வெறுமை  
     முழுதும்   நிறுத்தாலும்   நீர்க்குமிழி 
தானிதை    அறிந்ததால்   தயைகொண்டு 
     தவறும்    மனிதரைப்   பொறுத்திடுவார் 

உள்ளம்     உடைந்து    நொறுங்கினாலும் 
     ஊக்கம்    தந்து       தேற்றிடுவார் 
கள்ளம்      இல்லா     மனம்தன்னை 
     கனிவுடனே    நித்தம்    காக்கின்றார் 

நிலையற்ற    வாழ்வின்    நிலையிலும் 
     நிம்மதி       நமக்குத்     தருகின்றார் 
அலையற்ற    கடலைப்   போன்றே
     அமைதியில்    மனதை  ஆற்றுகிறார் 

எண்ணங்கள்    யாவிலும்   கடந்தவர் 
    ஏதும்இணை     என்றே     இல்லாதவர் 
எண்ணமுடியா   உயிர்கள்  அனைத்தும் 
    என்றென்றும்   பேணிக்    காப்பவர் 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 12 (என்கண்கள் என்றுமே உமைநோக்கி)


உம்மை  நோக்கியே  என்னுள்ளம்
     உயர்த்துகிறேன்  இறைவா  பாரும்
உம்மிலே    நம்பிக்கை   கொள்கிறேன்
     உறுதியாய்   பற்றிக்   கொண்டேன்

என்னைநீர்  வெட்கமுற  விடாதீரும்
     என்பகைவர்    நகைக்க   விடாதீரும்
உண்மையில்   உம்மை    நம்பினோர்
     உழன்று    வெட்கம்   உறுவதில்லை

வஞ்சமாய்   துரோகம்  செய்வர்எவரும்
     வெட்கத்திற்கு  என்றும்  உள்ளாவர்.
நெஞ்சமெனது   உம்பாதை  அறியச்செய்யும்
      நேரிய   உம்வழிகளைக்    கற்றுத்தாரும்

எந்தன்   மீட்பராம்   இறைவன்நீர்
     என்றும்   உம்மை  நம்பியுள்ளேன்
உந்தன்   கருணையும்    பேரன்பும்
     ஊழிஊழியாய்  நிலைத்து   உள்ளன

இளமைப்  பருவத்தின்  மீறுதலையும்
      இதுவரையான    குற்றமும்  நினையாதீரும்
அளவற்றப்  பேரன்பில்   எனைநினைத்து
      ஆண்டவரே   எனக்கு   வாழ்வளிப்பீர்

ஆண்டவரே   நீர்நல்லவர்   நீதியாளர்
      ஆதலின்   நல்வழிக்      காட்டுகின்றீர்
தீண்டத்  தகாதவர்  எவருமில்லை
     தீயவரும்   எளியவரும்  நடத்துகின்றீர்

இறைவாஉம்    உடன்படிக்கை ஒழுங்குமுறை
     இவற்றை   பின்பற்றுவோர்  பாதைகள்
நிறைவாய்  பேரன்பும் உண்மையும்
     நிறைந்த  வனவாய்   விளங்கும்.

எம்குற்றம்   பெரிதெனினும்   மன்னியும்
       எம்மை    உம்பெயர்     பொருட்டு
உம்பெயர்    அஞ்சுவோர்    தமக்கு
       உகந்த    வழியைக்    கற்பிப்பீர்

நலமுடன்   வாழ்வர்   அவர்கள்
       நாட்டை   உரிமையாய்   பெறுவர்
நல்லுறவு    உரிமைதருவார்   அஞ்சுவோர்க்கு
       நீடித்த   உடன்படிக்கை    விளக்கிடுவார்

என்கண்கள்  என்றுமே  உமைநோக்கி
     என்கால்கள்  வலைதனில்  விடுவிப்பீர்
என்மீது     இரங்கும்    எனைநோக்கி
     ஏனெனில்  கதியற்றோன்  துயருற்றோன் .

என்வேதனை    என்னுள்   பெருகின
     எத்துன்பம்    நீர்கண்டு   விடுவியும் .
என்சிறுமை     வருத்தம்    எனக்கண்டு
     என்பாவம்    யாவும்நீர்   மன்னியும் .

என்எதிரிகள்    எத்தனை   பெருகினோர்
      எவ்வளவு  கொடுமைஎனை வெறுக்கிறார்
என்னுயிரைக்    காப்பாற்றி   விடுவியும்
      என்னை   வெட்கமுற     விடாதீரும்

உம்மிடம்   அடைக்கலம்   புகுந்ததால்
      உண்மை   நேர்மை   அரணாகட்டும்
உம்மையே    நானும்    நம்பியுள்ளேன்
      ஊறுயாவும்   என்னிடம்   நீக்கிடுவீர்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 11 (என்னைநீர் அறிகின்றீர்)

ஆய்ந்து  என்னைநீர்   அறிகின்றீர்
    ஆண்டவரே!   எல்லாம்நீர்  அறிந்தவர்
சாய்ந்து   அமர்வதும்   எழுவதும்என்
     சிந்தனை  அனைத்தும்   அறிகின்றீர்

நடப்பதும்    படுப்பதும்  கிடப்பதும்
    நடக்கும்   வழிகளும்  தெரிந்தவர்நீர்
தேடமுன்பே   என்வாயின்   சொற்களை
       தொலைநின்று   முற்றும்  அறிகின்றீர்

முன்னும்    பின்னுமாய்   எனைச்சூழ்ந்து
      முடிந்து  எனைவைத்தீர் .உம்கைக்குள்
என்னைப்     பற்றியஉம்   அறிவெனக்கு
      எத்துணை   வியப்பாய்   இருக்கின்றது

உன்னதமானது   அறிவுக்கு   எட்டாதது
      உன்னதரின்   மாபெரும்   எண்ணங்கள்
என்னைத்தான்    என்னிலும்    எவ்வளவு
     எங்குமெதிலும்  அறிந்து      உள்ளீர் .

திருசமூகம்   விட்டெங்கே   நானும்
     தப்பிச்    செல்ல    முடியும்?
அருள்மிகு   ஆற்றலை    விட்டுநான்
     அலைந்து   எங்கே   செல்லக்கூடும்?

ஆகாயம்  பறந்துநான்  சென்றாலும்
    அங்கேயும்   நீர்    இருக்கின்றீர்!
புகாதப்    பாதாளம்போய்  படுத்தாலும்
     பார்த்திருந்தீர்   அங்கும்   என்னை

கதிரவன்    எல்லைக்குச்   சென்றாலும்
     கடலுக்கு    உள்ளே     வசித்தாலும்
அதிலும்     உம்கைதான்   எனைநடத்தும்
     அருட்கரம்  எனைப்பற்றி  கொள்ளும்

உண்மையில்  இருளென்னை  சூழாதோ
      உறுத்தும்   இருட்டும்  எனைமூடாதோ
என்றுநான்   உரைத்தாலும்   இருளுமிருட்டும்
      என்றும்   உமக்குஒளி       போலிருக்கும்

என்னுள்     அவயங்களை    அமைத்தவர்
        என்தாயின்   கருவினில்   உருத்தந்தவர்
என்னைநீர்   அற்புதமாய்     படைத்ததால்
        என்றும்    உமக்குநன்றி   சொல்வேன்

