வெறுமையில் நிறைவு படைத்து
வெளிச்சத்தை இருளில் கொடுத்து
சிறுமையில் மேன்மை அளிக்கும்
சிந்தை ஆளும் வேந்தனே !
வெளிச்சத்தை இருளில் கொடுத்து
சிறுமையில் மேன்மை அளிக்கும்
சிந்தை ஆளும் வேந்தனே !
நுண்ணணுவில் என்னுடல் படைத்தீர்
நூதனமாய் உயிருருவு கொடுத்தீர்
எண்ணமில்லா தடையும் தாண்டி
என்னைஇங்கு பிறக்க வைத்தீர்
கருவினில் சிதைந்து இருப்பேன்
கருத்தாய் எனைக் காத்தீர்
மறுவியும் ஊனுடல் குன்றாது
மருந்தாய் விடத்தை முறித்தீர்
பிறக்கும் முன்னே தெரிந்தீரே
பிறப்பின் தனிலும் நீர்காத்தீர்
இறக்கும் வரையிலும் உம்கருணை
இயன்றமட்டும் நான் பெறுவேன்
அரும்பென மலரச் செய்தீர்
அழகுருவம் தந்தீர் எனக்கு
துரும்பென இருந்த என்னை
துலங்கிடச் செய்து மகிழ்ந்தீர்
விந்தையாய் எனைநீர் படைத்தீர்
வியத்தகு செயல்பல செய்தீர்
கந்தையில் கிடந்த என்னில்
கழிவிரக்கம் நீரும் கொண்டீர்
ஏழையாய் எளியவனாய் இருந்தும்
எனையேற்றித் தூக்கி விட்டீர்
கோழையாய் இருந்த என்னில்
கொழித்த ஞானம் அருளினீர்
துன்பத்தில் துவண்ட போதும்
தூக்கமின்றி சளைத்த போதும்
அன்பனின் உள்ளம் கண்டு
அரவணைத்து தேற்ற வந்தீர்
அச்சமும் அழுத்தமும் வருத்த
அவசரமும் ஆத்திரமும் வதைக்க
உச்சமாய் உணர்ச்சி மேலோங்க
உடைந்து போனது என்னுள்ளம்
உடைந்த என்மனதை மீண்டும்
உயிர்பெற செய்தவர் நீரே
கடைந்து எடுக்கும் கவலையில்
கரம்கொடுத்து நீரும் உதவினீர்
ஆதரவுதர யாரும் உண்டோவென்றே
அழுதும் புலம்பியும் அரற்றிட
கதறலும் எவரும் கேட்டிடாநிலையில்
கடவுள்நீர் தாமே தேற்றினீர்
இனியும் வாழ்வில் உம்மையன்றி
இதரத்துணை நான் அறிவேனோ!
கனியும் உன்கருணை ஒன்றில்
களித்திருப்பேன் இறுதி மட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக