வியாழன், 16 ஜூலை, 2020

இறைவனே எனக்கு யாவும் (தமிழ் கவிதை)

அகமதில்   அமைதி   வேண்டி
       ஆண்டவா  உமை   அழைத்தேன்
இகமதில்  உம்மையன்றி   எனக்கு
        ஈந்தளிப்பார்   எவரும்  உண்டோ ?

உதவிடும்  அருட்கடல்   உம்மையே
      ஊக்கத்துடன்  ஏங்கித்   தேடுவேன்
 எதனினும்  பெரிதுஉம்   கருணை
       ஏனிந்த  பாவிநான்   நினைத்திறனே !

ஐயமற   உம்பாதம்   வீழ்ந்துநான்
        அடிமையாய்   வாழ்வேன்   அன்றி
ஒய்யமாய்   மனிதர்தம்    கரம்
        ஒட்டிவாழ    யான்   ஆசியேன்

ஓட்டமாய்  எம்வாழ்வு   பணிக்க
       ஓய்வின்றி   உலகாசைத்    தேட
ஒளடதமாய்   நீவீர்    எந்தன்
       அகநோய்  நீக்க   எழுவீர் !

கடலும்   ஒப்புமோ  உம்கருணைக்கு
       காற்றும்  ஒப்புமோ   உம்வலிமைக்கு
கிட்டாத   ஆகாயவான்   பரப்பும்நின்
       கீர்த்திதன்   குறைவுக்கும்   ஒப்புமோ?

குட்டன்   யான்திறன்    மெய்யறிவில்
       கூச்சலும்   உண்டுஎன்   எண்ணமதில்
கெட்டமதி    கடுஞ்சொல்   என்று
       கேள்வியற்று   குழம்பி   நின்றேன்

கைதியாய்   யான்பாவச்   சிறைக்குள்
       கையறு   நிலையில்   கதறியே
கொதிநீர்    அனலாகி   வறண்ட
       கோடை  சூழ்நிலை   ஆனதே !

சத்தியமே!  அனைத்தின்  வித்தகரே
      சாத்தியமே  யாவும்   நின்னருளால்
சித்தமாய்  எமை   நித்தமாய்
     சீர்படுத்தும்   நித்திய   தந்தாய்

சுத்தமனம்    தன்னில்   நின்னருள்
     சூழ்ந்திடும்  வேளை    - பாவம்
செத்தழியும்  வல்லோர்    உம்பாதம்
     சேவித்து   வணங்கிடுவேன்  நாளும்

சேனையும்  அணிசேர்    பகையும்
         சேர்ந்தே   எனக்கெதிர்   வந்திடினும்
சோதனை  வேதனையும்   சேர்ந்திடினும்
        சோர்ந்திலேன்   நின்பரி வுண்டெனக்கு

தடையும்   தகர்ந்திடும்    மாவலிய
         தளையும்  தளர்ந்திடும்   பகைவர்தம்
தாடையும்    உடைந்திடும்   இரட்சகன்
        தாமெனை   மீட்கும்    வேளை

திக்குத்     தெரியாக்   கலம்போல்
     தினமும்   திகைத்துத்    தத்தளிக்க
தீக்குண  மாந்தர்தம்   தீவினைசூழ
     தீவிரித்து   என்னுயிர்   மீட்டீரே !

துணைதேடி  யானும்    துவண்டிருக்க
        துணிவெலாம்   என்னுள்  அற்றுப்போக
தூணாய்   நெருப்புத்   தூணாய்
       தூயவனே  நீரெனக்குத்   துணையானீர் !

தென்றலே !   சுகந்தநல்  தென்றலே!
        தெள்ளிய   தேனமுதே   நின்பரிவே !
தேற்றும்  தந்தாய்   நின்னருளை
         தேடும்வேளை   குளிர்ந்திடும்   மனமெலாம்

தொட்டணைத்   தாங்கும்   தாயினும்
           தோளில்    சுமந்த   தந்தையினும்
தேட்டங்கொள்   அன்பு   மனையினும்
       தெரிவதிலை  நின்அன்பின்   எல்லை

பழந்துணி   கந்தலானேன்  எனை
       பார்ப்போரின்   நிந்தை   யானேன்
பிழைபல   செய்தே   என்வாழ்வு
       பீளையைத்  தான்  சுரந்ததேன்

புடைத்தெடுத்தீர்   பொன்போல்   என்னை
       பூண்டு    கொள்வேன் நின்னருளை
பெட்டகத்து  பொக்கிஷம் போலெனை
        பேறுபெற   செய்வீர்  இனிநாளும்

பொன்    அணிகலன் தேவையன்று
          போற்றுவோர்    புகழும்  அன்று
மண்ஆள்    நிலபுல  செல்வமுமன்று
          மன்னவனே   நின்னடி  போதுமெனக்கு



கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...