ஒரு அரசன் தன் மனைவியின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அவளை தன் உயிராகவே மதித்தான். அவர்களுக்கு அழகான வயது வந்த இரு பெண் குழந்தைகள். ஆயினும், மனைவி மீதே அதிகம் அன்பு செலுத்தினான், ஒருநாள், அரசியார் ஒரு காய்ச்சல் வந்து இறந்து போனார். மனைவியை இழந்த துக்கத்தில் அரசன் மிகவும் வாடிப் போனான். பல மாதங்களாக வேதனையுற்று தவித்தான். பின்பு, தன்னுடைய ராஜ்யத்தில் பணியாற்றும் இரு கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தான். அவர்களிடம் அரசியாரின் ஓவியத்தைக் கொடுத்து, "அரசியாரின் நினைவு நாள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வந்து விடும். அதற்குள் மிக அழகான அரசியாரின் சிற்பத்தை ஒன்று என் படுக்கை அறையிலும் இன்னொன்று அரண்மனையின் விதானத்திலும் வைக்கும்படி இருவரும் ஆளுக்கொரு சிற்பத்தை செய்து தாருங்கள்" என்றான். ஒரு சிற்பியின் பெயர் கேலோ. மற்றொருவரின் பெயர் டாரஸ்.
டாரஸ், தான் அந்த சிற்பத்தை சீக்கிரமாக முடித்து கொடுத்து அரசனிடம் நல்ல பெயரும் நல்ல வெகுமானமும் பெற வேண்டும் என்று நினைத்து அவசர அவசரமாக வேலையை தொடங்கினான். அந்த அவசரத்தில் முதலில் சரியான கல்லை தேர்ந்தெடுக்கவில்லை. உளியால் கல்லை செதுக்கும் போது, கல் சிதற தொடங்கியது. பின்பு அடுத்த கல்லை தேர்ந்தெடுத்தான். அதுவும் சரி வரவில்லை. கடைசியாக, பல முயற்சிக்குப்பின், ஒரு நல்ல கல்லை தேர்ந்தெடுத்தான். அதற்குள் ஒரு மாதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு மாதம் தான். என்ன செய்வதென்று தெரியாமல் பதைபதைத்தான் . கைகள் நடுங்க ஆரம்பித்தன. செதுக்கும் போதே உளியும் கையை விட்டு நழுவிச் சென்றது.
கேலோ எல்லாவற்றிலும் நிதானமாக அதேநேரம் கவனமாக வேலை செய்பவர். முதலிலேயே கல்லை தேர்ந்தெடுக்க சில நாள் செலவழித்தார். பின்பு வேண்டிய உளிகளை தயார் செய்து கொண்டார். அதற்கு முன்பாக சிற்பம் செய்வதற்கான ஒவ்வொரு நிலைகளின் வரைபடத்தை வரைந்து கொண்டார். பின்பு கவனத்துடன் நிதானமாக செதுக்கும் பணியைத் தொடங்கினார்.
அரசியாரின் நினைவு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அரசரின் பணியாளர்கள் வந்து இருவரிடமிருந்தும் அந்த சிற்பங்களை வாங்கிச் சென்றனர்.
அரசியாரின் நினைவு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அரசரின் பணியாளர்கள் வந்து இருவரிடமிருந்தும் அந்த சிற்பங்களை வாங்கிச் சென்றனர்.
அரசர் டாரஸையும் கேலோவையும் அரண்மனைக்கு வரவழைத்தார். கேலோவை நோக்கி, "உமது சிற்பம் வெகு அற்புதம். என் அரசியாரை அப்படியே பார்ப்பது போல் மிகவும் நேர்த்தியாக செதுக்கி உள்ளீர். இதனை என் படுக்கை அறையினுள் வைத்து அழகு பார்ப்பேன். இதோ உமது சன்மானம் இரண்டாயிரம் பொற்காசுகள். இன்றுமுதல் அரண்மனையின் எல்லா கட்டட கலைக்கும் நிர்வாகியாக உம்மை நியமிக்கிறேன்" என்றார்.
பின்பு, டாருசை நோக்கி, "உமது சிற்பம் போன்று எமது ராஜ்யத்தில் இவ்வளவு அசிங்கமாக எந்த பெண்ணும் கூட இல்லையே. இதனை நகருக்கு வெளியே ஒரு அவமான சின்னமாக வைத்து விடுவோம். எதிரிகள் இதைப்பார்த்து அஞ்சட்டும்" என்று கேலி செய்தார். டாரஸ் அவமானத்தில் தலை குனிந்து நின்றார்.
பலர் பல நேரங்களில் எதனையும் முறையாக சரியான நேரத்தில் செய்யாமல் அவசர கோலத்தில் கடைசி நேரங்களில் எல்லாவற்றையும் செய்ய முற்படுவதால், பல நேரங்களில் அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிகின்றன. ஆராய்ந்து தெளிந்து செய்கின்ற காரியங்கள் அனைத்தும் விருத்தி ஆகும். பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி.
"எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்." (நீதிமொழிகள் 19:2)
"திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்." (நீதிமொழிகள் 21:5)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக