சனி, 12 செப்டம்பர், 2020

காலம் ஒருநாள் பதில் சொல்லும் .(இன்றைய சிந்தனைக்கு)

மகேஷ் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன்.  வகுப்பிலேயே படிப்பில் எல்லாவற்றிலும் கடைசி.  விளையாட்டிலும் அப்படியே.  எந்த ஒரு ஆசிரியருக்கும் அவனைப் பிடிக்காது.  மாணவர்களின் கேலிகிண்டலுக்கும் அடிக்கடி ஆளாவான்.  அன்று பள்ளியின் ஆண்டு விழா.  விழாவுக்குத் தலைமை தாங்க ஒரு மிகப்பெரிய தொழிலதிபரை அழைத்திருந்தனர்.  நிகழ்ச்சியில் எடுபுடி வேலைக்காக மகேஷை வைத்திருந்தனர்.  மகேஷை சிறிது நேரம் கவனித்த அந்தத் தொழிலதிபர் அவனை மேடையில் வந்து நிற்கச்  சொன்னார். உடனே அவன் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.  அவனும் கூனிக் குறுகி மேடையில் நின்றான்.  பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்து, தலைமையேற்பு உரையைத் தொடங்கினார் அந்தத் தொழிலதிபர். "இந்தப் பையனை நான் எதற்கு மேடையில் நிற்க வைத்தேன் என்று உங்களில் ஒருவருக்கும் தெரியாது. அவனை நீங்கள் கேலி செய்து சிரிக்கின்றீர்கள். முதல் விஷயம், ஒருமுறை நான் ஒரு மிகப்பெரிய  வெளிநாட்டு இறக்குமதியாளரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்டேன். அவரிடம் மிகப்பெரிய ஆர்டர் காத்திருந்தது.  அவர் எல்லாவற்றிலும் சரியாக இருக்கு வேண்டும் என்று எதிர்பார்க்க கூடியவர்.  விமான நிலையத்தை நோக்கி கார் சென்று கொண்டிருந்த பாதி வழியில் காரில் பழுது ஏற்பட்டு விட, எனக்கு டிரைவர் மீது உச்சக்கட்ட கோபம்.  நேரத்திற்கு விமான நிலையம் செல்ல வில்லை என்றால் அந்த பெரிய ஆர்டர் என் கைவிட்டு போய்விடும். நல்லவேளை சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ மெக்கானிக் கடை இருந்தது.  டிரைவர் அங்கு சென்று விசாரிக்க, கடையில் ஒரு சின்ன பையன் மட்டுமே. "அப்பா வர ஒரு மணி நேரம் ஆகுமே" என்றான். டிரைவர் பக்கத்துல வேற ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்கா? எனக்கேட்க இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவுல ஒன்னு இருக்கு என்றான். நிலையின் தீவிரத்தை உணர்ந்த நான், அந்த பையனையே வரச்சொன்னேன் . "சார்!  எனக்கு அந்த அளவுக்கு ஒன்னும் தெரியாது. அப்பா வரட்டுமே"  என்றான். பிறகு என்னுடைய கட்டாயத்தினால், வேலையை தொடங்கினான். இருபது நிமிடங்களுக்குள் வேலை முடிந்து கார் அற்புதமாக கிளம்பி சரியான நேரத்தில் விமான நிலையமும் அடைந்தேன்.  முப்பது கோடி ரூபாய் ஆர்டரும் கிடைத்தது. அந்த பையன் யாருமல்ல இந்தப் பையன் தான். இவனால் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.  உங்களால் முடியுமா?
இரண்டாவது விஷயம், நாற்பது வருடங்களுக்கு முன்னாள் இதேப்பள்ளியில்
இந்த பையனைப் போன்று ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் கேலி செய்யப்பட்டு எடுபிடியாக இருந்தவன் நான். இன்று உங்கள் முன்னால் இந்தப் பள்ளி விழாவுக்கே தலைமைத் தாங்க வந்துள்ளேன்"  என்று சொல்லி முடித்தார் .

இப்படிதான் ஒவ்வொருவரையும் அவர்களின் குறைகளை வைத்தே நாம் மட்டம் தட்டி வாழ்கிறோம். அதிகம் சம்பாதிப்பவன் அறிவாளியும் அல்ல.  குறைவாய் சம்பாதிப்பவன் முட்டாளும் அல்ல.  அவனவனுக்கு ஏற்றது போலவே ஆண்டவர் கொடுக்கின்றார்.  மெத்த படித்த ஒரு டாக்டரால் தீராத ஒரு நோய்  ஒரு சிறு வைத்தியனால் அல்லது பாட்டி வைத்தியத்தால் குணமாகிவிடும். பெருமைக்காக பல ஆயிரங்களை மெத்த படித்த டாக்டருக்கு கொடுக்கும் நாம் கடைசியில் நூறு ரூபாய் வைத்தியத்தில் குணம் பெறுகிறோம். செல்வம், அந்தஸ்து, ஆஸ்தி, புகழ், அறிவு இவை அவனவனுக்கு தக்கவாறு இறைவனால் அருளப்பட்ட பிச்சையும் கூட. அதனில் உங்களை நீங்களே உயர்த்திக்கொண்டு மற்றவரை இழிவுபடுத்தி இறைவனின் புகழுக்கு இழுக்கு சேர்க்காதீர்கள்.  காலம் ஒருநாள் பதில் சொல்லும் .

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...