திங்கள், 28 டிசம்பர், 2020

இறைவன் என் காவியத் தலைவன் (தமிழ் கவிதை) பாகம் - 7

 நானும்  எந்தன்   வீட்டாரும் 
   நாயகன்  இறைவனைத்  துதிப்போம் 
வானும்   வையமும்   ஆளும் 
   வல்லவரினும்  வேறு  யாருண்டு?

ஆண்டவருக்குப்  புகழ்   பாடுவேன் 
   அவர்  மாட்சியுடன்  வென்றார் 
அண்டமும்   நாடுகளும்  நடுங்கட்டும் 
   அனைத்தையும்  ஆண்டிட  வருவார் 

அஞ்சாது   எனதுள்ளம்  என்றுமே 
   ஆண்டவர்    எங்கள்   துணையிருக்க 
வஞ்சகம்   செய்யும்  மனிதரை 
    வீழ்த்தி   புழுதியில்  அமிழ்த்துவார் 

ஆயிரம்    பகைவர்    எனைச்சூழ்ந்தும் 
    ஆதிக்க    சக்திகள்   தலைநிமிர்ந்தும் 
உயிரைக்    கொல்ல   படைவந்தாலும் 
    உடைத்து    எறிவார்   அனைவரையும் 

ஆண்டவரே   எனது   ஆற்றல் 
   அவரே    எந்தன்   மீட்பும் 
ஆண்டவர்  போரில்  வல்லவர் 
    அவரை   நான்  போற்றுவேன் 

எமக்கெதிராய்  ஆயுதம்  நிற்காது 
   எதிரிகள்   எம்கண்முன்  நில்லார் 
எமக்கு      முன்னிருப்பவர்   கடவுள் 
   எம்மை  வெறுப்போர்  மூழ்கிடுவர் 

ஆண்டவரின்  வலக்கை வலிமையானது 
   அவர்தம்கை   பகைவரை  ஒழிக்கும் 
மாண்புற்ற   அவரது    வலக்கை 
   மாட்சியால்  எதிரியைத்  தகர்த்தெறியும் 

எரியும்     உம்சினத்தீ    பகைவர் 
   எல்லாரையும்  தாளடிபோல்  எரிக்கும்
பேரிடர்    கண்டுஅநீதர்   யாவரும் 
    பெரிதும்   கலங்கி    நிற்பார் 

எங்கள்  எதிரிகள்   ஆணவத்தோடே 
   எம்மை   ஒழிக்க   நினைக்கின்றனர் 
தங்கள்   சூழ்ச்சிகளாலே  எங்கள் 
   தகுதியை  உரிமையை  பறிக்கின்றனர் 

எங்கும்   நாங்கள்  இல்லாதவாறு 
   எங்களைத்  துரத்தி  வேட்டையாடி 
எங்களுக்குள்ள   யாவும்  பறிக்க 
   எல்லா   இடமும்  ஆக்கிரமித்தனர் 

நீரோ   ஆண்டவரே!  இதுகண்டு 
   நீடித்த    பொறுமை  காக்கின்றீர் 
துரோகம்   செய்வோர்   உம்முன் 
   துணிந்தே   பாவம்   செய்கின்றனர் 

ஆண்டவரே!  உம்மையன்றி  எமக்கு 
   ஆதரவுதர   எத்தெய்வம்   உண்டு ?
கண்டதைவிட   காணாத   தூயவர் 
    காலம்   யாவும்   புகழ்ச்சிக்குரியவர் 

அஞ்சத்தக்கவர்   அருஞ்செயல்   ஆற்றுபவர் 
    ஆள்பவர்     யாரும்   உமக்கடங்குவர் 
தஞ்சம்    புகுந்தோரை   நீர்மீட்டு 
     தகுந்த    இடத்தில்   வைப்பீர் 

எம்முன்    சென்று  எமைநடத்துவீர் 
    என்றுமுள   உரிமைத்   தருவீர் 
உம்கைவன்மை  கண்டு   கல்போல் 
    உம்மெதிரிகள்  அஞ்சி  நிற்பர் 

உம்திரு   உறைவிடம்  இருக்கும் 
    உரிமைச்   சொத்தை  எமக்கருள்வீர் 
எம்மை    உம்கோவில்  முற்றத்தில் 
    என்றும்    நிலைபெறச்   செய்வீர் 


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...