சனி, 30 மார்ச், 2024

வீணில் நாங்கள் போவதில்லை

தந்தையும் தாயும் மறைந்தாலும் 
    தமையர் யாவரும் வெறுத்தாலும் 
எந்தையாம்  இறைவன் ஒருவரிடமே 
    என்றும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன் 

தோல்விகள் பலவும் கண்டாலும் 
   தொல்லைகள் ஆயிரம்  சூழ்ந்தாலும் 
கல்விகள் பலனற்றுப்  போனாலும் 
     கர்த்தரை  சார்ந்து நிற்பேன் 

மாந்தர் இகழ்ந்து பழித்தாலும் 
   மலிவாய் என்னைத் தூற்றினாலும் 
வேந்தர்  இறைவன்  துணைகொண்டு 
   வெற்றி  ஒருநாள் கிட்டிடுவேன் 

நண்பரும் பகையாய் மாறினாலும் 
    நன்றிகள் மறந்து உதைத்தாலும் 
வம்பரும்  வீண்பகை மூட்டினாலும் 
    வல்லவர் என்னைக் காத்திடுவார் 

தலைவர்கள் நம்மை ஒடுக்கினாலும் 
    தன்னலம்  கருதி  புடைத்தாலும் 
ஆலையின் கரும்பென பிழிந்தாலும் 
   ஆண்டவர்  நமக்கு  வாழ்வளிப்பார் 

செல்வம்  ஒன்றே வாழ்வென்போர் 
    சேர்ந்தே  எம்மை வதைத்தாலும் 
வெல்வோம்  ஒருநாள்  நிச்சயமாய் 
    வீணில்  நாங்கள் போவதில்லை 

ஆயிரம்  கதவுகள் அடைத்தாலும் 
    ஆண்டவர்  வானைத் திறந்திடுவார் 
துயரம்  இனியும் நெருங்காது 
    தூயவர் தூதரை அனுப்பிடுவார் 

நெருக்கடி நம்மை இறுக்கினாலும் 
    நெருப்பின்  வழியாய் போனாலும் 
உருக்கமான  அன்புடனே நம்மை 
    உன்னதர்  இறைவன் நடத்திடுவார் 

காண்பவை கண்ணை கவர்ந்தாலும் 
    கல்லையும் மானிடர் பணிந்தாலும் 
மண்பதை  மீதினில்  நாங்களும் 
    மறுப்போமோ எங்கள் இறைவனை  

உலகமே  செல்வம்பின் ஓடினாலும் 
    உள்ளதை  எல்லாம் சுருட்டினாலும் 
கலகமே  இந்நிலத்தில் நடந்தாலும் 
    கடவுள்  துணையே நமக்குண்டு 

கேள்விகள் வாழ்வில் எழுந்தாலும் 
    கெடுப்பார் நல்லதை தடுத்தாலும் 
வேள்விகள்  மாயை படைத்தாலும் 
    வல்லவர்  நம்மை உயர்த்திடுவார் 

வெறுமையை எங்கும் உணர்ந்தாலும் 
     வெறுப்போர் பலராய் இருந்தாலும் 
பேறுடையான் என்றெனை உலகம் 
     போற்றப்  பரமனே செய்திடுவார் 

விரைந்து வந்திடும் நமக்குரிய 
   விடுதலை நாளிது முதலாய் 
கரைந்து போகும் கண்டிட்ட 
   கடுமை யாவும் இம்மட்டும் 

வந்திடுவர் இறைவனின் தூதர் 
    வந்தெம்மை விரைந்து மீட்டிட 
தருகின்ற அக்களிப்பில் யாமும் 
   தன்னிலை மறந்து நிற்போம்.

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...