எனதுமனம்    அறியும்    முற்றிலும்
       என்னே   வியப்பூட்டும்   செயல்யாவும்!
எனதெலும்பும்   மறைவில்லை   உமக்கு
       என்னைநீர்   மறைவாய்   உருவாக்கினீர்

கருமுளையில்   உம்கண்கள்   எனைக்கண்டன
       குறித்திட்டீர்    என்நாளை   தோன்றும்முன்
அரியதுஉம்      எண்ணங்களை   அறிவது
       அளவிடற்கரிது   அவைதம்  எண்ணிக்கை

என்னிறைவா!    என்மனதை      ஆய்ந்தறியும்
        எண்ணங்கள்   யாவும்   சோதித்தறியும்
இன்னாவழியில்   நான்   செல்லாது
      இனியஉம்   வழியில்   எனைநடத்தும்

சனி, 22 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 10 (எக்காலமும் போற்றுவேன் இறைவனை)

எக்காலமும் போற்றுவேன்  இறைவனை
      எந்நேரமும்   அவர்புகழ்   நாஒலிக்கும்
வாக்களிப்பேன்   அவர்தம்   பெருமையினை
      வறியோரும்  அக்களிப்பர்  இதைக்கேட்டு

பெருமைக்   குரியஅவரது    பெயரினை
      போற்றிடுவோம்  ஒன்றாய்   சேர்ந்து
வருந்தித்     துணைவேண்டி  கேட்டேன்
      வல்லவர்    மறுமொழி    பகர்ந்தார்

அச்சம்     பலஎன்னை    ஆட்கொண்டன
      ஆண்டவரும்   அதனில்   விடுவித்தார்
கூச்சம்பெறா   முகங்கள்    யாவும்களி
      கூர்ந்து       அவரை    நோக்கியோர்

ஏழைஇவன்  கூவியழைக்க ஆண்டவர்
     என்னவென்று   கேட்டார் -  உடன்
விழைந்து   செவிசாய்த்து   இவன்
     வேதனை   எல்லாம்   நீக்கிட்டார்

தூயவர்க்கு   அஞ்சி   வாழ்வோரை - அவர்
     தூதர்கள்   சூழ்ந்துக்  காத்திடுவர்.
இனியவர்    இறைவன்  எத்துணைஎன்றே
     இன்பமாய்   உணர்ந்தேப்  பாருங்கள்

பேற்றினை   அடைந்தோர்   அவர்தம்
     பெயரில்   அடைக்கலம்   கண்டோர்
சற்றிலும்    குறைவு   அடையார்
      சர்வவல்ல   தேவனுக்   கஞ்சுவோர்

சிங்கம்   குட்டிகள்   உணவீணும் - அவை
     சிலதுப்   பட்டினி   கிடப்பினும்
எங்கணும்   குறையாது    நன்மைஏதும்
     என்றும்   இறைவனை  தேடுவோர்க்கு

வாரீர்    பிள்ளாய்    நானுரைப்பேன்
    வாஞ்சை   யோடுகேளீர்  அதனை
பாரீர்அவர்     தம்வல்ல  செயல்களை
      பயந்துநடப்பீர்   இறைவன்   மட்டில்

வாழ்வில்    இன்பம்    வேண்டுமெனில்
      வளத்தை   நெடுநாள்   துய்க்கவெனில்
கீழ்மொழியின்  நின்றுநாவைக்   காத்திடு
       கயமை   வாக்கினின்று   விலகிடு

தீவினையாவும்  விலக்கிடு   என்றும்
     தீயோரை   தொலைவில்   நிறுத்திடு
நல்வினை     எதிலும்  செய்திட்டே
     நல்வாழ்வு   அடைவதில் ஏக்கமாயிரு

நல்லோரை   ஆண்டவர்   காண்கின்றார்
     நவிலும்    விண்ணப்பம்   கேட்கின்றார்
பொல்லார்க்கு   எதிராய்   இருக்கின்றார்
     பொங்கும்    சினத்தால்   அழித்திடுவார்

நீதியோர்   துன்பம்   விலக்கிடுவார்
    நலிந்த    நெஞ்சம்   தேற்றிடுவார்
சிதிலமுற்ற   உள்ளம்   உடையோரை
    சடுதியில்   நின்றுக்     காத்திடுவார்

நேர்மை   உள்ளோர்க்கு   தீங்குபல
      நேரிடினும்   ஆண்டவர்  தாங்கிடுவார்
வர்மம்     அடையாது   .என்புதனை
       வலிமையாய்   ஆக்கிச்  சேர்க்கின்றார்

தீயோரைத்   தீவினைக்   கொல்லும்
     தீதடைவர்  நல்லோரை  வெறுப்பர்
உயிரை   அவரடியார்  பேணிடுவர் -  அவரை
     உறைவிடம்   கண்டோர்   மீட்படைவர் 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 9 (நோயுற்றோர் மன்றாட்டு)

எதனைநான்   எழுதமுடியும்  இறைவா?
     எதெனக்கு    உந்தன்   வாக்கு
எத்தனை   எண்ணங்கள்   வீணில் 
     எனினும்   பிழைத்திட்டேன்   உன்னில்

அமைதியோ   அக்களிப்போ    எனக்கில்லை
      அகத்தினிலோ   ஐயமும்  அச்சமுண்டு
அமைத்திட்டீர்   துன்பநிலை  ஏனெனக்கு?
      அறுதியிட்டு   உம்மைநான்  சார்ந்திருக்க

உடலோ   என்னுள்ளமோ  நானறியேன்
       உறுத்துவது   உயிரென்பது    நீரறிவீர்
நீடலாய்   வேதனையில்   நானிருக்க 
      நாளும்நான்  ஏங்குகிறேன்  குணம்பெற

சுகம்பெறும்    மருந்தினைக்   கண்டறியேன்
     சளைத்ததென்    முயற்சிப்    பலவும்
வகையாதென   சொல்லும்   என்வேதனைக்கு
     வீணில்போகாது   என்நம்பிக்கை   காப்பீர்

நலன்யாவும்     என்னில்    நிறைத்தீர்
       நலம்தாரும்   என்றே   வேண்டுகின்றேன்
நிலையுணர்ந்து    காக்க    விரைவீர்  -   வேறில்
       நின்வல்ல     வாக்கினை   அனுப்புவீர்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 8 (இறைவனின் திருவுளம்)

இதோ  உந்தன்  அடிமைநான்
       இறைவா  என்னை   ஏற்பாய்
ஏதோஎன்று   வாழ்ந்த  வாழ்க்கை
       எதற்கு  என்று    நீரறிவீர்

திருவுளம்   யாதென  அறிந்திலேன்
       திருமறை    யாதும்   கற்றிலேன்
இருவுளம் இருக்கும் என்னில்   
      இனியொரு உளமாய்உம்  மில்மாற்றும்

திருவுளம்     தன்னை   நிறைவேற்ற
     திறந்த     மனதாய்    வருகின்றேன்
அருளுளம்    காட்டி     என்னைஉம்
     அடிமையாய்   ஏற்றிடுவீர்  இறைவா

அர்பணித்தேன்    என்னை   முழுவதும்
      ஆண்டவர்    உந்தன்   விருப்பத்திற்காய்
கற்பனைக்கு      எட்டாக்   காரியமதை
       காட்டும்     உந்தன்    அடியான்முன்

சரணடைந்தே     உம்மைப்   பணிகிறேன்
      சரணாகதி        நீரே       எனக்கு
அரனாயிருந்தே    நீரே      எனக்குஉம்
      அருள்வாக்கை  உரைக்க   அருள்வீராக

அடிமைக்குப்     பணியினைக்    கட்டளையிடும்
       அதனால்     என்வாழ்வு      முழுமைபெறும்
அடியேன்       உந்தன்    கருவியாய்
        ஆக்கும்   உகந்தப்   பிறவியாய்

விலக்காதீரும்   என்னைத்   தொலைவில்
       வந்திடுவேன்   உம்மைத்   தொடர்ந்து
துலக்கிடும்      என்னைத்தூய   வெள்ளியாய்
       துலங்கிடுவேன்   உந்தன்  காலணியாய்

வாழ்ந்த    நாட்கள்    எனக்காய்இனி
     வாழும்  நாட்கள்   உமக்காய்
ஆழ்ந்த     அமைதியில்   நானெந்தன்
     ஆற்றும்    பணியாவும்   உமக்காக

புயலில்.  சிக்கிய    பதரைபோல்
    பதற்றத்துடன்   பணி   செய்தேன்
கையளித்தேன்    எனது   உயிரை
     கைவிடாது    காத்தீர்   அன்றோ

ஆணையிடும்   உந்தன்   அடியவனுக்கு
      ஆர்வமாய்    செயல்படஎனை   யளித்தேன்
வீணையிலிரும்    நரம்புப்   போன்றெனை
       விருப்பம்       உமதாய்    இசைத்திடும்

பிணையிடும்     என்னை   உம்பணிக்காய்
      பிறர்பணி      தனையும்  ஆற்றிடவே
துணைவரும்      உந்தன்     அருட்கரம்
      துலங்கும்     காரியம்     மிகுந்தரம்

அறிவிற்    குறையொன்     எனினும்
        அற்புதமாய்   எனைத்   தேர்ந்தீர்
தெரிவிற்     காணா     நல்லறிவை
        தேவைப்     பொழுது   அருள்கின்றீர்

என்னை     இயக்கும்      நீரே
       என்னை   இயக்கும்  இனிமுழுதும்
தன்னையே     நான்    தந்திட்டேன்
       தனியொரு    விருப்பம்   என்வேண்டா

உந்தன்     உடைமை    இஃது
     உரிமை   முழுதும்   கொள்வீர்
சொந்தப்    பிணையை   நீரும்
     சொத்தாய்   சேர்த்துக்   கொள்வீர்

பேசும்   உந்தன்    அடியானோடு
      பேதை     நான்   கேட்கின்றேன்
வீசும்     உந்தன்    கட்டளைத்தனை
      விரைந்துச்    செய்ய   யாசிக்கிறேன் 

புதன், 19 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 7 (இறைவனின் கட்டளை)

இறைவா!        உம்கட்டளை   வழிதரும்
      இவற்றால்   என்கண்கள்   ஒளிபெறும்
இறைவனின்    கட்டளை   வலிமைமிக்கது
      இதனால்    பேதையரும்  ஞானியாவர்

இறைவனின்    சட்டங்கள்   நம்பத்தக்கவை
      இருபுறமும்   கூர்மிக்க   வாள்போன்றவை
குறையேதும்   காணவியலா  பொன்னினும்மேல்
      குதுகளிக்கும்    என்மனம்    அதனால்

கடவுளின்   ஒழுங்குமுறை   சீரானவை
      கீர்த்தியும்   நீதியும்   நிறைந்தவை
கடவுளின்    நியாயங்கள்  தூய்மையது
      காதலாய்    இதயத்தை   இன்புறுத்தும்

இறைவா!   உன்சட்டங்கள்   எனக்கு
      இன்பம்   தருவதாய்    இல்லாதிருப்பின்
மறைந்து     போயிருப்பேன்   எத்துன்பத்தில்
      மடிந்துபோகாது   ஆறுதல்   தந்தவை

உம்கட்டளையில்    என்னை   மகிழ்விக்கின்றீர்
      உண்மையில்    எனக்குஅவை   அருமருந்து
உம்சட்டம்       என்னைநேர்    வழிப்படுத்தும்  - அதை
      உறுதியாய்ப்    பற்றுவோர்க்கு  பரிசுண்டு

என்காலடிக்கு     உம்வாக்கே    விளக்கு
      என்வழிக்கு     ஒளியும்     அதுவே
என்வாயில்       இனிக்கும்    அமிழ்து
      என்விழிக்குப்   பாவையும்   அது

மனங்களை   மாசற்றதாய்   காப்பதற்கு
      மதிநுட்பம்    ஞானம்     பெறுவதற்கு
தனங்களைப்     போன்று   குணங்களையும்
      தகைவாய்   தந்திடும்    உம்வாக்கு

இறைவன்  உரைத்த  கட்டளையிவை
      இவற்றை   முறையாய்  பின்பற்றியே
கறையின்றி    மனத்தைக்   காப்போம்
      கட்டளை  முதன்மையில்  பின்வருவன

இறைவன்     ஒருவர்    தாமே
     இல்லை   வேற்று   ஒன்று
இறைவனைப்   பணிதல்  தவிர
     இதரப்பிற   பணிதல்   ஆகாது

உருவமோ   சிற்பமோ   சித்திரமோ
     உகந்தது    அன்று    வணங்கிட
உருவமறியா   இறைவனை   ஏகமாய்
     உள்ளத்தே    உணர்ந்து   தொழுவீர்

படைத்தவர்    முன்னரே   தாளிடுவீர்
     படைத்தவை   பின்னமே   விலகிடுவீர்
படைத்தவர்     திருநாமம்    புனிதம்
     பயனாக்காதீர்   அதனை   வீணில்

ஓய்வுநாள்   அமைந்தது   இறைவனுக்காய்
      ஒதுக்குவோம்  முழுதாய்   அவருக்காய்
தூய்மை     உள்ளதோடு    தீட்டின்றி
       துதிப்போம்   இறைவனை  அந்நாளில்

தந்தைதாய்     இறைவனின்   தூதர்
     தாழ்மையுடன்    அவரைப்  போற்றுவீர்
நிந்தையேதும்    அவருக்குச்   செய்யின்
     நித்தியப்     பழிக்கு    உள்ளாவீர்

சிற்றின்பம்   வாழ்க்கைச்   சீரழிக்கும்
     சிறுமதிக்   கொண்டு    அலையாதீர்
உற்றஉறவிலே   இன்பம்   கொண்டு
    உன்னதர்    ஆசீர்    பெற்றிடுவீர்

உயிர்யாவும்   இறைவன்  உடைமை
    உரியவனுக்கே    அதில்உரிமை   இல்லை
உயிர்நீக்க    எவனுக்கு  உரிமையேது ?
     உயிர்க்கொலை   பெருங்   கொடியதீது

களவுக்    கையூட்டு   ஊழல்யாவும்
      கயமையின்    கொடிய   உருவங்கள்
அளவு     இல்லாப்    பேராசையில்
      அடுத்தவர்  உரிமை கொல்லுஞ்செயல்

இவையாவும்   செய்வோர்   விலங்கொப்பர்
       இல்லாரின்  சாபம்விழும்   இவர்மீது
தேவைமீறிச்    சேர்ப்பவை   அனைத்தும்
     திண்டிடாடு    வோரிடம்   எடுத்ததிருட்டு

வழக்கினில்  தீமையைக்    கலக்காதீர்
     வாய்மையில்   பொய்யைத்   திரிக்காதீர்
பழக்கியப்     பொய்ச்சான்றும்   தீதாகும்
     படைத்தவரின்   நீதிக்குப்    பலியாகும்

தீர்ப்பினில்      அநீதிச்    செய்யாதீர்
     திக்கற்றோர்    நீதி     மறுக்காதீர்
தீர்ப்பின்      இறைவன்   வரும்போது
     திகில்பிடித்து   நீரும்   விழவேண்டா

அதிகார    துர்ப்பயன்பாடு   வேண்டாம்
      ஆணவத்   திமிருதலும்   வேண்டாம்
அதிகாரம்    பயன்கொட   அமைத்ததுவே
       அதனில்   சுயநலம்   சிறிதும்வேண்டா

நீதியைக்    கொல்ல    முயலாதீர்
     நீதியின்    தேவன்   பொறுக்கமாட்டார்
கதியின்றி    இருப்போரின்  அழுகுரலைக்
     கண்டுத்    துடிக்கும்   அவர்சினம்

பிறர்மனைக்     கவர   விரும்பாதீர்
     பிறவிப்     பாவம்   அடையாதீர்
பிறர்பொருள்    யாவும்  உடைமையும்
     பிடித்திட    ஆவல்   கொள்ளாதீர்

ஏழையின்     வாழ்வை   வஞ்சிக்காதீர்
      எளியவர்    தாழ்மை   இகழாதீர்
உழைப்பவர்    ஊதியம்   கொடுப்பீர்  - அவர்
      உழைப்பின்  வியர்வைக்  காயும்முன்

அனாதைப்     பிள்ளைக்குத்  துணைநிற்பீர்
     அபலைப்    பெண்ணுக்கு   ஆதரவளிப்பீர்
வானாதி    வானங்களை   படைத்தவர்
     வானின்று    பொக்கிஷம்   வழங்கிடுவார்

உம்மை   நீரும்  நேசிப்பதுபோல்
     உம்      அயலானையும்  நேசிப்பீர்
இம்மை   மறுமை   இரண்டிலும்
     இறைவனே   நமக்கு  நிரந்தரம்    

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 6 (திருப்பொழிவு

திருப்பொழிவுச்    செய்யும்    இறைவா
       திருப்பொழிவுச்  செய்யும்  என்னை
அருட்பொழிவுச்    செய்து    உந்தன்
      அடியானாய்   மாற்றச்    செய்யும்

இளமையின்      குற்றக்    கறைநீக்க
       இதுவரைச் செய்தப்    பாவமவிலக்க
கள்ளமைக்        கசடு       யாவும்போக்க
       கனிவுடன்   திருப்பொழிவுச்   செய்யும்

உந்தன்     வாக்கினை    உரைக்க
    உண்மைநெறி    நாளும்   எடுத்துரைக்க
எந்தன்     பணியினை   உந்தனுக்காய்
    எடுத்தளிக்க    திருப்பொழிவுச்  செய்யும்

எளியோர்    தமக்கு    உம்செய்தியை
       எடுத்து    இயம்பவும்    வாழ்வுத்
துளிர்விடா     அடிமைக்கு  விடுதலைநாளை
       தூதறிவிக்க    திருப்பொழிவுச்   செய்யும்

ஆண்டவரின்    ஆண்டினைப்    பறைசாற்றவும்
      ஆறுதல்    நலிவுற்றோர்   அடையவும்
அண்டம்     முழுவதும்    உம்நீதியை
      அறிவிக்கவும்   திருப்பொழிவுச்   செய்யும்

ஒடுக்கப்பட்டோர்    உரிமை   வாழ்வு
      ஓங்கவும்     மண்ணில்   உயர்வு
தடுக்கப்பட்டோர்   நிறை   வாழ்வுத்
      தழைக்கவும்   திருப்பொழிவுச்  செய்யும்

அழுவோர்த்     தம்மைத்    தேற்றிடவும்
      அடக்குமுறை  யாவும்  தூற்றிடவும்
விழுவோர்     யாவரையும்  தூக்கிடவும்
     விழைந்துத்   திருப்பொழிவுச்  செய்யும்

தூய்மையை     ஆடையை    அணியவும்
      துணிந்துக்    கொடுமையை    எதிர்க்கவும்
கயமையைக்     கருவினில்   அளிக்கவும்
      கடவுளே      எனக்கு     அருட்பொழியும்

உந்தன்       குரலினைக்   கேட்டிடவும்
     உரிமையுடன்   உம்மிடம்  பேசிடவும்
எந்தன்     நாவினில்   உம்அனலிட்டு
     எழும்பி     ஒளிவிட   அருட்பொழியும்

உம்கட்டளை     யாவும்    கடைபிடிக்க
     உமைஉயிரிலும்  உணர்விலும்  சேவிக்க
உம்சட்டங்கள்    யாவும்   எடுத்துரைக்க
     உன்னதரே!   திருப்பொழிவுச்   செய்யும்

புத்துயிர்    அளிக்கும்   ஆவியை
      புதுப்பிக்கும்  ஆவியை  எனக்கீந்து
புத்தம்     புதிய     மனம்தந்து
       புதுப்படைப்பாய்   எனை  மாற்றும்

கரடான     வழியினைச்   சீர்படுத்தவும்
      கோணலானப்    பாதையை   நேர்படுத்தவும்
முரடான     மனங்களை   மென்படுத்தவும்
      முழுமையாய்   திருப்பொழிவுச்  செய்யும் 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 5 (நம்பிக்கை)

நம்பிக்கை   விசுவாசம்   பற்றுறுதி
      நலமான   வாழ்க்கைக்கு  உற்றவழி
நம்பினோர்   கெடுவதில்லை  எனினும்
     நம்புவேன்  இறைவனை  முதலாய்

கடவுளை  நம்பினோர்  கைவிடப்படார்
      காக்கும்    இறைவன்  உறங்கமாட்டார்
தேடவும்    நம்பிக்கையில்   அவரையே
       தேடிவந்து    உதவிகள்   செய்வார்

இறைநம்பிக்கை   வாழ்வின்   அணிகலன்
       இதயத்தைத்   திடப்படுத்தும்   ஆணிவேர்
விறைத்துப்     போகும்   இன்னலிலும்
       விடாதுப்    பற்றவேண்டும்   நம்பிக்கையை

எத்தலைமுறை    தனிலும்    இறைவனைநம்பி
        ஏமாற்ற       முற்றோர்   எவருமுன்றோ ?
இத்தலைமுறை   எத்தனைக்    கண்டது
        இறைவன்   நம்மைக்   காப்பதை
 
இறைவன்மீதே     நம்பிக்கை   கொள்வீர்
        இதரப்பிற    பாத்திரம்   ஆகா
மறையும்    மனிதர்   மாற்றமடைவர்
        மக்கிப்போம்   அவர்கள்   வாக்கு

புவியின்   அடித்தளம்   ஆட்டம்காணும்
      பெருங்கடல்    வெள்ளம்  புரண்டுவரும்
செவியின்   உள்ளே     இடிமுழங்கும்
      சேதமடையேன்   இறை  நம்பிக்கையினால்

வெள்ளம்   மேல்தனில்   பாய்ந்தோடும்
       வெறுமை   என்றேநிலை  தோன்றும்
உள்ளம்     சோர்ந்துக்    களைப்படையும்
       உடைந்திடேன்    நம்பிக்கை  இருப்பதனால்

ஆயிரம்     அருகில்    வீழும்போதும்
      அச்சம்    மனதில்   எழும்போதும்
வைரம்போல்   மேனியரும்   நோயில்வீழ
      வைத்திருப்பேன்   நம்பிக்கை  இறைவன்மீதே

தோல்விகள்    பலவும்    கண்டிடினும்
       தொல்லைகள்    பலவும்  நேர்ந்திடினும்
கொல்வினைக்    காரணிச்    சூழ்ந்திடினும்
       கொண்டிருப்பேன்  நம்பிக்கை  என்றுமே

நம்பினோர்    சூதாய்     வஞ்சித்தபோதும்
       நரிக்குணம்   நம்மை  நகைத்தபோதும்
அம்பிற்கிணை   சொற்கள்   துளைத்தபோதும்
      அசைத்திட    வேண்டாம்   நம்பிக்கையினை

சூழல்கள்     யாவும்     எதிரானாலும்
       சுற்றம்   யாவும்தொலை  நின்றாலும்
ஊழல்கள்    உலுக்கி    ஊறுதந்தாலும்
       ஊக்கமடைவீர்   இறை   நம்பிக்கையிலே

காட்டிய   அன்புஎறியப்   பட்டாலும்
       கானல்நீராய்   பாசம்தெரியப்   பட்டாலும்
தீட்டியக்    கணையும்   தீங்கிழைத்தாலும்
       திடமாய்  பற்றுவோம்  நம்பிக்கைதனை

நாட்டியப்     பயிர்நாசம்   போனாலும்
      நாட்டில்   நீதிமோசம்   போனாலும்
ஈட்டிய     செல்வமும்   இழந்திடினும்
      ஈற்றில்    நிலைப்பது   இறைநம்பிக்கை

உலகம்   யாவும்  வெறுத்திடினும்
      உண்மை  யாவும்  மறுத்திடினும்
கலகம்    செய்வோர்கை  ஓங்கிடினும்
      கலங்காது    மனம்   நம்பிக்கையில்

காலம்   ஒன்றொன்று   உண்டு
     கனிந்திடும்   நம்பிக்கை   மீண்டு
பலம்யாவும்   நம்மில்  ஊன்றிடும்
      பலன்யாவும்  நம்பிக்கைத்   தோன்றிடும்

செய்யும்   யாவிலும்   இறைவனைநம்பி
       செய்திடுவோம்  அவர்முன்  கொடுத்து
மெய்யும்    நேர்மையும்  பணியிலிட்டு
       மேன்மை   யடைவோம்இறை   நம்பிக்கையில்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 4 (பேரன்பு)

என்னே    உந்தன்    பேரன்பு
    எல்லையே  இல்லாப்    பேரன்பு
முன்னே    நிறைந்த  பேரன்பு
    முழுதும்   ஆக்கியப்  பேரன்பு

இறைவா     உந்தன்   பேரன்பு
      ஈடிணை   இல்லாப்   பேரன்பு
பாறையாய்    காக்கும்   பேரன்பு
      பாவிகட்கும்    உண்டும்   பேரன்பு

உலகைப்     படைத்தப்    பேரன்பு  - அதில்
      உயிர்களைத்     தந்தப்    பேரன்பு
பலவகைப்    பல்லுயிர்   படைத்திட்ட
      பரிவுமிகு    உந்தன்   பேரன்பு

இயற்கையை   இயன்றப்   பேரன்பு - அதில்
      இன்பம்   சேர்க்கும்   பேரன்பு
இயங்குவதும்   இருப்பதும்  பேரன்பால்
      இயங்கும்   உலகமும்   பேரன்பால்

காற்றைக்    கொடுத்து  விரிந்தக்
     கடலைக்    கண்டப்   பேரன்பு
ஆற்றை      அளந்தப்    பேரன்பு  - அதில்
     ஆவனச்    செய்யும்   பேரன்பு

மண்ணை   உண்டாக்கியப்   பேரன்பு
       மண்ணான   மனிதனை   மாண்பாய்
மண்ணில்    படைத்தப்    பேரன்பு - அவன்
       மற்றவைக்    கீழ்ப்படுத்திய  பேரன்பு 

உயிருடல்   ஈந்து   அதில்தன்
     உயிர்மூச்சு   தந்தப்    பேரன்பு
பயிருடன்     காய்கனிப்   படைத்துப்
     பல்லுயிர்    ஓம்பும்    பேரன்பு

உணவுஉடை   உறைவிடம்  யாவும்
       உகந்து    அளித்தப்   பேரன்பு
வானவர்    உணவினை   மானிடர்க்கே
       வாரி    இரைத்திட்டப்   பேரன்பு

நன்னெறி    மாந்தர்    மண்ணில்
      நலமுடன்    வாழ   நம்பிக்கை
ஈன்றிடும்    இனியநல்  பேரன்பு
      இஃது    இறைவனின்  பேரன்பு

அடிமை    நிலையில்    உந்தன்
      அடியாரை    மீட்டது   பேரன்பு
குடிமைக்    கொண்ட    தேசத்தில்
      குறைவின்றிப்   பேணும்  பேரன்பு

அல்லல்பட்ட   அடியாரின்   நிலைகண்டு
      அவதிப்   பட்டப்   பேரன்பு  -  உடன்
வல்லச்    செயல்கள்   பலவும்
      வடித்து   விடுவித்தப்   பேரன்பு

அதிசயம்     ஆற்றியப்   பேரன்பு
      அற்புதம்   நிகழ்த்தியப்   பேரன்பு
நீதித்தலைவர்    கொண்டு   மக்களை
      நிறைவாய்   நடத்தியப்    பேரன்பு

கடையனை    முதலாக்கும்  பேரன்பு
       கருவினில்    தேர்ந்தப்     பேரன்பு
இடையனை   வேந்தனாய்   இருத்தியே
       இறைபற்றில்   இயக்கியப்   பேரன்பு 

வாக்கை    நிறைவேற்றும்   பேரன்பு
       வாழ்க்கைக்   கரையேற்றும்  பேரன்பு
ஊக்கம்      அளிக்கும்   பேரன்பு
      உயிரோட்டம்  மிகுந்தப்   பேரன்பு

அகதியாய்     திரிந்த    அடியார்க்கு
      அகிலம்   வியக்க   ஆற்றலறிவு
மிகுதியாய்    ஆக்கியப்   பேரன்பு
      மீளவும்   மீட்கும்  பேரன்பு

பொறுமை  மிகுந்தப்   பேரன்பு
     பெருஞ்சினம்   தணிக்கும்  பேரன்பு
வெறுமை   மனிதரே  என்றாலும்
     வெறுத்து   விலகாப்  பேரன்பு

இன்னும்   நான்   வாழ்வதில்
      இணைந்து  இருப்பதுப்  பேரன்பு
தின்னும்   உணவிலும்   என்பெயர்
     திண்ணமாய்   எழுதியப்  பேரன்பு

துயில்  கொண்டு   விழிப்பதும்
       தூதரால்   காப்பதும்  பேரன்பு
கையின்    காரியம்   யாவிலும்
      கொழிக்கச்   செய்வதும்  பேரன்பு

நொறுங்கிய    எந்த(ன்)   நிலையிலும்
      நேசம்     கொண்டதுப்    பேரன்பு
சுருங்கிய     எனது   வாழ்நாளை
      சுகமாக்கி   நீட்டியது   பேரன்பு

குழியில்  வீழ்ந்த   என்னைக்
     குனிந்து   எடுத்தப்   பேரன்பு
ஆழியில்   அகப்பட்ட  கலமெனை
     ஆக்ககரைச்   சேர்த்தப்  பேரன்பு

உடைந்து  உருக்குலைந்த  மனதை
     உருப்பெறச்   செய்தது  பேரன்பு
கடைந்து     எனைஎழில்  வடிவம்
     கொடுத்து  உயர்த்தியப்   பேரன்பு

ஒடுக்குவர்   முன்னிலை   என்னை
     ஓங்கி     நிறுத்தியப்     பேரன்பு
தடுக்கும்    எவரையும்    என்முன்
    தவிர்த்திடச்    செய்தப்   பேரன்பு

எமதுக்     குற்றத்தின்   நிமித்தம்
     ஏதுவாய்    தண்டனைப்   பெறினும்
உமதுப்     பேரன்பின்  பொருட்டு
     உயிரோடு   நாங்கள்   உள்ளோம்

தமதுப்    பாவத்தின்படித்  தீர்ப்புப்பெறின்
       தரணியில்   எவரும்   இரார்
உமதுப்    பேரன்பு   எங்கும்
       உலகை   நிரப்பி  உள்ளது 

சனி, 15 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 3 (தெய்வபயம்)

தெய்வபயம்    ஞானத்தின்   ஊற்றுக்கண்
     தேடுவோர்   அடையும்    பொக்கிஷம்
மெய்வருத்தி     சேர்த்த    செல்வமும்
     மேன்மைப்   பெறாது  அதற்கீடாக

தெய்வபயம் கற்பிக்கும்  நல்லாசான்
       தெளிவும்  பெறவழிக்   காட்டும்
உய்வதில்     தன்னை  முன்னிறுத்தும்
       உய்த்தபின்   கொடுக்கும் பலன்யாவும்

தெய்வபயம்    நிறைவு   அளிக்கும்
      தேவைகளை   உணர்ந்து  அளிக்கும்
செய்வது    அனைத்திலும் வினையாற்றும்
       செல்வழி    நோக்கித்    துணைநிற்கும்

தெய்வபயம்    தீவினை   அகற்றும்
        தேவன்     கருணை   மிஃகும்
ஆய்வதிலும்   ஆள்வதிலும்   ஞானம்
       ஆர்வமாய்    திறன்   ஆற்றும்

இறையச்சம்    நல்லறிவுப்    புகட்டும்
       இதனால்   எச்சரிக்கப்    படுவேன்
குறைவிலா     அறிவினை    ஞானம்
       கண்டிடுவோர்  அதனைத்  தேடுவோர்

இறையச்சம்    வாழ்வின்   மணிமுடி
       இன்பம்   அருளும்   அணிகலன்
உறையவரும்   நற்கொடை  வள்ளல்
     உண்மை   உணர்த்தும்  அருள்வெள்ளம்

இறையச்சம்   நேர்வழி   நடத்தும்
       இடித்துரைக்கும்  தீவழி   நடப்பின்
கறையெச்சம்   இன்றி   வாழ்விக்க
       கடிந்துரைக்கும்  உரிமை  கொண்டு

ஞானத்தைத்    தேடுவோர்   நல்லறிவுடையோர்
       ஞாலத்தில்    அவர்புகழ்   நிலைக்கும்
வானத்தைத்     தொடும்   வல்லமையும்
       வாய்க்கப்    பெற்றது    ஞானமாகும்

பசும்பொன்னில்   உயர்ந்தது   ஞானம்
       பன்மதிப்புக்    கற்களும்   ஈடாகாது
பேசும்மொழி    தனில்அது   உரைக்கும் - அதில்
       பேதையரும்    அறிவுப்   பெறுவர்

ஞானம்   படைப்பாற்றல்   கொண்டது
       ஞானியர்   மேன்மை  அடைவர்
வானமுமில்லை   அதன்   எல்லை
       விரும்புவோர்த்  தமக்கு  கொள்ளை

கடவுளின்   செல்லப்பிள்ளை   ஞானம்
       காலத்தைக்   கடந்து   நிற்கும்
பாடவும்      பாக்கள்    இயற்றும்
        படைக்கவும்  கைகள்   இயக்கும்

ஞானத்தைப்    பொல்லார்   வெறுப்பர்
        ஞானத்திடம்   அழுக்காறு   கொள்வர்
பணத்தை    ஈட்டலே    அறிவென்பர்
        பண்பிற்கும்   அவர்விலை  பேசுவர்

இறைவா!    எத்துணை   உயர்ந்தது
       இவ்வுலகில்   நீர்தந்த   ஞானம்
மறைபொருள்    வெளிப்படுத்தித்  தன்னை
       மனிதரோடு  இணைத்து  செயலாற்றும்

குறைவிலா  ஞானத்தை   எனக்கீந்து
       கூர்மதி   விளங்கச்    செய்தருளும்
நிறைவினை    நோக்கி   நடைபோட
       நித்தம்   என்னுடன்  நிலைக்கட்டும்

மானுடரே!   கடவுளுக்கே  அஞ்சுங்கள்
      மற்றவை    யாவும்    வெறுமையே
காணிட    முடியா    அதிசயங்களைக்
     கண்ணிமை  வேளையில்  செய்திடுவார் 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 2 (கடவுளையேத் தேடுங்கள்)

தூயவர்  தூயவர்   தூயவரென்று
       தூதரும்   துதிகள்   பாடிடுவர்
நேயரும்   நன்புகழ்   போற்றிடுவர்
       நேசரின்   வான்புகழ்  வாழ்த்திடுவர்

ஏழையோர்   ஏற்றம்   பெறுவர்
      ஏதிலார்    அற்றம்   உறுவர்
கோழையார்   நெஞ்சம்  திடம்பெறும்
      கொடியவர்   வஞ்சம்   தடம்வீழும்

பசித்தவர்    அகடு   நிறைவர்
       பகட்டுவர்   பஞ்சம்   பிழைப்பர்
யாசித்தவர்   ஆசிகள்   மிகுவர்
       யாக்கை   வலியோர்  வீழ்ந்திடுவர்

தடுமாறு      வோரையவர்   தாங்கிடுவார்
       தாழ்ந்தோரை   அவர்   உயர்த்திடுவார்
மிடுக்கு       கொள்வோர்   தாழ்ந்திடுவர்
       மீக்கூறும்   வாயும்    அடைக்கப்படும்

புழுதியின்    நிலையில்    ஏழையரை
       புகழின்   மேட்டில்    உயர்த்திட்டார்
அழுதிடும்     அல்லல்    படுவோரின்
       அவலம்    அனைத்தும்   போக்கிட்டார்

தம்மில்   பற்றுடை   யோரடிதனை
      தடுக்கிடாமல்    அவர்   காத்தார்
இம்மில்    தீயோர்   யாவரும்
      இருளுக்கு   இரை   யாவர்

வலிமையில்   எவனும்   வல்லவனன்று
       வருத்திடுவார்     அவரை   எதிர்ப்போரை
வலிய       வீரராய்    எழுந்திடுவார்
       வார்த்தை    அம்பினை   எய்திடுவார்

உள்ளத்தில்   செருக்கு  வேண்டா
      உரையினில்    வீம்பு   வேண்டா
உள்ளத்தை   அறிபவர்   இறைவன்
      உள்ளதை   உணர்பவர்  அவரே

செல்வத்தில்     பெருமை    வேண்டா
        செழிப்பினில்    செருக்கு   வேண்டா
மேலவற்றில்     ஞானம்    பெருமைபடும்
        மீதொன்றும்    நிலைப்பது   அன்று

ஞானத்தின்   பெருங்கடல்   அவரே
       ஞாலத்தின்   மீட்பும்   அவரே
தானத்தின்     உறைவிடம்   அவரே
       தக்கசெயலும்   அளவிடுவார்  அவரே

உயிரளிப்பார்   உடைத்து   அழிப்பார்
     உயர்த்திடுவார்   உற்றவை   அகற்றுவார்
ஆயிரம்பேர்     அருகில்   வீழ்ந்தாலும்
     ஆண்டவர்    நம்மைக்   காத்திடுவார்

ஆயிரமாயிரம்   நம்மை    எதிர்த்தாலும்
       அணுகாது     நம்மை    எதுவும்
மாயுறும்    பொல்லார்க்கு தண்டனை
        மட்டில்    நாமேக்    காண்போம்

தீதும்   துயரும்  நெருங்காது
      தீயவர்   நட்பும்   சேராது
சூதும்    வாதும்    சூழாது
      சூழ்பவர்   இறைவன்  தூதரே

இரையைத்     தேடும்   சிங்கம்போல்
       இன்பம்     தேடி    அலைவோரே!
கரைசேர     வேண்டும்   எனில்
       கடவுளை   யேநாடித்  தேடுங்கள்       

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

இறைவனே யாவும் (தமிழ் கவிதை) பாகம் - 1 (அவரே எனது ஆற்றலுமானார்)

 ஆண்டவரில்   நான்   மகிழ்ந்திருப்பேன்
        ஆதலின்   குறை   எனக்கில்லை
மீண்டென்     ஆத்துமம்   தன்னை
         மிகுந்தக்   களிப்பில்   நிறைத்தார்

அவரே   எனது   ஆற்றலுமானார்
      அதனால்   எனதுள்ளம்   அக்களிக்கும்
எவரே     என்னை   எதிர்த்தாலும்
       எதற்கும்   அஞ்சிடேன்   நான்

என்துணை     நீராய்   இருப்பதனால்
      எக்கவலை  இன்றி  இளைப்பாறுவேன்
எத்துணை    இடர்  வரினும்
      என்னுள்ளம்   துயர்  காணாது

களைப்புற்ற  ஆன்மாவும்   களிகூரும்
     கர்த்தரே    என்னை  மேய்ப்பதனால்
இளைப்பாறும்  எந்தன்  உள்ளமும்
     இறைவன்  சமூகம்  இருப்பதனால்

துயருற்ற   வேளையில்   துணையானார்
      தூக்கியெனை   தோளில்  சுமந்தார்
அயருற்றவர்    அன்றுஎன்   இறைவன்
      அல்லும்   பகலும்   காத்திடுவார்

இருளும்   இடுக்கணும்   சேர்ந்தாலும்
       இனியேதும்   அஞ்சாது   உள்ளம்
அருளும்   இரக்கமும்   எனைசூழும்
       ஆண்டவர்    இல்லம்  செல்வேன்

திக்கற்றோர்   துணையும்  ஆனார்
     தீயோரின்   பகையும்   ஆவார்
நீக்கமற     எங்கும்   நிலைத்து
      நிறைந்த  அவர்தம் பேரன்பு 

நீதியும்    அன்பும்   நிறைந்தவராம்
       நீடித்தப்    பொறுமை  உடையவராம்
ஆதியும்   அந்தமும்   ஆனவராம்
      அனைத்தும்  ஆனவர்   என்னிறைவன்

ஒளியும்   வாழ்வின்   வழியுமானவர்
     ஒருவராய்    எல்லாம்   படைத்தவர்
குளிரும்   உள்ளங்கள்   ஆறுதலால்
     கூப்பிடும்   குரல்   கேட்டிடுவார்

வலிமை  மிகுந்தவர்   என்தலைவர்
      வல்லச்   செயல்கள்  செய்திடுவார்
வலிகள்     யாவும்    நீக்கிடுவார்
       வாஞ்சையாய்   நம்மை தேற்றிடுவார்

உன்னதர்    நிழலில்   வாழ்ந்திடுவேன்
      உறைவிடம்   எனக்கு  அவரிடமே
முன்னவர்    முகவொளி   நோக்கி
      முனைந்து    நான்   நடந்திடுவேன்

பணிந்திடும்    என்சிரம்   தாழ்ந்து
     பண்பாய்     என்கரம்    உயர்ந்து
அணிந்திடும்   என்செவி  அவர்குரலை
     அழைத்திடும்  என்வாய்   அவர்புகழை
     
வாயார    நான்   வாழ்த்திடுவேன்
      வானவர்  தலைவரை  நோக்கி
தீயாகப்    பரவும் வண்ணம்
      தித்திக்க  உம்புகழ்  உரைப்பேன்

கவித்திறன்   அளித்தவர்   அவரே
     களித்துப்    பாடும்   என்மனமே
குவிந்திடும்    கைகள்   அவரிடமே
     குனிந்திடும்   புறமும்  அவர்பதமே

புதன், 12 ஆகஸ்ட், 2020

நன்றி சொல்ல நாவில்லை ((தமிழ் கவிதை))

இது  எனக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும்படியான
ஒரு கற்பனை உரையாடல்

நான்: 
எண்ணில்லா  உயிர்தனை  படைத்தநீர்
    என்னைப்   படைத்தது ஏன்?
மண்ணில்   உதித்த   என்னில்
    மாண்பு    ஏதெனக்  கண்டீர்?

கடவுள்:
படைத்ததன்  நோக்கம்  பணியாற்ற
       படைத்தது   யாவும்  நன்றாகும்
கிடைத்ததன்   கீர்த்தி   யாதும்தக்க
       காலத்தில்  வெளித்  தோன்றும்

நான்:
எந்தாய்!  காலம்   கடந்தற்று
     எந்தன்  கடமை  என்னதென்று
விந்தையாய்    நான்  விழித்திருக்க
     வினவுவேன்   உண்மை  என்னவென்று

கடவுள்:
பிள்ளாய்!   காலம்    எனதாகும்
        பின்வரும்  காலம்  என்செயலே
ஆளாய்   உனைத்தெரிந்   தவன்நான்
        ஆக்குவேன்  தக்க   வேளைதனில்

நான்:
குற்றம் குறையாவும்    காண்கிறேன்
      கூசும்    வண்ணம்   பேசுகிறேன்
மற்றவர்    பிழைகண்டு  சீறும்நான்
      மதிகெட்டு  அலைவது  ஏனோ?

கடவுள்:
உந்தன் பாவம்நான்   மறந்தேன்
       உரிய   சினம்நான்  கொள்ளேன்
எந்தன்    பொறுத்தலில்    நீயிருக்க
       ஏதோ    இந்நிலை மறந்ததனால்

நான்:
தேவரீர்!    என்னைப்   பொறுத்தருளும்
       தேவையற்று    கடும்சினம்  கொண்டேன்
இவறியார்    நீரிருக்க   சூழல்தனில்
       இன்னா   செய்தேன்  நான்

கடவுள்:
எந்தன்   சூழலில்   நீயிருக்க
       ஏதுகாரணம்  சினம்  கொள்ள -  நீ
வந்த    நிலையில்  ஏதிருந்தாய்
       வருத்தி    உன்னை  வேதனையுற

நான்:
தந்தையே!   நான்   தவறிழைத்தேன்
        தப்பிக்க   சூழ்நிலை  என்றேன்
உந்தன்    நிழலில்   வாழ்வதனால்
       உள்ளம்   வருந்தத்   தேவையன்று

நல்வழி   காட்டிய   நல்தகப்பனும்
      நலம்   பேணிய   அன்புதாயும்
பல்வழி   நோக்கின்  அவர்தாம்
      படைத்தவர்  உந்தன்  பரிசன்றோ!

தந்தையின்   தாழ்ச்சி   தியாகம்போல்
       தாயின்    அன்பு   நேசம்போல்
குழந்தையின்  மாசின்மை  போன்று
       குணங்கள்   யாவும்  பெறவேண்டும்

நன்றி     சொல்ல     நாவில்லை
      நன்மை  பலவும்  செய்ததற்கு
கன்றினை   ஈன்றப்    பசுபோல
      கவனத்துடன்  எனைக்   காக்கின்றீர்

கற்பிப்பீர்   நின்கட்டளை   யாவும் - மனக்
       கண்முன்னே   என்றும்  நிலைக்க
அற்பனாய்     இல்லாது   நானும்
       அருங்குணம்  பெற்றிட  வேண்டும் 

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

நிறைவாய் கருணை பொழிவாய் (தமிழ் கவிதை)

இறைவா!   இந்த  உலகினிற்கே
நிறைவாய்  கருணை பொழிவாய் !

உலகம்  புத்துயிர்ப்   பெறணும் -  வாழும்
      உயிர்கள்   நலமும்  பெறணும்
நிலமும்    வளமைப்   பொங்கணும்
      நீரும்    தூய்மை  அடையணும்

காற்றின்   மாசு  நீங்கணும் -  பருவக்
      காலமும் சீராய்த்  தங்கணும்
ஆற்றின்    போக்கு  நிறையணும்
       அதன்  கழிவுயாவும் குறையணும்

இயற்கை  வளம்யாவும்  காக்கணும்
     இனிவரும்  தலைமுறைக்கு  வேணும்
செயற்கையின்  ஆதிக்கம்  நீங்கணும்
     செழுமைமிகு  பசுமை ஓங்கணும்

ஆடம்பர   ஆசைகள்  அழியணும் - இங்கு
        அவசியத்  தேவைகள்  நிறையணும்
இடம்பெற   வேளாண்மை  தழைக்கணும்
         இங்குப்  பசிப்பட்டினி  ஒழிக்கணும்

வாடும்   உயிர்கள்  காக்கணும்
        வறுமை   இன்றி  வாழணும்
தேடும்   நிம்மதி   நிலைக்கணும்
        தேவை  பகிர்ந்தே  உழைக்கணும்

உணவு    உடை   இருப்பிடமும்
      உரிமை  யாவரும்   அடையணும்
உணர்வுமனித  உணர்வு  இருக்கணும்
      உரியவிடு   தலையாவும்  தருக்கணும்

கலப்படம்   எதிலும்  ஒழியணும்
     கண்ணிய   வாணிபம்  நடக்கணும்
நலம்பட     மருத்துவம்  செய்யணும் - அதில்
      நாணயம்   நேர்மை   உய்யனும்

மனிதநேயம்   மண்ணில்  பெருகணும்
       மாண்பாய்   மனிதரை  மதிக்கணும்
இனிதேக்கல்வி  அதனைச்  சொல்லணும்
       இதில்வியாபார  நோக்கம்  தொலையணும்

நீதிநேர்மை   எங்கும்  நிலைக்கணும்
      நீளும்  லஞ்சம்ஊழல்  அழியணும்
சாதிமத   இனமீறுதல்  எல்லாம்
      சத்தம்   இன்றி   சாகணும்

பாகுபாடு  பட்சம்  பறக்கணும்
      பாட்டாளி  வர்க்கம்  உயரணும்
வகுபடும்  வர்ணம்  தகரணும் - இங்கு
      வாழும்   மனிதர்  ஒருசேரணும்

பஞ்சம்    பிணியாவும்  ஓடணும்
      பகை,போர்   யாவும்  வீழணும்
தஞ்சம்புகும்  அகதிகளைத்  தாங்கணும்
      தடிக்கும்   வன்முறைகள்  நீங்கணும்

ஆயுதப்    பெருக்கம்  அழியணும் - நல்
       ஆக்கும்   சக்தி   பெருக்கணும்
 ஓயாத     சண்டைகள்   ஒழியணும்
        ஒற்றுமையே   ஓங்கிப்  படரணும்

வறுமை    என்றில்லா   திருக்கணும்
       வளமை   ஊரோடும்   பகிரணும்
ஆற்றுமை   யாரோடும்  அமையணும்
       ஆறுதல்   தேடுவோர்   அடையணும்

வஞ்சம்     எண்ணத்தில்   வதங்கணும்
        வார்த்தையில்   உண்மை   இருக்கணும்
நெஞ்சத்தில்   நேசம்    தழைக்கணும்
         நேரிய   சிந்தனைப்   பெருகணும்

தனித்திரும்  பிள்ளைகளும் மண்ணில்
      தழைத்து     ஓங்கி      நிற்கணும்
கூனிநிற்கும்  மாந்தர்கோல்  ஓங்கனும்
      குன்றி     இருப்போர்   குறைதீரணும்

அடக்குதல்   யாவும்   அடங்கணும்
       அன்பின்வழி   யாரும்  நடக்கணும்
ஒடுக்குதல்   என்றும்  ஒழியணும்
        ஓங்கும்  அதிகாரத்திமிர்   ஓயணும்

மடமை    எங்கும்    மடியணும்
      மாசுகுணம்  மனதில் மாயணும்
கடமை   உணர்ந்து   உழைக்கணும்
       கட்டுப்பாடு  அதில்  திழைக்கணும்

கெட்டவர்   ஆளுகை   தொலையணும்
      கொடுமை  செய்வோர்  வீழணும்
சட்டம்   யாருக்கும்   ஒன்றென
      சமநீதி    இங்கு    அமைக்கணும்

திருடும்   கூட்டம்    திருந்தணும்
      திமிரும்   ஆணவம்   வருந்தணும் - அறிவுக்
குருடும்   கூனும்    மாறணும்
      கொடிய    ஆட்சிஎங்கும்   மாற்றணும்

நல்லவர்   உலகை   ஆளணும்
      நாதி   அற்றோர்   மகிழணும்
இல்லாத   மக்களும்  பெறணும்
      இதில்  ஏற்றத்தாழ்வு  நீங்கணும்

ஆளும்  வேந்தர்    எண்ணங்களை
      ஆண்டு    நீரும்  நடத்திடுவீர்
நீளும்   நீதிநிறை   ஆட்சிதனை
       நீரும்   எங்களுக்குத் தந்தருளும் ! 

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...