வெள்ளி, 23 அக்டோபர், 2020

யூகங்கள் பலநேரம் சரியானதை கொல்லும்

மைக்கேல் ஸ்டீவன்ஸ்  ஒரு புகழ்பெற்ற ஓவியர்.  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவர் தன்னுடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தி ஏலத்திற்கு விடுவார்.அவருடைய புதினமான ஓவியங்கள் அனைத்தும் பல ஆயிரங்கள் டாலருக்கு விலைபோகும். அந்த ஆறுமாதங்களாக குடும்ப பிரச்னை காரணமாக அவரால் எந்த ஓவியத்தையும் முறையாக வரைய முடியவில்லை. ஆனால் ஒருவாரத்திற்குள் ஓவியங்களைக் காட்சிப்படுத்த வில்லையென்றால் அவரது வாடிக்கையாளர்கள் வேறு ஒரு ஓவியரைக் கண்டுபிடித்து விடுவர். தன்னுடைய சந்தை மதிப்பும் இறங்கி விடும். என்ன செய்வதென்று தெரியாமல், கடற்கரைக்குச் சென்றார். அங்கும் இங்கும் உலாவினார். மனதில் கவலைப் படர்ந்தது. இன்னும் தொலைவில் சென்றபோது, அங்கு வெளியூரிலிருந்து வந்த ஒருவன் தன் ஓவியத்தை ஒவ்வொன்றும் இரண்டு டாலர் எனக் கூவிக் கொண்டிருந்தான். அனைத்தும் மிக நேர்த்தியான ஓவியங்கள். கிட்டத்தட்ட, நூறு ஓவியங்கள். ஆனால், அதை வாங்குவதற்கு ஒருவர் கூட இல்லை. மைக்கேல் ஸ்டீவன்ஸ் அத்தனை ஓவியங்களையும்  ஐநூறு டாலர் கொடுத்து வாங்கினார். வீட்டிற்கு வந்து அந்த ஓவியங்கள் மீது தன் கையொப்பத்தை வரைந்து, தன் வழக்கமான தச்சரைக் கூப்பிட்டு அந்த ஓவியங்களுக்கு சட்டம் தயாரித்துக் கொடுக்கும்படி கூறினார்.  ஒருவாரத்திற்குள்  அனைத்தும் மிக நேர்த்தியாக முடிந்து விட்டன. ஓவியத்தை காட்சிப்படும் நாளும் வந்தது.  அவருடைய உதவியாளர் அத்தனை ஓவியங்களையும் அந்த கண்காட்சி கேலரியில் ஒவ்வொன்றாகப் பொறுத்தினான். ஓவியங்களைக்  காண மிகப் பெரிய கூட்டம் கூடியது. அதில் ஸ்டீவன்சின் நெருங்கிய நண்பரான ஜான் எல்போர்டும் ஒருவர். அவர் ஓவியங்களை நுட்பமாக ரசிப்பதில் வல்லவர். பல ஓவியங்களைப் பார்த்து வந்த எல்போர்ட், ஒரு ஓவியத்தின் முன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த பலரும் அந்த ஓவியத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.  பார்த்த ஒவ்வொருவரும் அதற்கு ஒவ்வொரு விளக்கத்தையும் கொடுத்தனர். கண்காட்சி முடிவுக்கு வந்து, ஏலம் தொடங்கியது.  வழக்கத்தை விட எல்லா ஓவியங்களும் அதிகமான விலைக்கு ஏலம் போயின. முடிவில் அந்த ஓவியம் அதாவது எல்போர்ட் வெகு நேரமாக வெறித்துப் பார்த்த ஓவியம் ஏலத்துக்கு வந்தது. ஓவியத்தின் மதிப்பு ஏலத்தில் ஏறிக்கொண்டே வந்து முடிவில் பன்னிரண்டாயிரம் டாலர் விலை போனது. எல்போர்ட் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய், நேராக ஸ்டீவன்ஸ் அருகில் சென்று, "நீ வரைந்ததிலே மிகக் கேவலமான ஓவியம் அது. அதில் என்ன கருத்து என்று நான் ஆராய்வதற்கே பல நேரம் எனக்கு ஆயிற்று. ஆனால், இதுவரை எனக்கு அதன் கருத்து புரியவில்லை.  அது எப்படி பன்னிரெண்டாயிரம் டாலர் விலை போனது?" என்று கேட்டார்.  ஸ்டீவன்ஸ் சிரித்துக் கொண்டே, "அது நான் வரைந்த ஓவியம் அல்ல, நான் ஓவியம் வரைய ஐஸேலில் வெற்று கேன்வாஸ்   ஷீட்டை மாட்டி, ஓவியத்தை வரையத் தொடங்கும் பொழுது, எனக்கும் என் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அன்று அவளுடைய பிறந்த நாள் என்பதையே மறந்து போயிருந்தேன். அதனால் கோபம் கொண்டு சூடான தேநீரை அரைகுறையாக நான் வரைந்திருந்த அந்த கேன்வாஸ் ஷீட்டின் மீது ஊற்றி தன் கோபத்தைக் காட்டினாள். அந்த ஷீட்டை நானும் ஓரமாக அறையில் போட்டு வைத்திருந்தேன்.  சட்டங்களை மாட்ட வந்த தச்சனும் அதற்கும் சேர்த்து சட்டத்தை மாட்டி விட்டான். இதை அறியாத என் உதவியாளன், அதனையும் கேலரியில் மாட்டிவிட்டான். நீ, அந்த ஷீட்டை அதிகமான நேரம் உற்றுப் பார்த்ததால், உன்னைத் தொடர்ந்து வந்த மக்களும் அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்று நினைத்து அவர்களும் அந்த ஷீட்டில் அதிக நேரம் செலவழித்தனர். உண்மையில் இந்த ஓவியங்களில் ஒன்று கூட நான் வரைந்ததில்லை.  ஐநூறு டாலர் கொடுத்து நான் வாங்கிய இந்த ஓவியங்கள் இன்று ஐந்து லட்சம் டாலருக்கு விலை போனது" என்று சொன்னார். 

இப்படித்தான், பல பொருட்கள், பல கருத்துக்கள், பொதுக் கருத்து என்ற பெயரிலோ, விளம்பரத்தின் மூலமாகவோ சந்தைப்படுத்தப்படுகின்றன. பலவற்றை நாம் யூகங்களின் (Perception) அடிப்படையிலேயே தேர்வு செய்கிறோம் அல்லது பலரை யூகங்களின் அடிப்படையிலே கணிக்கிறோம். இதற்கு, சூழ்நிலை, பிரபலம், கவர்ச்சி, சந்தைப்படுத்துதல், விளம்பரம், பொதுச்சிந்தனை, குருட்டு நம்பிக்கை, வெகுஜன அபிப்பிராயம், வெகுஜன ஊடகம், பரிந்துரை எனப் பல ஊக்கிகள் (Stimuli) காரணமாகின்றன. பெரும்பாலான மக்கள் சுயமாய் சிந்தித்து செயல்படுவதில்லை.  செம்மறி ஆட்டுக்கு கூட்டம்போல, ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்து செல்கின்றனர். 

அன்று சாகரடீசின் கொள்கைகளை, இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத இந்த உலகம் இன்று அவர்கள் போதனைகளை தத்துவங்களாக (மட்டுமே) ஏற்றுக்கொண்டுள்ளது.  இன்று இயேசு கிறிஸ்து உலகில் இருந்தால் யாரும் அண்டாத தனி ஆளாக எங்கோ உலகின் ஒரு மூலையில் தன் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அவரைக் கடவுளாக நினைத்துக் கொண்டாடும் மக்கள் கிறிஸ்துவின் போதனைகளை உறங்கவைத்துவிட்டு, அவர் பெயரில் தங்களை சந்தைப்படுத்தி செல்வம் சேர்க்கும் மனிதர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  சிறந்தவைகள் யாவும் தீண்டப்படாது. போலிகள் யாவும் மேடை ஏறும்.  இது சந்தைப்படுத்தும் உலகம். யூகங்கள்  பல நேரங்களில்  தவறான முடிவுகளை எடுக்கத்  தூண்டும்.  சரியானவை தோற்றுப் போகும்.

"அப்பொழுது அவர், “நீ இந்த மக்களை அணுகி, ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்’ என்று சொல். அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்;படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்” என்றார்." 
(எசாயா 6:9-10 )

"பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை." (எசாயா 42:20 )

"ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்"என்றார்.  (1 சாமுவேல் 16:7)

"இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்."  (உரோமையர் 12:2)


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...