ஒருநாள் ஒரு குரு தன் சீடர்களை அழைத்து, "நான் மிகவும் வயதாகி விட்டேன். இன்னும் சில நாட்களில் நான் மரித்து போவேன். எனவே என்னால் இனி இந்த மடத்தை நிர்வகிக்க இயலாது. உங்களில் ஒருவரை நான் இந்த மடத்திற்கு குருவாகவும் தலைவனாகவும் ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கு தகுதியானவர்களை ஒரு போட்டியின் மூலம் நான் தேர்வு செய்ய போகிறேன்" என்று கூறினார். சொல்லி முடித்ததும் சீடர்களுக்குள் சலசலப்பு. "நான் தான் அதற்கு தகுதியானவன்" "இல்லை, நான் தான்" என்று. குரு அவர்களிடம், "இரண்டு நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். நீங்கள் காண்பவற்றில் எது மிகச் சிறந்ததோ அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தால், அதில் எது சிறந்தது என்பதை பார்த்து, கொண்டுவந்தவனை இந்த மடத்தின் தலைவன் ஆக்குவேன்" என்றார். உடனே, சீடர்கள் அனைவரும் பல திசைகளுக்கும் பிரிந்து சென்று தேட ஆரம்பித்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து, எல்லா சீடர்களும் ஒவ்வொரு பொருட்களோடு குருவிடம் வந்தனர். ஒருவன் மிக விலை உயர்ந்த வைரக்கல்லை கொண்டு வந்தான். இன்னொருவன் ஒரு தங்க மாலையை கொண்டு வந்தான். இன்னொருவன் விலை உயர்ந்த பட்டாடையை கொண்டு வந்தான், இன்னொருவன் மலைத்தேனை கொண்டு வந்தான். இப்படியே, பழங்கள், புத்தகங்கள், வாசனை திரவியங்கள், மூலிகை மருந்து என பலவும் அவர் முன் வைத்தனர். ஒரே ஒரு சீடன் மட்டும் வெறுங்கையோடு நின்று கொண்டிருந்தான். மற்ற சீடர்கள் அவனை பார்த்து "பாவம் இவனுக்கு இரண்டு நாட்களாக ஒன்றும் கிடைக்கவில்லை போலும்" என்று.கேலி செய்தனர். குரு அந்த சீடனை அருகில் அழைத்து, அவனுக்கு ஆசி வழங்கி, "இனிமேல் இந்த மடத்துக்கு இவன் தான் தலைவன், குருவும் கூட". என்று சொன்னார். மற்ற சீடருக்கு அதிர்ச்சி. "நாம் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வந்துள்ளோம். குருவோ வெறுங்கையோடு நின்றவனை நமக்கு தலைவன் ஆக்கி விட்டாரே. குருவுக்கு புத்தி கேட்டு போனதா?" என்று முணுமுணுத்தனர்.
குரு அமைதியாக அவர்களிடம், "நீங்கள் இந்த பதவிக்காக, என்னையும் இந்த மடத்தையும் விட்டு விட்டு இந்த இரண்டு நாட்களாக சென்று விட்டீர்கள். இந்த சீடன் தான் எனக்கும், மடத்துக்கும் தேவையான எல்லா பணிகளையும் மட்டுமன்று நீங்கள் அனைவரும் தினசரி இங்கு செய்ய வேண்டிய வேலைகளையும் எடுத்து செய்தான். இவனே இந்த மடத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவன். இன்னும் சிறிது நாள்களில் சாகப்போற எனக்கு, இவன் செய்ததை விட, நீங்கள் கொண்டு வந்த எதனால் பயனுண்டு" என்றார்.
தலைமை பண்பு என்பது பலரை தன் அதிகாரத்தினால் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது அன்று. ஒரு உண்மையான தலைமை பண்பு காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அனைவருக்கும் பயன்படும் ஒரு நிர்வாகத்தையோ அல்லது செயலையோ அல்லது கண்டுபிடிப்பையோ உருவாக்குவது.
இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். (லூக்கா 22:25-26)
ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார். (நீதிமொழிகள் 16:7)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக