திங்கள், 19 அக்டோபர், 2020

அகந்தையை ஆணடவர் வெறுப்பார்

சீனாவின் தென் பிராந்தியத்தில் ஜாங் யோங் என்ற மன்னர்  ஒருவர் ஆண்டு வந்தார். தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட எல்லா ஊர்களிலும் மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அலுவலர்களை நியமித்திருந்தார்.  அதில் ஒருவன் வாங் சு,  ஒரு ஊரில் அலுவலராக நியமிக்கப்பட்டான்.  அவன் ஒவ்வொரு மனிதரிடம் ஒவ்வொரு விதமாக பாகுபாடு காட்டினான்.  ஏழைகளிடமும் எளியவர்களிடமும் அகந்தையாகவும், செல்வந்தர்களிடமும் அரசு பதவி வகித்தவர்களிடம் பவ்வியமாகவும் நடந்து வந்தான்.  ஏழைகளின் மனுக்கள் தாமதமாகவும் அவனால் பரிசீலிக்கப்பட்டன. 
அவனை தட்டிக் கேட்க முடியாமல் பலரும் வாய் பொத்தி நின்றனர். பலநாட்கள்  இப்படி அவனுடைய கூத்து நடந்தது.  ஒருநாள் அது மன்னர்  ஜாங் யோங் காதிற்கு எட்டியது.  மன்னர்  தன் உடைகளைக் களைந்து பாமர உடை அணிந்து, வாங் சுவின் அலுவலகம் சென்றார். ஒரு மனுவை வாங் சுவிடம் நீட்ட, வெளியில் சென்று காத்திருக்குமாறு ஆணை இட்டான். மன்னரும் பவ்வியமாக, வெளியில் சென்றுக் காத்திருந்தார்.  அதற்குள், மன்னரின் உதவியாளர் ஒருவன்  வாங் சுவை சந்திக்க  வருவதாக தகவல் கிடைக்க, வாங் சுவும் அவனை வரவேற்க  வாசலில் காத்திருந்தான். வந்த மன்னனின் உதவியாளர், வாங் சுவிடம் ஒரு மடலை கொடுத்து விட்டு சென்று விட்டான். அதை விரித்து படித்து பார்த்த வாங் சுவுக்கு அதிர்ச்சியில் உடம்பு வியர்த்தது. அதில், "மன்னர் உங்களை சந்திப்பதற்காக வெகு நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார். நீரும் அவரை அசட்டை செய்து விட்டீர்" என்று எழுதப் பட்டிருந்தது. வாசலுக்கு வெளியே நின்ற எல்லோரையும் நோக்கினான். அங்கு அவர்களில் ஒருவராய் மன்னர் பாமர உடையில் காத்திருந்தார். நேராகச் சென்று மன்னரின் காலடியில் விழுந்து,  "மன்னரே! என்னை மன்னியுங்கள். தாங்கள் இப்படி பாமர கோலத்தில் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆதலால் உங்களைக் காத்திருக்க வைத்து விட்டேன். நீங்கள் அழைத்திருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!" என்று  கதறினான்.  மன்னர் அவனிடம் சொன்னார், "அப்படியென்றால் நீ, மன்னர்  ஜாங் யோங் என்ற மனிதருக்கும் அவருடைய மாண்பிற்கும் மதிப்பு அளிக்கவில்லை. மாறாக என் அரச உடைக்கும் என் அரச பதவிக்கும் மட்டுமே மதிப்பு அளித்திருக்கிறாய்". பின்பு, மன்னர் அவனுடைய பதவியைப் பறித்து, நூறு கசையடி கொடுக்க ஆணையிட்டார். 

இன்று, மக்கள் பணியில், பொதுச் சேவையில் அரசு மருத்துவ மனைகளில் வேலை செய்யும் சிலர் தங்கள் அதிகாரத் தோரணையில் ஏழைகளிடம், எளிய உடை அணிந்தவர்களிடம்  ஒரு விதமாகவும் செல்வர்களிடம், அதிகாரம் மிக்கவர்களிடம் ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகின்றனர். சில அரசு வங்கிகளில் வேலை செய்யும் வயது மூத்த பக்குவப்பட்ட முதிய அலுவலர்களிடம் கூட இந்த நடைமுறைகளைக் காண முடிகிறது.  மக்கள் பணிகளை செய்வதற்கே இவர்கள் அரசாங்கத்திடமிருந்து (மக்களிடமிருந்து பெறப்பட்ட) வருமானத்தை வாங்குகின்றனர். அதை செய்வதற்கு ஆணவம், செருக்கு மற்றும் கையூட்டு(அதற்கு உரிய பெயர் திருட்டு, பிச்சை, வழிப்பறி).

"உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்; ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்; அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன்". (எசாயா 13:11)

"இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி." (நீதிமொழிகள் 16:5)

"இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்! ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்! செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!"   (1 சாமுவேல் 2:3)


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...