திங்கள், 21 செப்டம்பர், 2020

வதந்தியா? வாந்தியா? (இன்றைய சிந்தனைக்கு)

அது ஒரு அமைதியான ஒற்றுமையான கிராமமாக இருந்தது. அங்கு பல மதங்களை, சாதிகளைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வந்தனர்.  "கோகு"  என்பவர்  ஒரு மதம் (அல்லது சாதி)யைச் சேர்ந்தவர்.  "மாகு" என்பவர் இன்னொரு மதம் (அல்லது சாதி) யைச் சேர்ந்தவர். "மாகு" என்பவர் கடை வைத்திருந்தார்.  சற்று முன்கோபக்காரர். அன்று "கோகு"  சாமான் வாங்க "மாகு" வின் கடைக்கு வந்தார். விற்பனையில் ஒரு சிறு வாக்குவாதம். வாக்குவாதம் முற்ற,  மாகு கோகுவை அடித்து விட்டார்.  அடிவாங்கிய கோகுவும் அமைதியாக வீட்டிற்குள் வந்து அமர்ந்தார். மனது பொங்கியது. பழிவாங்கத் துடித்தார்.  தனியாகப் பழிவாங்க பலம் இல்லை என்று உணர்ந்த கோகு, சமூக ஊடகம் தான் சரியான ஆயுதம் என்று நினைத்து அதில் மாகு தன் மதம் (அல்லது சாதி) பற்றி மிகக் கேவலமாக பேசியதாக பொய்யாக வதந்தியை பரப்பினார்.  அனுப்பிய 24  மணி நேரத்திற்குள் ஒன்று இரண்டாக, நாலாக, நூறாக வதந்திகள் வெல்வேறாக பரவின. முடிவில் கலவரத்துடன் முடிந்தது. அமைதியாக இருந்த ஊரில் இன்று எப்போது கலவரம் வெடிக்குமோ என்ற அச்சத்துடனே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

இன்று உலகில் நடைபெறும் பல இன, மத, சாதி   கலவரங்களுக்குப் பின் ஒரு மனிதனின் தனிப்பட்ட வெறுப்பே காரணம் என்று அறியாது சமூக ஊடகத்தின் செய்திகள் பரப்பப்படுகின்றன.  அவற்றின் உண்மை நிலை உணர்ந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ள முடியாதவாறு மிகவும் பிஸியாக அவற்றை உடனுக்குடன் பிறருக்கு பகிர்ந்து விடுகிறோம்.  ஒருவர் சாப்பிட்டு எடுத்த வதந்தியை (வாந்தியை)  நாம் தின்று வதந்தியாக (வாந்தியாக) அடுத்தவர்க்கு கொடுக்கிறோம். சமூக ஊடகத்திலும் வெட்டி பேச்சிலும் நேரத்தை பிறரோடு செலவிடுவதால் நாம் எப்போதுமே பிஸியாக இருக்கிறோம்.  கடவுளை பற்றி பேசுபவர்களை, எழுதுபவர்களை இழிவாக நினைக்கிறோம்.  கடவுளைப் பற்றிய பகிர்தலை அசட்டை செய்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நாம் எவ்வளவு பெரிய சுயநலவாதிகள்!

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." -   (திருக்குறள் 423)

"தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்;அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்"  (நீதிமொழிகள் 17:4)

"புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்; அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்" (நீதிமொழிகள் 18:8)

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...