தந்தையும் தாயும் மறைந்தாலும்
தமையர் யாவரும் வெறுத்தாலும்
எந்தையாம் இறைவன் ஒருவரிடமே
என்றும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்
தோல்விகள் பலவும் கண்டாலும்
தொல்லைகள் ஆயிரம் சூழ்ந்தாலும்
கல்விகள் பலனற்றுப் போனாலும்
கர்த்தரை சார்ந்து நிற்பேன்
மாந்தர் இகழ்ந்து பழித்தாலும்
மலிவாய் என்னைத் தூற்றினாலும்
வேந்தர் இறைவன் துணைகொண்டு
வெற்றி ஒருநாள் கிட்டிடுவேன்
நண்பரும் பகையாய் மாறினாலும்
நன்றிகள் மறந்து உதைத்தாலும்
வம்பரும் வீண்பகை மூட்டினாலும்
வல்லவர் என்னைக் காத்திடுவார்
தலைவர்கள் நம்மை ஒடுக்கினாலும்
தன்னலம் கருதி புடைத்தாலும்
ஆலையின் கரும்பென பிழிந்தாலும்
ஆண்டவர் நமக்கு வாழ்வளிப்பார்
செல்வம் ஒன்றே வாழ்வென்போர்
சேர்ந்தே எம்மை வதைத்தாலும்
வெல்வோம் ஒருநாள் நிச்சயமாய்
வீணில் நாங்கள் போவதில்லை
ஆயிரம் கதவுகள் அடைத்தாலும்
ஆண்டவர் வானைத் திறந்திடுவார்
துயரம் இனியும் நெருங்காது
தூயவர் தூதரை அனுப்பிடுவார்
நெருக்கடி நம்மை இறுக்கினாலும்
நெருப்பின் வழியாய் போனாலும்
உருக்கமான அன்புடனே நம்மை
உன்னதர் இறைவன் நடத்திடுவார்
காண்பவை கண்ணை கவர்ந்தாலும்
கல்லையும் மானிடர் பணிந்தாலும்
மண்பதை மீதினில் நாங்களும்
மறுப்போமோ எங்கள் இறைவனை
உலகமே செல்வம்பின் ஓடினாலும்
உள்ளதை எல்லாம் சுருட்டினாலும்
கலகமே இந்நிலத்தில் நடந்தாலும்
கடவுள் துணையே நமக்குண்டு
கேள்விகள் வாழ்வில் எழுந்தாலும்
கெடுப்பார் நல்லதை தடுத்தாலும்
வேள்விகள் மாயை படைத்தாலும்
வல்லவர் நம்மை உயர்த்திடுவார்
வெறுமையை எங்கும் உணர்ந்தாலும்
வெறுப்போர் பலராய் இருந்தாலும்
பேறுடையான் என்றெனை உலகம்
போற்றப் பரமனே செய்திடுவார்
விரைந்து வந்திடும் நமக்குரிய
விடுதலை நாளிது முதலாய்
கரைந்து போகும் கண்டிட்ட
கடுமை யாவும் இம்மட்டும்
வந்திடுவர் இறைவனின் தூதர்
வந்தெம்மை விரைந்து மீட்டிட
தருகின்ற அக்களிப்பில் யாமும்
தன்னிலை மறந்து நிற்போம்.