வெள்ளி, 19 மார்ச், 2021

ஏனிந்த கோபம் உமக்கு (தமிழ் கவிதை)

 
 மன்னவனே!  உமது  சினத்தால்
   மடிந்து  போகின்றேன்  நானும்
இன்னதென  உம்மை  வருத்தும்
   இன்னா  செய்தேன்  சொல்வீர்
 
ஏனிந்த   கோபம்  உமக்கு
   என்மீது   நாளும்  இருக்க?
தணிந்த   உம்மருள்  பார்வை
   தனையெனக்கு  நீர்  காட்டீரோ?
 
உள்ளமும்   உடைந்து  போனேன்
   உடலிலும்  உறுத்தல்  கொண்டேன்
எள்ளளவும்   உந்தன்   இரக்கம்
   என்மீது   கொள்ள  மறுப்பதேன்?
 
பகலில்   ஊக்கமின்றி  அலைந்தேன்
   படுக்கையில்  தூக்கமின்றி  புரண்டேன்
புகலிடம்  யாதுமின்றி  நானும்
   புலம்பி    அழுவது   அறியீரோ?
 
என்னை    நீரும்   சோதித்தறிய
  என்னுள்   திறனென்னக்  கண்டீர்
பொன்னை   போன்றே  என்னைப்
   புடமிட   நானும்    பொக்கிஷமோ?
 
எலும்புகள்    யாவும்   வதைப்பட
   என்னுருவும்   தன்னிலை   குலைய
தோலும்   தசையும்  தொய்விட
   தொலைந்தது   என்வலிமை  யாதும்.
 
குடலின்   புண்கள்  ரணமாயின
   குருதியின்  சூடும்   தணலாகின
கடலின்  ஒருதுளியாம்  என்னை
   கடுமையாய்  வதைப்பது   ஏனோ ?
 
உச்சிமுதல்   உள்ளங்கால்  மட்டும்
   உறுத்தும்   வலிகளை   என்னிடமே
வீச்சிடும்    ஈட்டியென   குத்தியே
   வீழ்த்தியெனை   வதைப்பது  முறையோ?
 
நெருப்பிலிட்ட  புழுபோல்   நானும்
     நெளிந்து    துடிப்பது  காணீரோ?
விருப்பமின்றி  எனைநீரும்  உலகில்
    வீணாகவா   படைத்து   விட்டீர்?



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...