செவ்வாய், 22 டிசம்பர், 2020

மனந்திரும்ப இது ஓர் ஏற்ற காலம் (இன்றைய சிந்தனைக்கு)

ஒருவனை   நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் குற்றவாளியாக குற்றவாளிக்  கூண்டில் நிறுத்தி இருந்தனர். நீதிபதியும் வந்து  அவரது  இருக்கையில்  அமர்ந்து கூண்டில்  நின்ற  குற்றவாளியை  ஒரு பார்வை  பார்த்தார்.
அதே  நீதிபதியால் அவன் பல குற்றங்களுக்காக பலமுறை சிறைச்சென்று, திரும்பவும் வெளியே வந்து குற்றங்களை செய்து கொண்டே இருந்தான்.  இந்தமுறை நீதிபதிக்கே சலிப்பு உண்டாகி விட்டது. தண்டிக்க  தண்டிக்க திருந்துவான் என்று நினைத்தால் அவன் திரும்ப திரும்ப தவறுகளையே செய்து கொண்டிருந்தான். இப்போது என்ன செய்வது  என்று தெரியாமல்  திகைத்த  நீதிபதி, மறுநாள்  அவனை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த  சொல்லிவிட்டு, பிற வழக்குகளை  கவனிக்க ஆரம்பித்தார். பணிமுடிந்து  நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வருகின்ற  வழியில், ஒரு  தாய் ஒரு மருத்துவமனையின்  வாசலில் புற்றுநோயால்  இறந்து போன தன் மகனை வைத்து அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய  அழுகை  அந்த நீதிபதியின் மனத்தை உடைத்தது. தன்  காரிலிருந்து இறங்கி அவளுக்கு தன்னால் முடிந்த ஆறுதலையும் உதவியும்  செய்து விட்டு, அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தார். அங்கு  பல சிறுவர்கள் புற்றுநோயால் தங்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.  இதில் பல சிறுவர்கள் தாய்தந்தை இல்லாத அனாதைகள். நீதிபதி  கண்கலங்கினார். 
அடுத்தநாள் அந்த  வழக்கமான குற்றவாளியை நீதிபதிமுன்  நிறுத்தினர்.  தன் தீர்ப்பை  அந்த குற்றவாளிக்கு வாசித்தார். குற்றவாளி  ஒருமாதம் அந்த மருத்துவமனையில் தங்கி இருந்து  அங்கு சாவுக்காக போராடும் அந்த சிறுவர்களுக்கு  பணிவிடை செய்ய வேண்டும்  என்று  உத்தரவிட்டார். குற்றவாளியும் போலீஸ் கண்காணிப்பில்  அந்த மருத்துவமனையில்  தன் பணியினை தொடங்கினான். சிறுவர்கள் ஒவ்வொருவரும் அவனிடம் அன்பாக பழகினர். சிறுவர்கள் படுகின்ற வேதனை அவனுக்குள் ஒரு உறுத்தலை ஏற்படுத்தியது. அது அவனுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது.  சிறுவர்களை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான். இதற்குள் ஒருவாரம் கழித்து அவன் கவனித்த சிறுவர்களில் ஒருவன் மரித்துப் போனான்.  இது அவனை  வெகுவாக பாதித்தது.  மனஅழுத்தத்தை கொடுத்தது. வேதனைப்பட்டான். நொறுங்கிப்போனான். இனியும் ஒரு சிறுவன் கூட  சாகக்கூடாது  என்று நினைத்து இரவும் பகலும்  அவர்களுக்காகவே  தன் முழுநேரத்தையும் செலவிட்டான் . 

இப்படித்தான்  பிறருடைய வேதனைகளையும் கஷ்டங்களையும் நோய்களையும் துயரங்களையும் காணாதவரை நாமும்  தவறுகளை செய்து கொண்டிருப்போம். கடவுளும் நம்மை கருணையோடு மன்னித்துக் கொண்டிருப்பார். அந்த கஷ்டம் நமக்கு என்று நினைத்தால்  நாம் கடவுளுக்கு எதிராக மனிதருக்கு எதிராக எந்த தவறும்  செய்ய மாட்டோம்.
தயவுசெய்து, இந்த காலத்தை  நோக்குங்கள். இது  மனந்திரும்ப  ஏற்றக் காலம். தவற விட்டால், நாமும்  இலக்காவோம். எளிதாய் நாமும் எடுத்துக் கொள்ள  வேண்டாம். எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது 

தயவுசெய்து,  தொடக்கநூல் 6,7,18, 19 அதிகாரங்களையும்,  யோனா 1,2,3,4 அதிகாரங்களையும் வாசித்து மனம் மாறுங்கள்.   கடவுள்  கனிவும் அதே நேரம் நீதியும்  உடையவர். தீமையை பொறுக்கமாட்டார் என்பதை  மறக்க வேண்டாம்

 
   

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...