ஞாயிறு, 13 நவம்பர், 2022

வாஞ்சித்துக் கேளும் இறைவா !

சரமென்று  கவிமாலை தொடுத்து
    சரணமென்று  உம்மடி பணிந்து
சிரமென்று தேகம் முழுமையும்
    சித்தம் உமதென ஒப்புவித்தேன்
 
மரமென்று மண்கல் கொண்டு
    மனிதர் வார்த்த சிலைகண்டு
உரமென்று என்மனம் நம்பாது
    உருவமறியா  உம்மை  அன்றி
 
வரமென்றுக்  கேட்டு  வருகின்றேன்
    வாஞ்சித்துக்  கேளும் இறைவா !
கரமொன்று  நீட்டி அடியார்க்கு 
    கருணை  மழை  பொழியும்.
 
மரமென்று  யாவரும் புவியில்
     மகிழ்ந்து  கனிகள்  கொடுக்க
தரமென்று  எம்மை  நீரும்
     தகுதி பெறச் செய்திடும்
 
சுரமென்று சுருதி லயமுடன்
   சுவை சிந்தும் பாடலுடன்
பரமென்று இலக்கு நோக்கி
   பராபரன் புகழ் பாடணும்
 
பாரமென்று வலிதனைச் சுமந்து
    பழிபாவச்  சேற்றில் மிதந்து
திரமென்று இல்லாது நலிந்து
    திணறும் வறியவர் வாழனும்
 
கோரமென்று கொடியவர் ஆண்டிட
     கொடுமையே கொள்கை ஆகிட
சோரமென்று  போன ஏழையர்தம் 
     சோகங்கள் தீர்ந்து போகணும்
 
வீரமென்று புனைச்   சுருட்டும்
   வீணான புராண இதிகாசமும்
வைரமென்று காமம் கலகம்
   வைக்கும் வேதமும் வெறுப்பே
 
ஈரமென்று இல்லா மனங்களில்
    இரக்கம்  ஊற்றெனப் பாய
ஓரமென்று ஒதுக்கிய மாந்தர்
     ஒன்றே யாவரும் என்றறிவர்
 
காரமென்று கடுஞ்சொல் பேசி
    கசப்புணர்  எங்கும் விதைத்து
தூரமென்று மக்களைப் பிரிக்கும்
    துட்டர் மனங்கள் மாற்றிடும்

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...