வியாழன், 16 ஜூலை, 2020

ஒன்றே குலம், ஒருவனே இறைவன்

அகர முதல எழுத்தெலாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எந்த மொழிக்கும் தொடக்கமாக முதல் எழுத்து "அ" இருப்பது போல் இந்த உலகம் கடவுளையே முதன்மையாக கொண்டுள்ளது.  இதன் மூலம் நாம் அறிய வேண்டியவை:-

1 கடவுள் ஒருவரே என்ற ஏகத்துவ கொள்கை
2 அனைத்திற்கும் முதன்மையும் முழுமையாய் இருக்கிறவர்
3 கடவுள் தான் முதன்மை என்ற உண்மை நிலையில் உள்ளவர்க்கு மதமும் மதம் சார்ந்த கொள்கைகளில் அதி தீவிரம் இருப்பதில்லை

கடவுளை உண்மையாக உணர்ந்து நேசிப்பவர்  மனிதனை நேசிக்கிறார் மதத்தை அல்ல.  கடவுள் ஒருவரே என்பது எல்லா மறைகளின் நிலைப்பாடு. கடவுளை கண்டவர் எவருமிலர் என்பதும் அனைவருடைய உண்மை. அப்படியெனில் நாம் உருவாக்கிய பெயர்களும் உருவங்களும் உவமானங்களும் கடவுளுடைய மாண்புக்கும் உன்னதத்திற்கும் ஏற்புடையதா?  பொதுவான இறை சிந்தனை கொண்ட இலக்கியங்கள் யாவும் கடவுளின் பெயரையோ உருவத்தையோ குறிப்பிடுவதில்லை. ஆகவே அவை மேற்கோள் காட்டுவது இறைவனின் தாள் (பாதம்) பணிந்து வணங்க வேண்டுமென்பது. அதன் அர்த்தம் சிலைகள், சொரூபங்கள், உருவங்கள்  முன் பணிந்து வணங்குதலன்று.  மாறாக, நம்மை படைத்தவரின் மாட்சியை நம் மனக்கண்முன் வைத்து நம்மை முழுவதும் தாழ்த்தி வணங்குதலே பொருள். ஆகவே தான், திருக்குறளில்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

இக்குறள் மிகத்தெளிவான ஒரு பார்வையை நமக்கு தரவில்லையா? கடவுள் ஒருவரை நாம் எதனோடு யாரோடு ஒப்பிட முடியும்? ஒப்பில்லா இறைவனை நாம் பார்க்கும் எந்த உருவங்களோடும் இயற்கையோடும் ஒப்பிட முடியுமோ? படைத்தவர்க்கே படைப்பு பொருள்களாகிய நாம் உருவத்தையும் நாமத்தையும் சூட்டலாமா? பொதுவாகவே மனிதர்களாகிய நாம் கண்ணால் காண்கின்றவற்றின் மீதும் உணரக்கூடியவற்றின் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம். ஆனால் இறை வழிபாட்டில் இது ஒரு அவநம்பிக்கையின் வெளிப்பாடு. இது மறுப்பு கோல்ககையை விட மிக மோசமான வழிமுறை.

மதிமாறன்  எனும் மனிதன் ஒருவன் கடவுளை தேடும் படலத்தில் காடு, மலை, பள்ளத்தாக்கு என சுற்றி அலைகிறான். அவனது எண்ணமெல்லாம் கடவுளை தன் கண்ணால் கண்டால் தான் நம்பிக்கை கொள்ள முடியும் என்ற நிலை. ஒவ்வொரு இடமாய் செல்லும்போதும் மரத்தை காட்டி "கடவுளே! நீர் இப்படி இருப்பீரா?" ,  மலையை காட்டி "உமது உருவம் இப்படியா?" , மனிதனை காட்டி, "இவனைப்போல இருப்பீரா?".  இப்படித்தான் பார்க்கின்ற எல்லாவற்றையும் காட்டி நீர்தான் கடவுளோ? என்ற கேள்விகளோடு பயணித்தான். அவன் பார்வையில் சூரியனும் சந்திரனும் கூட கடவுளாக இருக்கலாமோ என்று ஒரு கோணம் . இவ்வாறாக, அலைந்து திரிந்து ஒரு இரவிலே களைப்பில் ஒரு சத்திரத்தில் வந்து தங்கினான். நல்ல உறக்கம். அப்பொழுது அவன் ஒரு கனவு கண்டான். கனவில் கடவுளின் குரல் மட்டுமே கேட்டது.
"மனிதா! நீ என்னை அறிந்து கொள்ள இவ்வளவு முனைப்பு காட்டுவதில் நோக்கம் என்ன? என்னை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இப்பொழுது நாம் உனக்கு வைக்கப்போகும் தேர்வில் நீ தேர்ச்சி அடைய வேண்டும். அப்பொழுது நீ என்னை அறிந்து கொள்வாய். நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன்.  பிறர் உன்னிடம் எதை கேட்டாலும் உன்னால் கொடுக்க  முடியும்.  ஆனால் ஒரு நிபந்தனை, எந்த சூழ்நிலையிலும் நீ யாரிடமும் கோபம் கொள்ள கூடாது. முடிவில் உனக்கு ஒரு இரகசியம் சொல்வேன்" 

தூக்கத்திலிருந்து விழித்த மதிமாறன், தான் கண்ட கனவின் படி தனக்கு வரம் கிடைத்து விட்டதா என அறிய முற்பட்டான்.  நேராக, சத்திரத்தின் வாயிலில் அமர்ந்திருந்த ஒரு ஆண்டியின் முன்  நின்றான். "அய்யா! தர்மபிரபு, கண்ணு தெரியாத எனக்கு பிட்சை போடுங்கய்யா". அந்த ஆண்டியின் மீதுள்ள கரிசனையாலன்று தான் பெற்ற வரத்தை சோதிக்க, "இந்த பார்வையற்ற ஆண்டியின் கண்கள் பார்வை பெறட்டும்" என்று சொன்ன உடன் ஆண்டி பார்வை பெற்று துள்ளி குதித்து ஓடினான். மதிமாறனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, தனக்கு மிகப்பெரிய வரம் கிடைத்ததென்று.

அடுத்து ஊருக்கு ஒதுப்புறமாய் இருந்த ஒரு ஒற்றை கல்லில் போய் அமர்ந்துகொண்டான்.  அவ்வழி வந்த ஒரு ஏழை விவசாயி அந்த பக்கம் கடக்கும்போது, "பல நாளா மழை பெய்யாம நிலம் தரிசாகெடக்குது. ஒரு நல்ல மழை பெஞ்சா நல்லா இருக்குமே". என்று புலம்ப "ஐயா! நீர் கேட்டதுமாதிரியே மழை பெய்யட்டும்" என்று மதிமாறன் சொல்ல மழையும் பெய்தது. விவசாயி குதூகலித்தான்.  மறுநாள் மதிமாறன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான். அப்போது அந்த வழி வந்த ஒரு வியாபாரி "தொழில் முடங்கி போயிடுச்சி. ஏதாவது புதையல் கிடச்சா ஏதாவது பெரிய தொழில் என்னால் செய்யமுடியும்.". என்று புலம்ப வியாபாரி முன் ஒரு பானையில் தங்ககாசுகள். வியாபாரி கால் தரையில் கால்படாத அளவிற்கு சந்தோஷித்தான்.

மதிமாறனுக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. இனி இந்த உலகம் முழுவதும் என் புகழ் தான் பரவப்போகின்றது.  நேராக சத்திரத்தில் சத்திரம் சென்றான். அங்கு அந்த ஆண்டி அந்த சாத்திரத்தையே கடவுளாக்கி "சத்திரம் சாமி" என்று பெயரிட்டு வழிபடலானான். மதிமாறன் அவன் முன் சென்று "நான்தான் உனக்கு பார்வை தந்தேன்" என்று பலமுறை குவியும் கதறியும் அந்த ஆண்டி தன்னுடைய வழிபாட்டில் மும்முரமாக இருந்தான். "சரி! விவசாயியை போய்ப்பார்ப்போம்" என்று செல்ல, அங்கே விவசாயி ஒற்றை கல்லிலே மாலைகள் போட்டு வழிபாடு செய்யலானான்.  "அய்யா! நான்தான் உங்களுக்கு மழையை தந்தேன்" என்று மதிமாறன் கதற, விவசாயியோ எந்த சலனமுமின்றி கல்லுக்கு பூஜையை செய்து கொண்டிருந்தான்.
"கண்டிப்பாக அந்த வியாபாரி நமக்கு நன்றி உள்ளவனாய் இருப்பான்" என்று நினைத்து அவனை தேடிப்புறப்பட்டான். வழியில் அதே மரம். அங்கு ஒரேக்கூட்டம். அந்த மரத்தைச்சுற்றி ஒரு கோவிலை உருவாக்கி இருந்தான் வியாபாரி.மரமும் கடவுளாகியது அங்கு. படுவிமரிசையான வழிபாட்டுக்கொண்டாட்டம்.  மதிமாறன் அங்கு சென்று கூப்பாடு போட்டு கத்தினான். எதுவும் யார் காதிலும் விழவில்லை. அங்கு இருந்த அந்த வியாபாரியும் கூட மதிமாறனை கண்டு கொள்ளவில்லை. அவனுக்கு சினம் தலைக்கு ஏறியது.  உடனே அந்த ஊர் பற்றி எரியூட்டும் என்று கத்தினான். உடனே அவனிடமிருந்து அந்த வரம் விலகிவிட்டது. தன்னையே நொந்து கொண்டும் புலம்பிக்கொண்டும் கடவுளிடம் முறையிடலானான்,  'கடவுளே! அந்த மக்களுக்கு நான்தானே உதவி செய்தேன். அப்படியிருக்க, அந்த மக்களோ என்னைப்புகழாமல் கல்லையும் மரத்தையும் இடத்தையும் புகழ்ந்து வழிபடுகின்றனரே!.  இது முறையோ?" என்று புலம்பியபடி படுத்துறங்கினான்.

ஆழ்ந்த உறக்கத்தில் மீண்டும் கனவில் கடவுளின் குரல்.  "மனிதா! ஒன்றை நான் உன்னிடம் இரகசியமாக வைத்திருந்தேன்.  உனக்கு வரம் தந்த நான் உன்னை யாருடைய கண்களுக்கும் தெரியாதபடி உணராதபடிக்கு இருக்கும் வரத்தையும் சேர்த்து கொடுத்தேன். அந்த நாள்களில் அந்த மனிதர்களால் உன்னை பார்த்திருக்கவோ, உன்னை உணர்த்திருக்கவோ உன் பேச்சை கேட்டிருக்கவோ முடியாது. உனக்கு வரம் தந்ததோ நான், ஆனால் நீயோ அதில் உன் பெருமையை தேடி அலைந்தாய். கோபம் கொண்டு நான் படைத்த மக்களையே அழிக்க துணிந்தாய்.  உன்னையே, உன் சுயத்தையே அறிய முடியாத நீ என்னையும் என் மாட்சியையும் எப்படி அறிவாய்? எனக்கு படைப்புகளாகிய உங்கள் புகழும் வாழ்த்தும் தேவையென்று.  ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நானே. எனக்கு நிகராக யாரும் இல்லை. என் உன்னதநிலையை யாருக்கும் எக்காரணத்திற்கும் அறிவிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.ஆனால் இவையெல்லாம் மனிதர்களாகிய உங்களுக்குத்தான் தேவை."  என்று கனவு முடிகின்றது.

அம்மனிதன் கடவுளை அறிந்தானோ இல்லையோ கடவுளின் மாண்பினை உணர்த்தவர்க்கு உருவமும் பெயரும் தேவையன்று. அதனால்தான், "நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சள் நீர் பூசைகொள்ள வாராய் எந்தை பராபரமே".  மதத்தை மனிதன் தேர்ந்துகொள்ளலாம் ஆனால் மனிதன் கடவுளை தேந்துகொள்ளமுடியாது . கடவுள்தான் மனிதரை தேர்ந்துகொள்கிறார். ஒரே வரியில் சொல்வதாயிருந்தால் கடவுள் தன உண்மை நிலையை மனிதர்க்கு உணர்த்த நினைத்தால் இந்த உலகம் தாங்காது, நொடிப்பொழுதில் சாம்பலாய்ப்போம். ஆகவேதான் மனிதரின் பலவீனத்தை அறிந்து தன மாட்சியை மறைத்துக்கொள்பவர் தான் கடவுள்.

கடவுளின் பேரன்பையும் பேரிரக்கத்தையும் திருவிவிலியம் சுட்டிகாட்டுகின்றது.  "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோன்" என்று திருக்குரான் சொல்கின்றது.  "அருட்பெருஜோதி தனிப்பெருங்கருணை" என அடிகளார் சொல்லுகிறார். நம் சிறுவயதில் நாம் கற்ற தமிழ்செய்யுள் "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி " இன்றளவிலும் நம் மனதில் இடம்பிடித்திருக்கிறது. இதனையே நான் சற்று வித்தியாசமாக சிந்தித்தேன்.

"வானாக்கி மண்ணாக்கி வளியாக்கி ஒளியாக்கி
 ஊனாக்கி உயிராக்கி உண்மையாய் இன்மையுமாய்
 கோனாக்கி யான் எனதென்று அவரவர் கூத்தாட
 வானாகி நின்றாயே என் சொல்லி வாழ்த்துவனே"

வான் மண்டலங்களையும், பூமியையும், வளிமண்டலங்களையும், ஒளிமண்டலங்களையும், ஊனையும் (உடல், தாவரம், உணவு) உயிரையும் (உயிர், உயிர்கள்) உண்டாக்கி இருந்தும் இல்லாததுமான தலைவர்களையும் உருவாக்கி, நான் எனது என்னால் எனக்கு என்று அவரவர்கள் கூத்தாட்டம் போட, எல்லாமும் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாதுபோல் தம் புகழை மறைத்து  (வானாகி) இருக்கும் இறைவா நான் உம்மை என்ன சொல்லி வாழ்த்துவேன்.

கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்கா தலை

எனும் திருக்குறளில் எட்டு குணங்களை உடைய இறைவனின் பாதத்தை வணங்காவிடில் நம் உடலின் உறுப்புகள் இருந்தும்  அவற்றால் பயன் ஒன்றுமில்லை. இறைவனின் எட்டு குணங்கள் என்பவை தனித்து வேறு எவருக்கும் எதற்கும் இல்லாத மேன்மையானவை.
- அநாதி தேவன்; சுயம்பு (அதாவது கடவுளை யாரும் பிறப்பிக்கவில்லை மற்றும் கடவுளுக்கென்று தனித்த உறவுகள் ஏதுமில்லை)
- அவருக்கு ஒப்பானவர் எவருமிலர்
- எல்லையற்ற பொறுமை, கருணை, இரக்கம் கொண்ட அருளாளர்
- எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் கடந்தவர் (காலம், குணம் விருப்பு வெறுப்பு....)
- தொடக்கமும் முடிவுமாயிருக்கிறவர்
- தன மகத்துவத்தை காட்டிகொள்ளாதவர்
- அனைத்தும் அவரால் உண்டானவை மற்றும் அவர் உண்டாக்கின வற்றிலிருந்து உண்டானவை
- ஞானம், அறிவு, விவேகம் போன்ற கொடைகளுக்கு பிறப்பிடம்

கடவுளை நோக்கியப்பாதைக்கு உதவுகின்ற ஆறு சிந்தனைகள் :-
1 எல்லாவற்றையும் படைத்தவர், அனைத்தையும் செய்ய வல்லவர், அவரை மீறிய சக்தி இவ்வுலகில் இல்லை
2 நாம் அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் எனவே நம்மீது அவருக்குள்ள அக்கறை நாம் காட்டும் அக்கறையை விட மிகப்பெரியது
3 நம்மிடமுள்ள நாம் சார்ந்த அனைத்தும் அவரால் கொடுக்கப்பட்டவையே
4  நம் வாழ்வின் ஒவ்வொரு நொடி பொழுதும் அவரால் வடிவமைக்கப்பட்டுள்ளன
5 நம்மால் உண்டான தீமையினின்றும் நன்மையை உருவாக்கித்தருபவர்
6 கடவுளை விட்டு நம்மை விலகச்செய்பவை நம் சுயம். (நான், எனது, எனக்கு, என்னால் என்ற போக்கு மற்றும் கீழுணர்வுகள், உணர்ச்சிகள்)

பொதுவாகவே நாம் நம் மனித கண்ணோட்டத்தில் கடவுளை உருவகப்படுத்துகிறோம். கடவுள் நம் எண்ணங்களுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை பேச்சளவில் சொல்லிக்கொள்கிறோம்.ஆனால் உண்மையில் நாம் கடவுளை படைப்புகளோடு ஒப்பிட்டு வழிபடுகிறோம்.  மனிதன் தன உச்சநிலையிலும் நீர்க்குமிழி போன்றவன். அரசன் முதல் ஆண்டி வரை ஆள்பவன் முதல் சாமானியன் வரை அனைவரும் கடவுள் முன் தூசு போலத்தான். ஆனால் நாமோ கடவுளை மறந்து மதத்தையும் உருவத்தையும் சடங்கு சம்பிரதாயங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.  இன்று மதத்தின் பெயரால் கடவுள் படைத்தவற்றையே மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான்.கடவுள் நம் எல்லோருக்கும் தந்தையெனில் நாம் ஏன் கடவுளின் மற்ற பிள்ளைகளுக்கு அதாவது அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்கின்றோம்?
மதம் பிடித்த யானையை விட
மதம் பிடித்த மனிதனால் உண்டாகும் கேடு பெரிது

உண்மையாகவே, நாத்திகர்கள் உருவாகுவது கடவுள் மறுப்பால் அன்று மாறாக, மதங்களை பின்பற்றி மனிதனுக்கு தீங்கு செய்யும் சில  ஆத்திகர்களால் தான்.  எந்த நாத்திகனும் மனதளவில் கடவுளை நம்பக்கூடியவன். அதனால் தான் மனித நேயத்துடனும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழ்கின்றான்.  ஆனால் மதத்தை வெறிகொண்டு பிடித்து கொண்டு அலைபவர்கள் இதற்கு நேர் முரண்.நாம் கேட்கும் கேள்வி இது. மதம் இல்லாமல் கடவுளை அடைய முடியாதா?  இல்லை. கடவுளை அடைய மதம் தேவையன்று மனம் மட்டுமே தேவை. மௌனமொழியிலும் கடவுளை வழிபடலாம்.

அந்திமாலை நேரம். ஒரு பாதையின் சந்திப்பில் ஒரு மதகுருவும் ஒரு பார்வையற்றவரும் சந்தித்துக்கொள்கின்றனர். அவர்கள் இருவரும் செல்ல வேண்டிய இடம் 8 கிமீ தொலைவிலுள்ள ஒரு பார்வையற்றோர் காப்பகம். "அய்யா! தாங்கள் எங்கள் காப்பகத்திற்கு வருவதாக அறிகிறேன். நீங்கள் யார்? வருவதின் நோக்கம் என்ன?" அதற்கு குரு, "நான் ஒரு மதகுரு. பல்வேறு வேதங்களை கற்று தேர்ந்தவன். என் மதத்திலுள்ள பல்வேறு உண்மைகளையும் தெரிந்து வைத்துள்ளவன். ஆகவே நாளை உங்கள் காப்பகத்திலுள்ள அனைவருக்கும் ஒருநாள் தியானவகுப்பு நடத்த கேட்டுக்கொண்டார்கள். அதற்கு இசைந்து போய்க்கொண்டிருக்கிறேன். இந்த பாதையில் ஒரு வாகன வசதியும் கிடையாதா?"  என்று முடித்தார். "ஆமாம் அய்யா. இது ஊருக்கு ஒதுக்குபுறமான இடம். மேலும் இங்கு குடியிருப்புகள் கிடையாது. ஆகவே இங்கு சாலை வசதியோ வாகனங்களோ கிடையாது. அய்யா நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? மதம் என்றால் என்ன?". அதற்கு குரு, "ஓ நன்று! மதம் என்பது கடவுளை அடையும் வழி. மதம் மனிதனுக்கு கண் போன்றது. மதம் நம் பாதைக்கு வெளிச்சம் போன்றது. நாம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி செல்வதற்கு நமக்கு எப்படி கண், வெளிச்சம், பாதை முக்கியமோ அதைபோல் கடவுளை அடைய மதம் முக்கியமானது.  சரி! நீ என் கையை பிடித்துக்கொள்ள. நான் உன்னை வழிநடத்திச் செல்கிறேன்." என்று சொல்ல "அய்யா இந்த பாதை எனக்கு பரிச்சயமான பாதை. எங்களுக்கு பார்வையில்லா விடினும் கடவுள் அறிவுக்கண்ணையும் மனக்கண்ணையும் தந்திருக்கிறார்.  ஆகவே எங்களுக்கு இறைவனே வழிகாட்டுகிறார்".
சற்று நேரம் சென்றபின் இரவு தொடங்கியதால் எந்த ஒரு மின்விளக்குமற்ற அந்த பாதையில் அடர்ந்த இருள் பரவியது. இருள் பரவவே, மதகுருவுக்கு சற்று தடுமாற்றமும் பயமும் உருவாகியது. பாதை கண்களுக்கு புலப்படவில்லை. தட்டுத்தடுமாறி ஒருவழியாக அந்த பார்வையற்றவரின் கைகளை பிடித்துக்கொண்டார். பார்வையற்றவர் நம்பிக்கையோடு அவரை நடத்திச்சென்றார். "என்ன அய்யா உங்களுக்கு என்ன தடுமாற்றம்? உங்களுக்கு தான் கண்கள் இருக்கிறதே, பாதை இருக்கின்றதே, பிறகு ஏன் பயப்படுகின்றீர்கள்?"

ஆம். இப்படித்தான் நம் இறைநம்பிக்கைகளும் இருக்கின்றன. நம் அறிவினாலும் நம் புலங்களினாலும் உணர்த்தவற்றை மட்டுமே நாம் நம்ப முடியும். நமக்கு நல்லது நடக்கும் பொது மட்டும் நம் இறைநம்பிக்கை மேலோங்கி இருக்கும் துன்பப்படும் பொது அது குறைந்து போகின்றது. இறைவனை நாம் உண்மையாக வழிபட நம் ஆராய்ச்சிகளை, நம் மரபுகளை வழிவழி சடங்குகளை விட்டொழித்து மனமொற்றி முழுமையாக நாம் பூஜ்யம் என்றுணர்ந்து அவரிடம் நம்மை அர்ப்பணித்து தான் சரியான வழி. அனால் நாமோ இறைவனிடத்திலேயே வரலாற்றை, புவியியிலை, அறிவியலை ஆராய்கிறோம்  ஏன் இறைவனிடத்தில் கணக்கும் பார்கிறோம்.  கூடுதலாக, சிலர் இறைவனிடத்தில் அரசியலும் செய்கின்றார்கள்.
சிலர் மதம் என்பது கடவுளை பயிற்றுவிக்கும் பள்ளி என்கிறார்கள், பிள்ளை தன தந்தையிடம் உறவு பாராட்ட எந்த பள்ளி தேவை. பணியாள் தன தலைவனுக்கு பணிபுரிய எந்த பயிற்றுப்பாசறை தேவை.மதங்களை குறித்து எனக்குள் எழுந்த இந்த அச்ச உணர்வு எதனால் உண்டானது? மதம் என்ற பெயரில் மனிதன் இன்னொரு மனிதனை தாக்குகின்ற மிகக்கேவலமான இந்த காலகட்டத்தில், கடவுளை மறந்து மனிதன் மதத்தை மட்டுமே வழிபடுகின்ற இந்த காலகட்டத்தில் யாருக்குமே மனதில் ஒரு ஓரமாக மதத்தை குறித்த ஒரு அச்ச பார்வை இருக்கும். மதம் என்பது ஒரு நெருப்புசுடர். அதை எடுத்துக்கொள்பவனை பொறுத்து அதன் தன்மை மாறுகின்றது. விளக்கை ஏற்ற பயன்படும் நெருப்பு சமையல் செய்ய பயன்படும் அதே நெருப்பு அடுத்தவன் வீட்டை கொளுத்தவும் ஊரை கொளுத்தவும் ஏன் நாட்டை கொளுத்தவும் பயன்படுத்தல் போன்று மத வெறியர்கள் இன்று மதத்தின் பெயரால் மனித நேயத்தை அன்பை சகோதரத்துவத்தை ஒற்றுமையை கொளுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

ஒரு ஊரில் ஒரு சர்வ சமய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் சொற்பொழிவாற்ற பல்வேறு மதங்களை சேர்ந்த அறிஞர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. கடைசியாக பேச ஒரு நாத்திக அறிஞருக்கும் தன் கருத்தை பேச 10 நிமிடங்கள் ஒதுக்கி அவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். அடுத்தநாள் சொற்பொழிவிற்காக மிகச்சிறந்த கடவுள் மறுப்புக்கொள்கையைப்பற்றி சொற்பொழிவாற்ற தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அவர் தீவிரமாக சிந்தனை செய்யும் போதே அவர் மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பமும் அச்சமும்  உருவானது. சற்று நேரத்தில் உறக்கம் கண்களை தழுவ போய் படுத்துக்கொண்டார். நள்ளிரவில் அவர் காதுகளில் ஒரு அசரீரி கேட்டது. "அன்பனே! எழுந்திரு! நான் கடவுள் பேசுகிறேன். நாளை நடக்கும் மாநாட்டில் என் சார்பாக நீ போய் பேசுவாயாக." அடுத்த நாள் காலை 9  மணி அளவிலே மாநாடு தொடங்கியது. ஒவ்வொரு மதத்திலிருந்தும் பல்வேறு மத அறிஞர்கள் தங்கள் மதங்களை பற்றி எங்கள் மதம் தான் பெரியது, உயர்ந்தது, பழமையானது அப்படி இப்படி என்று வானளாவ புகழ்ந்துக்கொண்டிருந்தர்ர்கள். ஏறக்குறைய 8 மணி நேர சொற்பொழிவுக்கு பின், அந்த நாத்திக அறிஞருக்கு 10 நிமிடம் பேச மேடைக்கு வந்தார். தன் பேச்சைத் தொடங்கினார். அந்த நாத்திக அறிஞர், "மிகவும் வியப்படைகின்றேன். இது ஒரு ஆன்மிக மாநாடு என்று அறிவித்துவிட்டு இங்கு நாத்திகத்திறகு 8 மணி நேரம் ஆத்திகத்திற்கு 10 நிமிடங்களும் ஒதுக்கி இருக்கின்றீர்களே!" என்று தொடங்கி தன்னிடம் பேசியதைப்பற்றியும் மேலும் கடவுளுடைய அருமை பெருமைகளை, உன்னதத்தை மிக அருமையாக பேசி முடித்தார்.

கூட்டத்திலுள்ள ஒருவருமே அவரை நம்பவில்லை மாறாக, அவரிடம், " கடவுள் எப்படி இருந்தார்? அவர் பெயர் என்னவென்று சொன்னார்? அவர் எங்க மதக்கடவுள் தானே?". இப்படி பல வினாக்கள்.

இப்படித்தான் நாமும் நம் மரபுகளை பின்பற்றி கொண்டு நாத்திகவாதிகளாகவே திரிகின்றோம்.  உண்மையிலே நாத்திகன் கடவுள் மீது உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டு தீமை செய்ய பயப்படுகிறான். அவனுக்கு மதத்தின் மீது தான் வெறுப்பே அன்றி உண்மை கடவுளின் மீது வெறுப்பல்ல. ஆனால் அதி தீவிரமாக மத்தை பேசிக்கொண்டு அலையும் நம்மில் பலர் கடவுளையும் மறந்து மனிதரையும் வெறுத்து எத்துணை தீங்கு செய்கின்றோம்..
"கோயில் பூனை திருட்டுக்கு அஞ்சாது"

விவிலியத்தில் ஒரு வசனமுண்டு
"கண்ணால் காண்கிற உன் சகோதரனை (உன் சகமனிதனை) அன்பு செய்யாத நீ கண்ணால் காண முடியாத கடவுளை எப்படி அன்பு செய்ய முடியும்?"
  
முஹம்மது நபியின் ஒரு வாக்கு
"தன்னைபோல் பிறரை அன்பு செய்யும் வரை உங்களில் எவருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை"

வள்ளலாரின் வாக்கு
"வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
விவேகானந்தரின் வாக்கு
"எல்லா அன்பும் நீட்சியானது. ஆகவே அன்பு ஒன்றையே வாழ்வின் சட்டம்"

தேச பக்தர் என்று சொல்லிக்கொண்டு உன் தேசத்தில் உன் தேசத்தில் பிறந்த மற்றொரு குடிமகனை மதத்தின், சாதியின் அடிப்படையில் ஒடுக்கி, தூற்றி, வசைபாடி அவனுக்கு தீங்கிழைப்பது தான் தேச உணர்வா ? மதத்தின் பெயரால் அமைதியை கெடுத்து அன்பை குழைத்து ஒற்றுமையை கெடுப்பது தான் தேசபக்தியா?

எல்லா மதங்களிலும் ஒரு வாழ்த்து மொழி உள்ளது. அந்த மொழி மதத்தை கடந்து இனத்தை கடந்து எல்லா மனிதருக்கும் சொல்ல வேண்டியது. ஆனால் மதங்களை பின்பற்றும் நாம் செய்கிறோமா? நிச்சயமாக இல்லை. அப்படி சொல்வதாயிருந்தாலும் ஒரே மாதத்திற்குள் சொல்லி கொள்கிறோம். அந்த மொழி அமைதியின் வாழ்த்து மொழி

ஷாலோம்  -  யூத வாழ்த்து
அஸ்ஸலாமு அலைக்கும்  -   இஸ்லாமிய வாழ்த்து
உங்களுக்கு அமைதி உண்டாகட்டும் -  கிருத்துவ வாழ்த்து
ஓம் சாந்தி  -  இந்து வாழ்த்து

எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தம் தான். அர்த்தத்தோடு கடவுளை தேடுவோம். 


ஒன்றே குலம் ஒருவரே இறைவன்
மதத்தை மறந்து மனிதனை நேசி
இன்பமாய் வாழ இயற்கையை நேசி


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...