திங்கள், 19 அக்டோபர், 2020

மறப்பதா? மன்னிப்பதா? (தமிழ் கவிதை)

என்  பகைவரை    நான்
    எப்படி  மன்னிக்க  வேண்டும்?
என்று  இறைவனிடம் கேட்டேன். 
    என்னைப்போல் மன்னித்திடு என்றார்.

நான் சொன்னேன் இறைவா!
    நீரோ  கடவுள்  மன்னிக்க!
நான்   மனிதன்  அன்றோ !
    நாளும் நினைவுகள் நொறுக்க!

மன்னிக்கும் முதல்படி  மறப்பது. 
    மற்றவர்   பிழைதனை மறப்பது. 
இன்னா  செய்தாரை   ஒறுக்க,
    இனியவை   செய்துவிடு  என்றார். 

தீமைசெய்த  பகைவருக்கு   எப்படி 
    துணிந்து   நன்மைகள்  செய்வேன்?
இமைமூடும்  பொழுதும்  அவர்செய்த 
    இன்னல்கள்   எண்ணம்  வருமே!

மறக்கும்   மனிதர்  இயல்பினில்,
    மற்றவர்  பிழைகள்  மறந்துபோகா.
இறக்கும்    வரையிலும்  ஏனிந்த 
    இறுக்கம்  மனதில்  இருக்கும்?

தொலைந்து  போவென்று  சொல்ல,
     தொல்லைகள்   இவை   இல்லை. 
கலைந்துப்   போகா    வண்ணம், 
     குத்திய    துரோகச்  சின்னங்கள்.

வடுக்கள்   வெளியில்  தோன்ற, 
     வேதனை   அதிகம் கொண்டேன் 
இடுக்கண்   நேரும்  பொழுதும், 
     இவையே   வருத்தக்  கண்டேன்.

இறைவா!  வரமொன்று தாரும்!
      இனியவை   என்னுள்ளம்  சூழ்ந்திட, 
கறையாவும்  மறைந்திடும்  வண்ணம், 
      களைகளை  மறந்திட   வேண்டும்.

கதிர்களோடு   சேர்ந்து  வளரும் 
     களைகளை   என்னுள்  களைந்திடும்!
புதிர்போன்ற   எந்தன்  வாழ்வில், 
     புனிதம்   நிறைந்திட  வேண்டும்!

மன்னிக்க  இயலா   நிலையில்,
    மறக்க   வேண்டும்  பகைவரை.
எண்ணிய  எண்ணம்  யாவிலும்,
    எதிர்பார்ப்பு   என்பது  நீங்கனும்.

தப்பியும்    தவறான  எண்ணம் 
    தங்கிட   வேண்டா   மனதினில்.
சிப்பிக்குள்   முத்தாய்  உம்நினைவு, 
    சிந்தையில்  இருக்க  வேண்டும்!

என்னுள்ளம்   உமது  சொந்தம்.  
    ஏற்றிடுவீர் உம்மொளி   விளக்கை. 
மின்னும்  ஒளிச்சுடர்   போன்றே, 
    மனதில்  மிளிரனும்  அன்புநேசம்.   


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...