திங்கள், 27 ஜூலை, 2020

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))

பயன்படுத்தும் இறைவா எனைப்  பயன்படுத்தும்
         பண்படுத்தி   எனைப்   பயன்படுத்தும்
வியந்திடும்  அளவென  எனைப்   பயன்படுத்தும்
         விரயம்   போகாது   பயன்படுத்தும்
பொருள் பகட்டுத்  தேடுவோர்  தம்மின்
         போதாது   காலம்  என்பர்
அருள்   வேண்டித்  தேடும்  அன்பர்
         அருகியது  காலம் என்பர்
வீணாய்  போனது  நாட்கள்  எல்லாம்
       வீண்குறை  குற்றம்   என்றே
தேனாய்ப்    பேசும்  உறவுகள்  தாமே
       தேடிவந்து   ஏளனம்  செய்வர்
காலம் எனக்கு அதிகம்  உண்டென
        காத்திருந்தேன்   காரணம்   அறியா
குலம்  கோத்திரமென  மதம் மாச்சர்யமென
         குன்றிப்போன  மனித உளங்கள்
குற்றம்  சொல்லக்  கூடி நிற்பர்
        குறை  சொல்லக்  குவிந்திடுவர்
உற்றார்  எனும் பேரிலே  எனக்கு
       உதவிலா   அறிவுரை  வழங்கிடுவர்
தாழ்மன   வெளிப்பா   டென்பர்   சிலர்
        தன்னை     நான்  உயர்த்திட
நெகிழ்மன  வெளிப்பா   டென்பர்   சிலர்
        நான்  என்னைத் தாழ்த்திட
எனது  மனமோ   நான்  அறியேன்
      ஏதுபிறர்   எனை   அறிய ?
உனதுக்    கைவினைப்  பொருள்  நான்
      உண்மை  நீரே   அறிவீர்
உறவுகளும்  என் தாழ்வு  விரும்ப
      உறவின்  உறவு  ஊறுநினைக்க
தரவுஏது    என   நான்  நோக்கின்
      தன்மை   எனதென அறிவேன்
திரும்பிக்   காணும்  எனது  வாழ்வில்
       திருத்திட   முயன்றும்  பயனில்லை
விரும்பித்    தேடிய   எதிர்  காலம்
       விரயமான    கடந்த   காலம்
நாட்கள் ஓடின மனிதரும் ஓடினர்
       நான்  மட்டும்  சோம்பலில்
ஆட்கள்   தேடும் படலத்தில் ஆதரவற்று
       அடங்கி  நான்  போனேன்
கணக்கிட்டேன்  எனது  நாட்களை  மீளவும்
        காணவில்லை  நிறை  யாதும்
இணக்கமிலா  சூழலில்  இருக்க விரும்பாது
        இறைவனே  ஆதாரம்  என்றேன்
ஒடுக்குதலும்   அடக்குதலும்  யான் விரும்பிலேன்
       ஒடுங்கிலேன்    மனிதர்  புறக்கணிப்பால்
தடுக்க   நினைத்ததைக்   கொடுப்பவன்  எவன்
        கொடுக்கநீர்     நினைத்ததைத்  தடுக்க
என்னிலும்  என்னை   யறிந்த  உம்மைவிட
        ஏதுவிருப்பம்  உலகில்  எனக்குண்டு
எண்ணிட  முடியாக்   கீர்த்திதனை  நீர்
        எனக்குச்   செய்ய   வழியுண்டு
கவலை  இல்லை  எந்தன்   மனதில்
        காப்பவர்    நித்தம் நீரன்றோ
ஆவலாய்    உம்மைத் தேடுவதில் நான்
        ஆர்ப்பரித்தால்  போது  மன்றோ
உந்தன்  கருணையில்  நான் வாழ்ந்திட
      உள்ளவலிமை  நான்  உணர்ந்தேன்
எந்தன்  குறையில்  நான் வீழ்ந்திட
       எள்ளி    நகையாட   அறிந்தேன்
பொருள்  பெரிதன்று  பொன்னும் பெரிதன்று
        பகட்டும்  உறவும்  பெரிதன்று
அருள்   ஒன்றேவேண்டி  உம்மை ஏங்கும்
        அடியானை  நீர்  பயன்படுத்தும்
கையாலா காதவன்  கையாள் ஆகாதவன்
      கைவினை எனதன்று   யாவும்நின்
கைதனால் ஆனதென்று யாரும் அறிவர்
      கைப்பாண்டம்  நான்  குயவனே !
எல்லாம்  எனக்கு  இருந்தாலும் இன்னும்
        ஏதோ  ஒன்றைத்  தேடுகின்றேன்
கல்லார்    கற்றல்  தேடுதல்  போல்
        கிட்டவில்லை என்தேடல்  வேட்டை
வனைந்திடும் என்னை உம்திரு வுளம்போல்
           வளைத்திடும்  நின்னடி  நோக்கி
அணைத்திடும்  ஆதரவாய்  எனை  நாளும்
           அணிந்திடுவேன் நின்திரு  வருளை
சுயமாய்   எனை  விட்டிடாது    நிந்தன்
       சுமையாய்  என்றும்  ஆகிடாது
நயமாய்   உந்தன்  விருப்பம்  போல்
       நடக்க  என்னைப்  பயன்படுத்தும்
அன்பு  வற்றிப்   போகையில் -  நீதி
        அருளும்    அற்றுப்  போகையில்
வன்புணர்  மிகுந்த வேளையில் நிந்தன்
        வாளாய்   என்னைப்  பயன்படுத்தும் 


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...