தினேஷ் ஒரு கார்பொரேட் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை செய்து வந்தான். எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாது இருந்து வந்தான். அவர்கள் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்வதால் ஒரு சில நட்பு வட்டாரங்கள் உருவாகின. பிறந்த நாள் பார்ட்டி, திருமண பார்ட்டி, திருமண நாள் பார்ட்டி இப்படி பல பார்ட்டிகளை அந்த நட்பு வட்டாரங்கள் கொண்டாடுவர். அதில் மதுபானங்களோடு, சிகரெட் மற்றும் சில போதை வஸ்துக்களும் பரிமாறப்பட்டன. தினேஷ் இந்த பார்ட்டிகளை பல நேரங்களில் தவிர்க்க முயன்றாலும் "சும்மா வந்து கம்பெனி குடுப்பா. நீ கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் சாப்பிட்டா போதும்" என்ற கட்டாயத்தினால் சில பார்ட்டிகளில் கலந்து கொள்வான். அன்று அப்படி நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களில் ஒருவன் குளிர் பானத்தில் சிறிது போதை மருந்தை கலந்து தினேஷுக்கு கொடுத்துவிட்டான். எதுவும் அறியாத தினேஷும் அதைக் குடிக்க ஆரம்பித்தான். அந்த விஷம் அவனது உடலில் கலந்ததும் ஏதோ ஒரு மயக்கத்தை அதில் உணர்ந்தான். அது அவனுக்கு சுகம் தரவே, பல பார்ட்டிகளில் கலந்து கொண்டு மதுவுக்கும் போதை பொருளுக்கும் இன்று அடிமையாகி நடை பிணமாய் இருக்கிறான். முதலில் அவனுக்கு போதை மருந்தை குளிர் பானத்தில் கொடுத்தவனிடம் "ஏன்டா நீ இப்படி செய்தாய்?" என்று கேட்டால், "சும்மா ஒரு விளையாட்டுக்காக (Fun) செய்தேன். அவன் இப்படி ஆவான் என்று யார் கண்டார்" என்று குற்ற உணர்ச்சியில்லாமலே பதில் சொல்வான்.
சிலர் இப்படி பலருடைய வாழ்க்கையை கெடுத்து சீரழித்த பின், "இதை நான் விளையாட்டுக்கு செய்தேன்", "நானும் தான் கஷ்டப்படுறேன்" "தெரியாம பண்ணிட்டேன், இப்ப என்ன பண்ண முடியும்?" என்று ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் மிருகங்களாக வாழ்கின்றனர். இவர்கள் தனி மனிதர்களை அல்ல ஒரு சமுதாயத்தையே பாழ்படுத்துகிறார்கள்.
"கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும் பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,
19 பிறனை வஞ்சித்துவிட்டு “நான் விளையாட்டுக்குச் செய்தேன்” என்று சொல்பவரே." (நீதிமொழிகள் 26 : 18-19)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக