வியாழன், 10 நவம்பர், 2022

இனிமை எமக்கு நிரந்தரம்

கண்கள் இருந்தும்  குருடனாய்
    காதுகள்  இருந்தும்  செவிடனாய்
புண்கள்  போலவே  புலனிருக்க
     புரிந்து கொள்ளும் மனமில்லை
 
பட்டறிவும் பகுத்தறிவும் பற்றாது
    பரமனின்  பரிவுளம்  பற்றிடவே
கேட்டறியும்  நல்லறிவும் போதாது
    கெஞ்சும்  அடியானை நோக்கும்
 
உணர்விலும்  உம்மை  உணரவில்லை
    உயிர்  மூச்சினிலும் அறியவில்லை
கொணர்ந்து  நீரளித்த  முடிவில்லாக்
    கொடையிலும்  எனக்கு விடையில்லை
 
கருவிலிருந்து  என்னை சுமக்கின்றீர்
   கல்லறை  போகும்வரை காத்திடுவீர்
உருவிலேதான் நானென்று  ஒழிய
   உள்ளவை உண்மையில் உமதே 
 
வாழ்க்கை எனக்குப் பயணமல்ல
    வருத்தம்  கொண்ட பயமுமல்ல
கீழ்க்காற்று  திசையை  மாற்ற
    கீற்றுப்  பதர்போல் நானல்ல
 
காணும்  இடமெலாம் வறட்சி
   கலங்கி  உம்மை அழைத்தேன்
பேணும் சேயைத் தாய்தான்
   பிரிந்தாலும் நீர் மறந்தீரோ!
 
விதைகளை மண்ணில் விதைத்தேன்
     விளைந்தது  களைகள் மட்டுமே
புதையலைப்  போன்றே எனக்கு
     பூமியில் பொக்கிடம் வைத்தீர்
 
கால்கள்  வலியைக் கண்டதில்லை
    கடக்கும் வழியை அறிந்ததில்லை
கல்குவிப் பாதையில் நடந்ததில்லை
    கர்த்தாவே என்னைச் சுமக்கின்றீர்!
 
மீளமுடியா கண்ணியில் இருந்தும்
    மீண்டும்  மீண்டும் எழுந்திட்டேன்
தாளமுடியா துன்பத்தில் இருந்தும்
    தாங்கி  என்னைப் பற்றினீரே!
 
குவியல் குவியலாய் மனதில்
    குப்பை  நான் சேர்த்தாலும்
காவியம்  படைக்கும் நூலாய்
    கடவுளே நீரதனை மாற்றினீர்!
 
நினைத்து நானும் உணர்கிறேன்
    நிம்மதி உம்மிலே கண்டேன்
அனைத்தும் நீரேயென  கொண்டு
    அமைதி ஆறுதல் அடைகிறேன்
 
தனிமை எமக்கு சுகம்தரும்
    தாங்குபவர் துணை வரும்
இனிமை எமக்கு நிரந்தரம்
    இறைவன் எங்கள் ஆதாரம்
 
அணுத்துகள் முதலாய்  அண்டம்வரை
    அனைத்தும் சாற்றும்  ஆண்டவரை;
வானத்துயிர்  முதலாய்  வையம்வரை
     வாழ்பவை  போற்றும் படைத்தவரை
 
கிழக்கு முதல் மேற்குத்திசையாய்
   கிழமை  தொட்டு  ஊழிஊழியாய்
வழக்கு தொட்டு வாழையடியாய்
   வல்லவர்  புகழைப் பாடிடுவாய்


 

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...