புதன், 14 அக்டோபர், 2020

யாவும் நல்லன, மனிதனை தவிர (இன்றைய சிந்தனைக்கு)

 ஒருநாள் இயற்கை சீற்றங்களுக்குள் ஒரு கடும் போட்டி.  அதில்  நிலநடுக்கம், புயல், எரிமலை, வெள்ளம், காட்டுத்தீ  மற்றும் கடல் என ஒவ்வொன்றும் அழிவு சக்தியில் நான் தான் வலிமையானவன் என்று சொல்லிக்கொண்டன. எதுவும் முடிவு பெறாத நிலையில் தங்களுக்குள் ஒரு போட்டி வைத்தனர்.  இந்த உலகில் தங்கள் பலத்தால் எது  அதிகம் பொருள் சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகின்றதோ, அதுவே மிகப்பெரிய அழிவு சக்தி என்று முடிவு எடுத்தன. முதல் பருவத்தில், காட்டுத்தீ வந்தது.  காட்டை எரித்து சில வீடுகளையும் எரித்தது.  நூற்றுக்கு மேற்பட்ட உயிர்கள் இறந்தன. இரண்டாம் பருவத்தில் எரிமலை வெடித்தது.  சில கிராமங்கள் சிதைந்தன. அதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்தனர். அடுத்து வெள்ளம் வந்து பல பொருட்களை நாசம் செய்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட மனிதர்களும் உயிர்களும் இறந்தனர். நிலநடுக்கம் வந்தது. சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடலும் பொங்கியது.  பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.   இந்தப் போட்டியின் முடிவு வருவதற்குள்,  பல லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிர் இழந்தனர்.  பலர் படுக்கையில். எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் வீழ்ந்து பல கோடி மக்கள் வருவாய் இழந்தனர்.  போட்டியாளர்களுக்குள் இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.  நம்மை விட இவ்வளவு பெரிய அழிவை உண்டாக்கிய மிகப்பெரிய அழிவு சக்தி யார் என்று தேடின.  முடிவில், அவை கண்ட உண்மை இதுதான்.  ஆம், இந்த உலகில் மனிதனை விட மிகப்பெரிய அழிவு சக்தி இல்லை என்பது.
கடவுள் தான் படைத்த யாவற்றையும்  நல்லது எனக் கண்டார். 
(தொடக்கநூல் 1 : 1 - 25 )  மனிதனை படைக்கும் வரை.....

ஆம், இந்த உலகில் ஆராய்ச்சி என்ற பெயரில்,  தொழில் நுட்பம் என்ற பெயரில்,  வளர்ச்சி என்ற பெயரில், பாதுகாப்பு என்ற பெயரில், விஞ்ஞானம் என்ற பெயரில், பொருளாதாரம் என்ற பெயரில், மதவாதம் என்ற பெயரில், இனவாதம் என்ற பெயரில், தீவிரவாதம் என்ற பெயரில் மிகப்பெரிய அழிவு சக்தியாக  இருக்கின்றான்.  இன்று உலகில் இருக்கும் அணு ஆயுதங்களும், வேதியியல் ஆயுதங்களும், உயிரியல் ஆயுதங்களும் மற்றும் பிற சூழல் மாசுபாடுகளும் இந்த உலகத்தை நூற்றுக்கும் மேல் தடவைகள் அழிக்கும் திறன் படைத்தவை. அவற்றை உண்டாக்கிய அந்த மிகப்பெரிய அழிவு சக்தி மனிதன் மனிதன் மட்டுமே. இதில், நான் மனிதனாய் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். 

கடவுள் படைத்தவற்றில் யாவும் 
நல்லதென காண்கிறேன், மனிதனை தவிர.

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...