மூச்சைப் பறித்து வாழென்றால்
முடியுமோ என்னால் வாழத்தான்?
அச்சை முறித்து தூரம்செல்ல
ஆகுமோ எந்த வண்டியினால்?
குருதியெலாம் மெய்யினில் அகற்ற
குறுநொடி தாங்கிட இயலுமோ?
சுருதியை நீக்கியே கருவியில்
சுவைபட இசைக்க இயலுமோ?
நீரின்றி வளம்பெறு நீயென்றால்
நிலத்தில் முளைஎன்ன செய்யும்?
நீரின்றி இவ்வுலகம் இயங்குமோ ?
நினைவின்றி உணர்வு அறியுமோ?
வளியின்றி உயிர்கள் வாழுமோ?
வழியின்றி வாழ்க்கை நகருமோ?
தெளிவின்றி சிந்தை சீர்படுமோ?
தோற்றமிலா யாதும் தென்படுமோ?
கண்ணைக் குருடாகி அதனால்
காட்சிகள் கண்டிட இயலுமோ?
மண்ணை மலடாக்கி அதனில்
மலர்ந்திடும் பயிர்தான் உண்டோ?
கால்களை ஒடித்து ஓடுயென்றால்
கனவிலும் அதற்கு சாத்தியமோ ?
சொல்பல சொல்லும் நாவறுத்து
சொற்போர் ஆற்ற முடியுமோ?
உயிரற்ற உடலுக்கு மதிப்பேது?
உணர்விழந்த அறிவுக்கு புகழேது?
ஞாயிறற்ற நாளுக்கு ஒளியேது?
ஞானம் தெய்வபய மின்றியாது?
என்னுயிர் உந்தன் அருளன்றோ?
என்மூச்சு உந்தன் கருணையன்றோ?
இன்னுமேன் நீரதனை விலக்கி
இறைவா என்னைத் தண்டிப்பதேன்?
பேரருள் எனக்கு மறைத்திட்டீர்!
பெருங்கருணை எங்கு ஒளித்திட்டீர்?
பேரன்பை பெற்றிடா வண்ணம்
பெரும்பிழை யாதுநான் செய்தேன்?
வேண்டும் உம்கருணை எனக்கு;
வெள்ளமென பாய்ந்திட வேண்டும்
மீண்டும் உம்மருட் பேரன்பை
மிகைப்பட எனக்குத்தர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக