இன்னும் எதற்கு மௌனம்?
சிறைப்பட்டு இருக்கும்
அடியானின்
சிரமத்தை நீரும்
அறியீரோ?
ஏனெதெற்கு என்னைக் கைவிட்டீர்?
என்னை ஏன்புலம்ப விட்டீர் ?
தானென்று நானொன்று இல்லையென்று
தானறிந்தும் தவிக்க
விட்டீர்.
எத்தனை நாட்கள் நானும்
எனக்குள் போராடிக்
கொண்டிருக்க,
நித்தமுமை நினைக்கும் என்னை
நீரும் விலக்கியது
ஏனோ?
காலத்தில் நீரும் செய்வீரென்று,
காத்திருந்து கண்கள்
பூத்தது.
நலத்தில் குறைகள் உண்டென,
நாளுக்கும் புலம்பி
அழுதேன்.
தடைகள் மனிதரால் வந்தபோதும்,
தனியனாய் நான்
புலம்பும்போதும்,
விடைகள் உம்மிடம் இருந்தே
விரைந்து வருமெனக்
காத்திருந்தேன்.
என்மனம் கலங்க விட்டீர்.
ஏமாற்றுவோரை மிதிக்க விட்டீர்.
புண்பட்ட எந்தன் உள்ளத்தை
புடம்போட இத்தனை
காலமோ?
எதிரியின் முன்னே என்னை
ஏளனப் பொருள்
ஆக்கினீர்.
சதிகார திட்டத்தில் என்னை
சறுக்கி விழவிட்டு
விட்டீர்.
கத்திக் கதறி வேண்டியும்
கதறல் எட்ட
வில்லையோ?
புத்திக் கலங்கி பேதலித்து
புலம்பி வருந்த
விட்டீரோ ?
எங்கே உன்கடவுள் என்ற
எதிரிகள் பேச்சில்
வேதனையுற,
எங்கோ நீரென்னை விட்டு
எட்டா தொலைவு
சென்றீரோ?
ஒவ்வொரு நாளிலும் விடியல்
ஓடிவந்து எனக்கு
கிடைக்குமென
எவ்வளவு காலம் காத்திருக்க
ஏனிந்த மௌனம்
காக்கின்றீர்?
போராடிப் போராடி களைத்து
பொறுமை யாவும்
இழந்து
சோராத மனமும் சோர்ந்து
சொல்ல நாவும்
எழவில்லை.
என்னை வெறுக்க காரணமேது?
எவ்வகை உம்மை
வருத்தினேன்
முன்னைய பாவங்கள் யாவும்
மூலமாய் ஆனது
உண்டோ?
நீதிக்காய் நானும் போராட
நீர்துணை செய்ய
மறுப்பதேன்?
நீதியைக் கொல்வோர் முன்னிலையில்
நிர்கதியாக்கி என்னை
விட்டதுமேன்?
யாருண்டு எனக்கு இவ்வுலகில்?
யாசிப்பது உம்மிடம்
மட்டுமே.
இருண்டு கிடைக்கும் என்மனதை
இனியும் காணாது
இருப்பீரோ?
உரிமைகளை பறித்தோர் ஒருபுறம்,
உடைமையை பறித்தோர்
ஒருபுறம்,
பரிகாசம் செய்வோர் ஒருபுறம்,
பழித்துப் பேசுவோர்
ஒருபுறம்.
காலையில் கதறுகிறேன் நானும்.
காணவில்லை உமது
பதிலை.
மாலையில் மன்றாடி அழுதேன்
மனமும் அமைதி
பெறவில்லை.
உம்முன் நானொரு தூசிதானே
உமக்கு நானும்
பொருட்டன்று
இம்மையில் வாழ்ந்து முடிப்பதற்கு
இத்தனை சோதனை
எனக்கெதற்கு?
மனிதனில்லை நானொரு புழுவன்றோ!
மாந்தரின் நிந்தனைப்
பொருளானேன்.
மனிதரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
மலிவுப் பொருளுக்கும் கீழானேன்.
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே
அவரும் இவனை
மீட்கட்டுமென,
கண்டவர் எல்லாம் என்னைப்பற்றி
கடிந்துரை பேசுதல்
கேளீரோ?
கருப்பையில் என்னைக் காத்தவரே!
காலத்தில் என்னைக்
கொணர்ந்தவரே!
உருப்பெறா காலத்திலும் என்பெயரை
உந்தன் குறிப்பேட்டில் எழுதியவரே!
கண்ணீர் நானும் சிந்துகையில்
கவலை மனதை ஆழ்த்துகையில்
விண்ணிலிருந்து உதவி எனக்கு
விரைந்து நாளும்
கிடைத்ததுவே.
அப்பொழுது இருந்த நெருக்கம்
அடியானுக்கு உம்மிடம் இருந்து
இப்பொழுது இல்லையோ என்று
இன்னலுற்று மனம் கசந்தது.
என்னைவிட்டு தொலைவில் சென்று
ஏக்கமுற விட்டு
விடாதீரும்
தன்னை சூழும் ஆபத்தில்நான்
தனியாய் நின்று
என்செய்வேன்?
சிங்கங்கள் பலவும் சூழ்கின்றன
சீறிப்பாய்ந்து கிழித்து
போட.
ஓங்கிவரும் நரிகள் கூட்டம்
ஓலமிட்டு என்மீது
பாய.
முயன்று நானும் தோற்கிறேன்
முடிவுகள் எதிராய்
ஆகின்றன.
பயின்ற பல்கல்வி எல்லாம்
பயனற்று போகின்றன சதியில்.
சிந்தப்பட்ட நீர்போல் ஆனேன்.
சிதைந்தது என்னுடல்
மனமும்.
கந்தல் போல்நானும் கசங்கினேன்
கழன்று போனதென்
எலும்புயாவும்.
மெழுகுபோல் இதயம் தானும்
மெல்லமாய் சாகுதல்
கண்டேன்.
கழுகுபோல் என்வாழ்வைக் கீற
கயவர் முயல்வதை காண்கிறேன்.
ஓடுபோல் காய்ந்தது என்வலிமை.
ஒட்டிப்போனது நாவும்
மேலாய்.
இடுகுழி தனிலே புழுதியில்
இட்டுவிட்டீர் நீரும்
என்னையே.
சதிகாரர் பலரின் சதிராட்டம்
சல்லடையாய் மனதைத்
துளைக்க
அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்
அநீதியாய் எழும்பக்
கண்டேன்.
வேதனையில் உள்ளம் உடைய,
வெப்பத்தில் எலும்பும்
உருக்க,
சோதனை கொடுத்த பகைவர் - என்
சோகத்திலும் முறைத்து
நின்றனர்.
எந்தன் உழைப்பைச் சுரண்டினர்.
என்னுதிரம் உறிஞ்சி
குடித்தனர்.
சிந்தியஎன் வியர்வையின் பலனை
சீட்டுப்போட்டு தங்கள்
பங்காக்கினார்.
என்னை விட்டு போகாதீரும்!
எனது வலிமை
நீர்தாமே!
என்னை நோக்கி விரைந்து
என்துணை நின்று
வழக்காடும்.
துணைசெய்ய வாரும் இறைவா!
துணிவு அற்றுப்
போனேன்.
கணைஎன்னை நோக்கி வரவே,
காத்தருள உமை
வேண்டுகிறேன்.
என்சார்பாய் நீரும் நின்று
எனக்காக போரிட
வருவீர்!
பொன்போன்ற உம் வாக்கினை
போற்றுவேன் எல்லோரும் அறிய.
எளியோரின் சிறுமை அற்பமல்ல.
எழுந்து வந்து
துணைசெய்வீர்
ஒளியார் தம்முகத்தை ஆண்டவர்,
ஓங்கிடும் எளியவர்
குரல்கேட்டு.
அடியான் செலுத்தும் உம்புகழ்
ஆண்டவர் உம்மிடமே
எழும்.
அடியோர் யாவரும் புகழ்வாராக!
அஞ்சுவோர் அவர்புகழ்
பாடுவராக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக