அவள் ஒரு ஏழ்மை நிலையிலிருந்த ஒரு விதவைத் தாய். தன்னுடைய இளம் வயதிலேயே குடி நோயாளியான தன் கணவனை இழந்தவள். எந்த ஒரு நிதி ஆதாரமுமின்றி, ஒரு மகனை மட்டும் அவளுக்கு கொடுத்து விட்டு அந்த கணவன் இறந்து விட்டான். அவள் பல இடங்களில் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து அந்த மகனை வளர்த்து வந்தாள். தன்னுடைய இயலாமையிலும் அவனுக்கு நல்ல உணவளித்து, நல்ல ஆடைகளை உடுத்தி அழகு பார்த்தாள். தன் நோய்களையும் வேதனைகளையும் அவனுக்குக் காண்பிக்காமல் தனக்குள் வைத்துக்கொண்டாள். உழைத்து உழைத்து அவளது உடல் உருக்குலைந்தது. எனினும் தன் மகனை அவள் பட்டதாரியாக்கி விட்டாள். அந்த மகன், பட்டதாரியான பின்னும் தாயின் தயவில், இரண்டு ஆண்டுகள் பிழைத்துவந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. சம்பளத்தில் வந்த பெரும் பங்கை மது, மாது, சூது ஆட்டம் என செலவிட்டான். தன் கண்ணைக் கவர்ந்த ஒரு விலைமாதுவின் அழகில் மயங்கி அவளை காதலிக்கத் தொடங்கினான். இது பலர் சொல்லி அந்த தாயின் காதுகளில் விழுந்தது. வேதனையுற்றாள். மகன் திருந்துவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். ஒரு நாள் அந்த அந்த விலைமாதுவை வீட்டிற்கு கூட்டி வந்து, "அம்மா, நான் இவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்ல, தாய் கண்ணீர் விட்டுக் கதறினாள். மகனைக் கெஞ்சினாள். ஆனால் மகன் தாய்க்கு செவி மடுக்கவில்லை. மகனின் மீது உள்ள அக்கறையில் அந்த விலைமாதுவை அடித்து, திட்டி வீட்டை விட்டு அனுப்பினாள். விலைமாதுவை விட்டு விட அந்த மகனுக்கு மனம் கேட்கவில்லை. அவளிடம் சென்று "அம்மாவுக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொள்வோம். நான் இங்கேயே உன்னுடன் இருந்து விடுகிறேன்" என்றான். அதற்கு அந்த விலைமாது, "உன் அம்மாவைக் கொன்று அவளது இதயத்தை நீ எனக்குப் பரிசாகக் கொடுத்தால் தான் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்" என்றாள். தாயின் பாசமா அல்லது விலைமாதுவின் காதலா என்ற நிலையில், விலைமாதுவின் மீதான மோகம் அவன் கண்களை மறைத்தது. வீட்டுக்குச் சென்றான். அம்மா அன்போடு உணவு பரிமாறினாள். சாப்பிட்டு முடித்த பின், மிக அதிகமாக மது அருந்தினான். போதை தலைக்கு ஏற, மோகம் மனதை சூழ, வீட்டிலிருந்தக் கத்தியால் தன் தாயைக் குத்திக் கொலை செய்தான். பின், தாயின் இதயத்தை எடுத்துக் கொண்டு விலைமாதுவின் வீட்டிற்கு பதட்டமாக ஓடினான். ஓடும் வழியில், ஒரு பெரிய கல் அவன் காலை இடறியது. கீழே விழுந்து அவன் காலில் அடிபட்டது. அவன் கைகளில் வைத்திருந்த தாயின் இதயம் சொன்னது, "மகனே! பார்த்து போ. ரொம்ப அடிபட்டுவிட்டதா?". கேட்டதும், அவன் மனம் உடைந்தது. நேராக விலைமாதுவின் வீட்டிற்கு சென்று, அவளிடம் தாயின் இதயத்தைக் கொடுத்தான். அவள் அதைப் பெற்று வேடிக்கையாக சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது, தான் வைத்திருந்த கத்தியால் அவளைக் குத்திக் கொன்று விட்டு தன்னையும் மாய்த்து கொண்டான்.
பலர் இன்று காமத்தை காதலாக, சிநேகமாக நினைத்து, உண்மையான அன்பினைத் ஒதுக்கி விடுகின்றனர். அந்தத் தாயின் அன்பினைப் போலத்தான் நாமும் எவ்வளவு கடவுளை விட்டு விலகி அவருக்கு எதிராகச் சென்றாலும், கடவுளும் நம்மிடம் பல வேளைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார்,
"மகனே! பார்த்து போ. ரொம்ப அடிபட்டுவிட்டதா?"
உண்மையான அன்பிற்கு எல்லை என்பதே இல்லை. அதனை வள்ளுவரும்,
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்." என்று வலியுறுத்தி உள்ளார்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்." என்று வலியுறுத்தி உள்ளார்.
"அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.
அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். (1 கொரிந்தியர் 13:4-7).
அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். (1 கொரிந்தியர் 13:4-7).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக