நடுத்தர மனிதர் ஒருவர் ஒரு மதகுருவை சந்திக்கச் சென்றார். குருவும் அவரை வரவேற்று "என்ன விஷயம்?" என்று கேட்க, "யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க. சகோதர, சகோதரிகள், மனைவி மற்றும் பிள்ளைகளும் கூட." என்று ஆரம்பித்து சிறுவயது முதல் அப்போது வரையான பல ஆண்டு வரலாறுகளை (பிறர் மீதான வழக்குகளை) அடுக்கிக் கொண்டே போனார். பொறுமையாக அனைத்தையும் கேட்ட குருவும், "சரி, இரண்டு நாள் கழித்து உங்கள் மனைவியோடு வாருங்கள்" என்றார். "சாமி, மனைவி என்னுடன் இல்லை . நான் தனித்து இருக்கிறேன்" என்றார். குருவும் புரிந்து கொண்டு, "சரிப்பா, நான் உனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து தோஷம் ஏதாவது இருக்கானு பார்க்குறேன். உனக்கு சம்மதம் தானே." என்று கேட்க அரை மனதுடன் அவரும் ஒத்துக் கொண்டார். குருவும் அந்த மனிதர் வீட்டுக்கு ஒரு பெரிய மூட்டையுடன் வந்தார். வீடு சுத்தமாகவும் அலங்கரித்தும் வைத்திருந்தார் அந்த மனிதர். வந்த குருவும் தன மூட்டையை திறந்து அதிலிருந்த தன பழைய துணிகளையும் பழைய காகிதங்கள், புத்தகங்களை எடுத்து அறை முழுவதும் விரித்து வைத்தார். காலை சாப்பாடு, மதியம் சாப்பாடு , இரவு சாப்பாடு என அனைத்தையும் அந்த மனிதர் உணவு விடுதியிலிருந்து வருவித்து குருவுக்கு கொடுக்க, குருவும் அப்படியே சாப்பிட்டு அந்த பொட்டலங்களையும், எச்சிலையும் அறையிலேயே போட்டு வைத்தார். கையையும் அறையிலேயே கழுவினார். வந்த குரு தனக்காக ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த அம்மனிதருக்கோ பெருத்த ஏமாற்றம். வந்ததிலிருந்து குரு எதுவும் செய்யாமல், சாப்பிடுவது படிப்பது தூங்குவது என்றே இருந்தார். அறை முழுதும் குப்பை போல கிடந்தது. இதற்கு மேலாக குரு தன் பழைய துணிகளைத் துவைத்து தருமாறு கூற, அம்மனிதர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். "சாமி! சிறு வயது முதல் இன்றுவரை நான் யாருக்கும் எந்த வேலையும் செய்ததில்லை. வேலை செய்வதாயிருந்தால் எனக்காக மட்டும் தான் செய்வேன். நீங்கள் வந்து எனக்காக ஏதாவது செய்வீர்கள் என்று நினைத்தால் வந்த மூன்று நாட்களும் எனக்கு வேலையே கொடுத்தீர்கள். என் பேச்சைக் கூட இந்த மூன்று நாட்களும் கேட்க மறுத்தீர்கள். என் வீட்டையே பாழ்படுத்தி விட்டீர்கள்" என்று கோபமாக கத்தினார்.
குரு, அமைதியாக வாய் திறந்தார். "மகனே! இந்த மூன்று நாட்களிலும் உன்னை பற்றி அறிந்து கொண்டேன். இந்த அறையைக் குப்பையாக்கியதற்கு எவ்வளவு கோபம் கொள்கிறாய். உன் மனதை நீ குப்பைத் தொட்டிபோல் பல ஆண்டு குப்பைகளால் நிரப்பி வைத்திருக்கிறாய். பகைமை, வெறுப்பு, பொறாமை, தாழ்வுமனப்பான்மை, அகந்தை, மன்னியாமை என பிறருடைய தவறுகளையே வருட கணக்கில் உன் மனதில் சேமித்து வைத்திருக்கிறாய். உன்னைப் பொறுத்தவரை, எல்லாரும் உனக்கு உதவி செய்ய வேண்டும், உன் பேச்சை கேட்க வேண்டும் உனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றே விரும்புகிறாய். ஆனால் பிறருக்கு இதை நீ செய்ய மறுக்கிறாய். இந்த உலகில் நீ உன்னை மட்டுமே விரும்புகிறாய். நீ உன்னை மட்டுமே நம்பவும் செய்கிறாய். ஆனால் எல்லோரிடமும் எல்லாம் எதிர்பார்க்கிறாய். உன்னையே நீ மாற்றாதவரை, உனக்கு நான் அறிவுரை கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாய்" என்று கூறி குருவும் தனது மூட்டையோடு நடையைக் காட்டினார்.
"பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும். மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்." (நீதிமொழிகள் 18:1-2)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக