மாந்தருள் சாதியைப் பேணும் கயவர்
மதம்பிடிக் களிறினும் கேடு
பொருள்: மனிதர்களுள் சாதியை சாதி வேற்றுமையைக்
கடைபிடிக்கும் கயவர்கள் மதம் பிடித்த யானையை விடக்
அதிக கெடுதல் செய்வார்கள்
சாதியின்கண் உயர்வு காணின் அஃது
சீமைக்கரு வேலம் ஒப்ப
பொருள்: ஒருவன் தனது சாதியைக் குறித்துக் கொள்ளும்
பெருமை சீமைக்கருவேலம் மரம் போன்றது. அது அவன்,
அவனுடைய பொதுசமுதாயத்தின் நலன்களை கெடுத்து
நாசமாக்கிவிடும்
பசும்பயிர் இழைந்து களையும் தேறும்
பகுத்தறிவும் சாதிக் கண்டு
பொருள்: பசுமையான பயிர்களுடன் களையும் வளர்வது
போல இங்கு பகுத்தறிவு பேசும் கூட்டத்திலும் சாதியம்
வளர்ந்து வருகின்றது
மதமெனும் மதுவினில் பிறந்த கொடுவிடம்
மனிதருள் சாதியப் பிரிவு
பொருள்: மதம் என்னும் போதை தரும் கொடிய மது
ஈன்றெடுத்த கொடிய விஷம் மனிதருள் காணப்படும்
சாதியப் பாகுபாடுகள்
உடல்நோகா கயவர் ஊதியம் கிட்ட
உருகொண்ட சாதியப் பிணி
பொருள்: உடல் வருத்தி உழைக்காத கயவர்கள் தங்கள்
வருமானத்தை, செல்வதை சேர்க்க உருவாக்கியது தான்
சாதிய பிரிவினைகள் மற்றும் சாதிய கொள்கைகள் என்ற
கேடான தொற்று நோய்
பிறப்பினால் மேல்கீழ் என்போர் மண்ணில்
இறப்பினால் எரிநீறு கலந்து
பொருள்: பிறப்பினால் ஒருவனை உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்பவர்கள் முடிவில் எரியூட்டப்பட்டு
அவர்களது சாம்பல் எல்லோரோடும் மண்ணில்தான்
கலக்கப்படும்
சர்ப்பம்முன் நுணலின் வாய்சிறு பூச்சியாய்
சாதீய ஆதிக்கக் கேடு
பொருள்: பாம்பின் வாயில் தவளை, அந்த தவளையின்
வாயில் சிறிய பூச்சி என்று மனிதரில் சாதி அடிப்படையில்
மனிதர் தம்முடன் வாழ்பவர்களை அடிமைப்படுத்தி அவர்களின்
உரிமைகளை சுரண்டும் கேடுகெட்ட மனப்பான்மை
இந்த சாதிகளில் உண்டு
பிறப்பால் ஒருவன் குணம் உயர்வெனில்
பிணத்தால் பெருமை உண்டோ ?
பொருள்: பிறப்பால் ஒருவனின் குணம்
உயர்வு தாழ்வென்று இருக்குமானால் அப்படிப்பட்ட
பெருமை பிணத்திற்கு சமமானது. மனிதன் தனிப்பட்ட
மேன்மையை அடையாமல் சாதியின் பெயரால்
பெருமை அடைந்தால் அவன் ஒரு பிணமே
கால்படும் கல்லை பணிவோன் தம்முள்
கீழ்ப்படும் மனிதரை ஒடுக்க
பொருள்: தன் காலில் மிதிபட்ட கல்லை எடுத்து
சிலைசெய்து அதை வணங்குகின்ற மனிதன் தனக்கு
ஒப்பான பிற மனிதர்களை சாதியை சொல்லி ஒடுக்கி
அவர்களை இழிவுபடுத்துகிறான்
கல்விசேர் செல்வம் உடைத்தும் சாதியர்
கல்லில் ஆபரணம் அனைய.
சாதிவெறி கொண்ட மனிதர்கள் எவ்வளவுதான்
படித்து, செல்வம் சேர்த்து பெருமை கொண்டாலும்
அந்த கல்வி, செல்வம், பெருமை கல்லின் மீது
சூட்டப்பட்ட அழகிய ஆபரணங்கள் போன்றதுதான்.