செவ்வாய், 20 அக்டோபர், 2020

யுத்தம் செய்ய வருகின்றார்! (தமிழ் கவிதை)

யுத்தம்   செய்ய   வருகின்றார்!
    யெஹோவா  நமக்காய் வழக்காட!
எத்தனை   எதிரிகள்  வந்தாலும்,
    எட்டுத்   திசையும் சிதறிடுவர்.

வில்லினில்  அம்பினைத் தொடுத்தே,
    வேலையும்  ஈட்டியும்   எறிந்திடுவார். 
சொல்லினில்  தீக்கனல்   பறந்திடும். 
    சுற்றிலும்   தீயோரை  அழித்திடும்.

கடுஞ்சினம்   கண்களில்  தெரிய,
    காடும்   மலையும்   கருகிடும்.
ஒடுங்கிடும்   இந்த   வையகம்.
    ஓசையுடன்   அனல்  கக்கும்.

முகில்களைத்   திரட்டி  வந்திடுவார். 
     முனகும்   குரலுக்குச் செவிகொடுப்பார் 
அகிலம்    முழுதும்   தீர்ப்பளிக்க, 
      ஆண்டவர்   இதோ  எழுந்திடுவார்.

காற்றையும்  நீரையும்  அழைத்திடுவார்.
     கனல்     நெருப்பையும்   சேர்த்திடுவார்.
ஆற்றையும்   அலையும்  பெருக்கெடுக்க,
     ஆழியில்   அதிர்ச்சியை  ஆக்கிடுவார்.

தீங்கினைப்    பொறுக்கா   இறைவனவர்!
     தீயினால்   பகைவரை   அழித்திடுவார்.
ஓங்கிடும்      அவர்தம்    குரலால், 
     ஓங்கிய     மரங்களும்  வீழ்ந்திடும்.

நீதியும்    நியாயமும்   நிலைநாட்ட,
    நெருப்பாய்   அவரும்  வந்திடுவார்.
கதியும்   நாதியுமற்ற   மனிதருக்கு, 
    களிக்கும்   தீர்ப்பை   அளித்திடுவார்.

பாவிகள்   அனைவரும்  அவர்முன்னே, 
     பதறுகள்    போன்றே   ஆகிடுவர்.
சாவிலும்    கொடிய    வருத்தமதை,  
     சதிகாரர்   யாவரும்  அடைந்திடுவர்.

காரிருள்   உலகினை    மறைக்க,
    கதிரவன்    போல்நீதி  எழுந்திடும்.
பேரிடியும்    மின்னலும்  தாக்கும்,
    பொய்மை   கயமை   தனையே.

பாரினில்   பேரமைதி   நிலவும்.
    பரமனின்  மாட்சி   விளங்கும்.
நேரிய    மனங்களோடு  அன்பும், 
    நீதியும்   ஒன்றாய்த்   தழுவும்.

நம்பிக்கைக்  குருட்டு  மனிதரே!
    நாடியே   இறைவனை  நாடுங்கள்.
தேம்பியே   உங்கள்   பாவத்திற்காய்,
    தேவனின்  மன்னிப்பைத்  தேடுங்கள்.


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...