ஆன்மா எனும் அனாதையாய்
அழுகின்ற குழந்தை நான்
அம்மா என்றுனை
அழைக்கும்
அலறல் பாடல் இஃது
அன்பே ! எந்தன்
ஆருயிரே !
ஆராட்டும் அருட் கடலே !
முன்பே எனைத்
தேர்ந்த
மன்னவனே! ஆளும் விண்ணவனே !
தாலாட்டுவாய் உந்தன்
மடியிலிட்டு
தந்தையாய் சீராட்டுவாய் தோளிலிட்டு
பாலூட்டுவாய் உந்தன்
அன்பால்
பாடி
மகிழ்வேனே நின்பால்
பிடித்திடுவாய் என்கரம்
பற்றி
பிணைத்திடுவாய் உன் அன்பிலொற்றி
அடித்திடுவாய் என்பிழைக்
கண்டு
அரவணைப்பாய் ஏக்கம் கொண்டு
தந்தைதாய் நான்
மறந்தேன்
தமயர்தம் உறவும் மறந்தேன்
நிரந்தர உறவென்பேன் உனைத்தாயாய்
நான் உறவாடிவந்தேன் உன்சேயாய்
மழலைச் சொல்
நானறியேன்
மதி நுட்பம் தானறியேன்
நிழலாய் உனைப்
பற்றியே
நடந்து நான் பழகுகிறேன்
வாக்கினிலே தெளிவு இல்லை
வாழ்வில் புரிவு இல்லை
ஆக்கின உந்தன் பரிவிலே
ஆன மட்டும் செய்கிறேன்
தத்தி
தத்தித் தவழ்கையில்
தைரியம் எனக்குநீ தந்தாய்
புத்தி பிரண்ட நாழிகையில்
புரிந்து கொண்ட எந்தந்தாய்
அறிவு அமுதம்
காட்டினாய்
அழகு பெயர் சூட்டினாய்
செறிவு கொண்ட
ஞானமதை
சேர்த்து எனக்கு
ஊட்டினாய்
வழிபிறழ்ந்தேன் என் வாழ்வினில்
வழியே நீயென் றறியாது
விழிகளில் கண்ணீர் குளமாகி
வீரிட்டு நான் அழுகின்றேன்
தேற்ற
நீர் வாராயோ
தேடும் உள்ளம் பாராயோ
போற்ற
எந்தன் சிறுவாயும்
பொலிவாகும் நின் வசத்தில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக