நேற்று இருந்தவர் இன்றில்லை
நாளை என்பது இன்றில்லை
காற்றுப் புதரை கலைப்பதுபோல்
கானல்நீர் மனிதர் வாழ்க்கை
நாளை என்பது இன்றில்லை
காற்றுப் புதரை கலைப்பதுபோல்
கானல்நீர் மனிதர் வாழ்க்கை
மாண்டவர் மீண்டதில்லை எனினும்
மரித்தவர் நினைவு மறப்பதில்லை
ஆண்டவர் பொழியும் ஆறுதலால்
ஆன்மாவும் அமைதி அடையட்டும்
மண்ணில் மனிதர் மரிப்பது
மறுக்க இயலாநியதி எனினும்
கண்ணீரில் மிதக்கும் கண்கள்
கடவுள் அருளைக் காணனும்
அழுகையில் ஆழ்ந்த முகமும்
அமைதி ஆறுதல் பெறணும்
எழுகையில் உம்முரு கண்டு
எல்லாம் நீரென்று அறியணும்
உறவை இழந்து வாடும்
உற்றவர்க்கு இறைவா நீரும்
உறவாய் நிலைத்து நின்று
உறுதுணைப் புரிந்திட வேண்டும்
தந்தை இழந்தோர் தனித்திருக்க
தாயை இழந்தோர் தவித்திருக்க
எந்தையாய் நீரும் எமக்கிருந்து
எம்மனம் மகிழ்ந்திட அருள்வீரே
இழப்பின் வலிகள் இருந்தாலும்
இறந்தவர் மீண்டும் வருவதில்லை
குழப்பத்தில் மனங்கள் குன்றும்முன்
குழந்தைகள் கரத்தைப் பிடிப்பவரே
நிலைத்த உறவொன்று நீரென்று
நித்தமுமை யாமும் நினைத்திருக்க
களைத்த உறவுகள் ஓய்வெடுக்க
கவலையின்றி மனம் இருக்குமோ?
கடந்துபோம் எல்லாம் என்றே
கருத்தினில் உண்டு என்றாலும்
கிடந்துபுரண்டு யாரும் அழுகையில்
கிட்டுமோ மனதில் உறுதிதான்
உள்ளத்தில் உறவுகள் வைத்தீர்
உறவுக்குள் உணர்வுகள் வைத்தீர்
கல்லுக்குள் ஈரமென நாங்கள்
கண்ணீரும் சிந்திட வைத்தீர்
இல்லாதவன் என்றே இருப்பது
இங்கே இனியதோர் வாழ்க்கை
எல்லாமுமான இறைவன் முன்னே
எமக்கு நிரந்தரம் ஏதுமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக