செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நின்னருள் வேண்டுமெனக்கு (தமிழ் கவிதை)

வெய்யருள்   வெய்யன்   யான்
     வேண்டி   உமைக்   கேட்பேன்
மெய்யருள்   எனக்கு  ஈந்தேநின்
     மேன்மையைக்  காண  வேண்டும்

அய்யனே! எந்தன்   ஆயனே!
    அணைத்துக்  காக்கும் நேயனே !
பெய்யதூம்  உன்னருள்  மழையில்
     பேரின்பம்   கொள்ளச்   செய்யும்
 
ஆய்வதும்  என்னை   ஆள்வதும்
     அனைத்துமாய்  எனக்கு  நீரே !
உய்வதும்   நான்  உயர்வதும்
    உந்தன்   அருளினால் அன்றோ !
 
ஓய்வதிலும்   நான்  உறங்குவதிலும்
    ஓயாது   உம்புகழ்  ஒலிக்கனும்
மேய்ச்சலில்  எனை இளைப்பாற்றும்
    மேய்ப்பனின்  துணை  வேண்டும் 
 
செய்வதிலும்  கரை   சேர்வதிலும்
     சேயனுக்குக்   கரம்   நீட்டும்
வாய்மொழியும் சிந்தனை  யாவும்
     வல்லவர்  நின்வழி  நடக்கட்டும்
 
எய்துவரும்   அம்பில்   நின்று
     எம்மைக்   காக்க   வேண்டும்
நோய்நொடி  தீண்டாது  எம்மை
     நிந்தன்  சிறகால்  மூடும்
 
பாய்ந்து  தாக்கும்  கொடிய
   பகையும்  பிணியும்  நீக்கி
மாய்ந்து  மனிதர்  வீழலிலும்
   மறைத்து எம்மைக்  காப்பீர்
 
கொய்ய  வரும்  கொள்ளைநோய்
     கொடிய  உள்வாதை பிணியும்
பொய்புரட்டு  பழிப்பு  குற்றமென
     பொருந்தா  யாவும்  விலக்கிடும்
 
தாய்குணம் விஞ்சிய  தயாளரே
    தளர்வுறும்  வேளை  தாங்கிடும்
வாய்மை   தூய்மை  எம்மை
    வழுவாது   நித்தம் காத்திடும்
 
தெய்வத்  தலைவரே  நிந்தன்
    தெவிட்டா  அருள்  வேண்டும்
தொய்விலா  நன்றியை  நாங்கள்
    தொடர்ந்து  செலுத்த வேண்டும்
  
பெய்யும்  மழையென  உந்தன்
    பேரருள்  பொழிய  வேண்டும்
மெய்யும்  மனமும்  உந்தன்
    மாண்பைப்   போற்ற  வேண்டும்  

துய்யநின்   அன்பில்   என்றும் 
    துய்ப்பு   கொளல்  வேண்டும்
மாய்ந்தும்  உம்திரு   நிழலில்
    மகிழ்ந்து  களிக்க  வேண்டும்

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...