சென்னையின் ஒரு முக்கிய வீதியில் அமைத்துள்ள ஒரு அசைவ உணவு விடுதியில் உணவு பரிமாறுபவனாக (Waiter) இருப்பவன் பாபு. அன்று அவனது கண்காணிப்பில் உள்ள மேஜைகளுக்கு இருவிதமான புதிய வாடிக்கையாளர்கள் வந்தனர். ஒருவர் டிப் டாப்பாக உடை அணிந்து காரில் இருந்து இறங்கி வந்த ஒரு பணக்காரர். மற்றொருவர் கசங்கலான உடையுடன் நடந்து வந்த வந்த ஒரு முதியவர். செதுக்கப்படாத மீசை தாடியுடன் சோகமான உருவத்தில் உட்கார்ந்திருந்தார். பாபு பணக்காரரிடம் சென்று பணிவாய் மெனு கார்டை கொடுத்து அவர் அருகில் ஆர்டருக்காக காத்திருந்தான். கொஞ்சம் நாழியாக மெனு கார்டை பார்த்துக் கொண்டிருந்த அவர் கடைசியாக ஒரு பிரியாணி ஆர்டர் செய்தார். அவரை கவனிப்பதில் குறியாய் இருந்த பாபு அந்த முதியவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். பணக்காரருக்கு உணவை பரிமாறி விட்டு வந்த பாபு அந்த முதியவரிடம் "பெருசு! என்ன வேணும்?" என்று அதிகாரத் தொணியில் கேட்க முதியவரும் "முதல்ல கொஞ்சம் தண்ணிக் கொடுப்பா" என்றார் பணிவுடன். பாபு தண்ணீர் உள்ள ஜாடியை (Jug) வலுவாக சத்தத்துடன் முதியவரின் மேஜையில் வைத்தான். "ஹ்ம்ம். என்ன சாப்பிடுறீங்க?" என்று அதட்டலாக கேட்க, முதியவரும் மெனு கார்டை பார்க்காமல், "என்ன இருக்கு தம்பி?" என்று கேட்க, பாபு ஏதோ சில உணவுகளை சொல்ல, அவற்றில் சிலவற்றை ஆர்டர் செய்தார் முதியவர். பாபுவும் சந்தேகத்துடன் அவரை ஏற இரங்கப் பார்த்துவிட்டு, "பெருசு! நீ ஆர்டர் பண்ண அயிட்டம் மொத்தம் ஐநூறு ரூபாய்க்கு மேல வரும். பணம் வச்சிருக்கியா?" என கேட்க முதியவரும் பணம் வச்சிருக்கேன். பசிக்குதுப்பா. மொதல்ல சாப்பாடு எடுத்துட்டு வா" என பவ்வியமாக சொன்னார். சில நேரம் கழித்து முதியவர் முன் ஆர்டர் செய்த உணவுகள் வந்தன. பாபுவும் பணக்காரரை கவனிக்க சென்று விட்டான். "சார்! வேற ஏதாவது வேண்டுமா?" என் கேட்க, "அவ்வளவுதான்! பில்லை போடு " என்று அதட்டலாக பதில் வந்தது. பில்லுடன் கூடிய கார்டை பாபு பவ்வியமாக அவர்முன் நீட்ட, பணக்காரர் தன் டெபிட் கார்டை கொடுத்து டிப்ஸ் இருபது ரூபாயை பில்லில் எழுதி கொடுத்து பரிவர்த்தனை முடிந்தவுடன் டெபிட் கார்டு வாங்கி கொண்டு கிளம்பிவிட்டார். அதுவரை பாபு முதியவரை கவனிக்க வில்லை. முதியவர் பசிதீர எல்லா உணவையும் சாப்பிட்டு முடித்தார். இப்போது பாபு அவர் அருகில் வந்து "வேற ஏதாவது வேணுமா ?" , என்று கேட்க முதியவரும், "போதும்பா! இதுக்கு மேல என்னால சாப்பிடமுடியாது". எனச் சொல்ல சிறிது நேரத்தில் பாபு வெறும் பில்லை (அட்டை இல்லாமல்) முதியவரிடம் நீட்ட, முதியவரும் பில் கவுண்டரில் பணத்தை செலுத்திவிட்டு கிளம்பினார். மேஜையை சுத்தம் செய்ய வந்த பணியாள் முதியவர் சாப்பிட்ட தட்டைத் (plate) தூக்க, தட்டின் அடியிலிருந்து ஐநூறு ரூபாய் பறந்து வந்து கீழே விழுந்ததை பாபு பார்க்க, பாபுவின் கண்கள் கலங்கின. முதியவரை தேடி மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்த போது, முதியவரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.
பல அரசு அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பன்னாட்டு நிறுவனங்களில் (MNCs), தனியார் நிறுவனங்களில், உணவு விடுதிகளில், சேவை மையங்களில் இப்படி பட்ட நிலையை காண முடிகிறது. வாடிக்கையாளர்களின் உடை, தோற்றம் அவர்களது பணி நிலை (job position) என பல்வேறு கோணங்களில் பலவிதமான அணுகுமுறைகளை காண முடிகிறது. இது நாய்களின் குணம். நாய் தான் உருவம் தோற்றம் உடைகளை வைத்து மனிதரிடம் நடக்கும் தன்னுடைய பழைய ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறிய பலரும் கூட இந்த தவறுகளை செய்கின்றனர். சேவை செய்யும் பணியாளர்கள், "ஆணவம் மற்றும் வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் மிடுக்கு வாதத்தை" எம்.என்.சி கலாச்சாரம் (MNC Culture) அல்லது கார்ப்பரேட் கலாச்சாரம் (Corporate Culture) என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள் . அமைப்பு அதைக் கவனித்து அத்தகைய விலங்கு நடத்தைகளை அகற்ற வேண்டும்.
அது கலாச்சாரம் அல்ல நாய் குணம்.
"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" (திருக்குறள் 667 )
"உடல் அழகுக்காக ஒருவரைப் புகழ வேண்டாம்; தோற்றத்துக்காக ஒருவரை இகழவும் வேண்டாம்; பறப்பனவற்றுள் சிறியது தேனீ; எனினும், அது கொடுக்கும் தேன் இனியவற்றுள் சிறந்தது.
4 நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப் பெருமை பாராட்டாதே; நீ புகழ்பெறும் நாளில் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே. ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை; அவை மனிதரின் கண்ணுக்கு மறைவாய் உள்ளன."(சீராக் 11:2-4)
4 நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப் பெருமை பாராட்டாதே; நீ புகழ்பெறும் நாளில் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே. ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை; அவை மனிதரின் கண்ணுக்கு மறைவாய் உள்ளன."(சீராக் 11:2-4)
"ஒரு வாடிக்கையாளர் நமது நிறுவனத்தின் மிக முக்கியமான பார்வையாளர். அவர் நம்மைச் சார்ந்து இல்லை. நாம்தான் அவரைச் சார்ந்து இருக்கிறோம். அவர் நமது வேலைக்கு இடையூறு விளைவிப்பவர் அல்ல. அவர்தான் நமது வேலையின் நோக்கம். அவர் நமது வணிகத்தின் வெளிஆள் அல்ல. அவர் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார். அவருக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அவருக்கு ஒரு உதவி செய்யவில்லை. அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர் நமக்கு ஒரு உதவி செய்கிறார். " (காந்தியடிகள்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக