வியாழன், 22 அக்டோபர், 2020

பாவத்தை மறைத்தலா? அறிக்கையிடுதலா?

கதை - 1: 
அவர் ஒரு ஆலயத்தில் இளம் குருவாகப்  பணியாற்றியவர்.  எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடியவர்.  பார்ப்பதற்கு கவரக் கூடிய அழகான தோற்றமும் கொண்டவர்.  அவருடன் உரையாடுவதற்காக பலர் அவருடைய அறைக்கு தினமும் வருவர்.  அதில் இளம் பெண்களும் திருமணமான பெண்களும் அடக்கம். அவர்களுள் சிலர் அவரைத் தங்கள் வலையில் சிக்க வைத்து உடலுறவு  கொண்டனர். தினமும் அந்த இளங்குருவும் அதில் பழக்கம் கொண்டார். நாளடைவில், அவரது மோகம் அதிகரித்து சிறுவர்கள் மீது திரும்பியது.  பல சிறுவர்கள் அவரிடம் தவறாக வழி நடத்தப்பட்டனர்.  குற்ற உணர்வு அவரிடம் எழவில்லை. தான் செய்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்க அவர் மனம் இறங்கவில்லை. "யாரும் செய்யாத பாவத்தையே நான் செய்து விட்டேன்" என்று தன் தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டார். ஒருநாள் காய்ச்சலுக்காக மருத்துவமனையை அணுகிய  போது, பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அது அவருக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு நாளும் அவர் அதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் அவர் மனத்தைக் குடைந்து எடுத்தன. குற்ற உணர்வு நாளுக்கு நாள் மேலிட,  அவர் தன்னையே மாய்த்துக் கொண்டார்.  முதல்நாள்  பாவத்திலேயே பாவத்தை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டிருந்தால், ஒரு பாவத்தோடு முடிந்து போயிருக்கும். 

கதை 2: 
ஜெப்ரி டமேற், குழந்தை வளர்ப்பில் அவர்களின் பெற்றோர் செய்த பொறுப்பற்ற தன்மையினால் உருவான ஒரு மிகப் பெரிய சைக்கோ கொலையாளி. சிறு வயது முதலே திருட்டு, கேட்ட வார்த்தைகள், பிறரை அடித்து துன்புறுத்துவது,  பள்ளி பருவத்திலேயே  உடலுறவு கொள்வது, மிருகங்களோடு புணர்வது, அவற்றின் உறுப்புகளை அறுப்பது என வளர்ந்த அவனைப் பெற்றோர் முறையாக தண்டித்து வளர்க்காததனால், குற்ற உணர்ச்சியே இல்லாதவனாக வளர்ந்து தன் 18 வயதில் முதல் கொலையை செய்தான்.  இப்படி குற்ற உணர்ச்சி இல்லாமல் தடயங்களும் இல்லாமல் பல கொலைகள், கற்பழித்து கொலை செய்தல் என பல குற்றங்களை செய்து கொண்டே சென்றான்.  கொலைவெறியில் முற்றிப் போன அவனது மனதில், எந்த உளவியல் ஆலோசனைகளோ, அறிவுரைகளோ எடுபடவில்லை.  முடிவில் சிறையில் உள்ள சகவாசியால்  கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டான். 

ஒரு பாவத்தை மறைத்தல் என்பது பல பாவங்களுக்கு கூட்டி செல்லும் வழியாகும்.  முதல் பாவத்திலேயே குற்ற உணர்ச்சியோடு, பாவத்தை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டால், அது நம்மை அந்த பாவத்திலிருந்து விடுவிப்பதுமன்றி வேறு பாவத்திற்கும் இட்டுச் செல்லாது.  சில வேளைகளில் நமது தவறுகளை நாமே நியாயப்படுத்தி கொள்கிறோம், "இது சின்ன தவறு தானே"  "எல்லோரும் செய்வது தானே நானும் செய்தேன்""இது எல்லாம் பாவம் இல்லை" "அவன் அப்படி செய்ததனால் நான் செய்தேன்" என்று.   நமது குற்றங்களுக்காக உடனுக்குடன் இறைவனிடம் அவற்றை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்பு கோரினால், நம் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டு, அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ முடியும். 

பாவத்தை மறைப்பவர்கள் ஒருநாள் மனநோயாளியாகவோ அல்லது ஒருநாள் சைக்கோவாகவோ மாறக்கூடும்.

முதல் பாவம் செய்த ஆதாமும் ஏவாளும் கூட தங்கள் பாவத்தை இறைவனிடம் மறைக்க முயன்றனர்.  தாவீது தன் குற்றங்களுக்காக இறைவனிடம் எல்லோர்  முன்பாகவும் மன்னிப்புக் கோரினார். 

நாமும் நமதுக் குற்றங்களுக்காக, நமது குடும்ப செபத்தில் வெளிப்படையாக பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டாலோ அல்லது ஆலயத்தில் வெளிப்படையாக இறைவனிடம் பாவத்தை அறிக்கையிட்டாலோ அதை விட சிறந்த மனமாறுதல் இருக்க முடியாது. 

"தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார்." (நீதிமொழிகள்  28:13)

"என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று. ‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்."   (சங்கீதம் 32:3-5)

"மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,"  (லேவியர் 5:5)


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...