என்மேல் உம்ஆவியை ஊற்றும்
எனக்கு அருள்பொழிவு செய்யும்
வானகம் இருந்தே உந்தன்
வரமதை பொழிவீர் இறைவா
எனக்கு அருள்பொழிவு செய்யும்
வானகம் இருந்தே உந்தன்
வரமதை பொழிவீர் இறைவா
ஒடுக்கப்பட்டோர் வாழ்வு பெறும்
ஒப்பில்லா நற்செய்தி நவிலவும்
நடுக்கமுள்ளோர் உள்ளம் உடைந்தோர்
நலமும் திடமும் பெறவும்
சிறைப்பட்டோர் விடுதலை நாளினை
சிக்குண்டோர் விடியலின் நாளினை
பறைசாற்றவும் ஆண்டவர் என்னைப்
பணியாளாய் அனுப்பி உள்ளார்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை
அறிவிக்கவும் நம்கடவுள் அநீதிக்கு
தண்டனை கொடுக்கும் நாளினை
தெரிவிக்கவும் என்னை அனுப்பினார்
துயருற்று அழுவோர் தம்கண்ணீர்
துடைக்கவும் ஆறுதல் பெறவும்
ஆயரற்று தவிக்கும் ஆடுகளை
ஆயன்தேடி மீட்கும் நாளினை
இயம்பவும் சாம்பலுக்கு பதிலாய்
இன்பமும் புலம்பலுக்குப் பதிலாய்
உயர்வின் தைலம் வழங்கிடவும்
உடைந்த உள்ளத்திற்குப் பதிலாய்
நயம்புகழ் ஆடையென வழங்கவும்
நீதிக்கு குரலெழுப்பவும் அனுப்பினார்
நீவீர் ஆண்டவரின் குருக்களென
நீதியின் கடவுளின்' பணியாளரென
ஆவீரென்றே ஆண்டவர் உரைத்தார்
அவர்கள்தம் வாக்கை மாற்றிடார்
வேற்றினத்தார் செல்வம் நம்பங்காகும்
வேண்டிய மட்டும் அவர்கொடுப்பார்
தூற்றிய வாய்களும் போற்றிடும்
தூயவர் நம்துணை நின்றாரென்றே
இகழ்ச்சிக்கு மாற்றாய் நாமும்
இருமடங்கு நன்மை பெறுவோம்
மகிழ்ச்சியும் செல்வமும் நம்மிடம்
முடியாது நின்று நிலைக்கும்
ஆண்டவர் நீதியை விரும்புவார்
அநீதியும் கொள்ளையும் வெறுக்கிறார்
மீண்டவரோடே சமரசம் செய்வார்
மக்களினம் நடுவில் புகழடைவோம்
ஆண்டவரில் நான் அகமகிழ்வேன்
ஆனந்திக்கும் அவரில் என்னுள்ளம்
விண்ணின் சுடரொளி போன்றே
விடுதலை ஆடையெனக்கு உடுத்தினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக