ஞாயிறு, 1 நவம்பர், 2020

உங்கள் உடலையும் உள்ளதையும் பரிசுத்தப்படுத்துங்கள்


 பிலிப் தன்னுடைய மானசீக தலைவரை தனது  வீட்டிற்கு வருமாறு வெகு நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்தான்.  அவனுடைய வற்புறுத்தலின் பேரில், அந்த தலைவரும் ஒருநாள் வருவதாக வாக்கு கொடுத்தார். தலைவரின் வருகைக்காக தடபுடலாக ஏற்பாடு செய்தான் பிலிப்.  வீட்டை அலங்கரித்தான். வரவேற்பு தோரணங்கள் கட்டினான்,  மேஜைகளையும் நாற்காலிகளையும் புதிதாக வாங்கி அலங்கரித்தான். தலைவரும் சொன்ன நாளில் அவன் வீட்டிற்கு வந்தார்.  சிறிது நேரம் பேசிவிட்டு, உணவருந்த டைனிங் அறைக்கு சென்றனர். டைனிங் அறையில் முழுவதும் கவிச்ச வாடை இருந்தது. பலவகை உணவுகள் டைனிங் மேஜைக்கு வந்தன.  சில உணவுகளில் உப்புசுவை  அதிகமாக .இருந்தது. சிலவற்றில்  காரம் அதிகமாக இருந்தது.  சிலவற்றில் எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தது. சில உணவுகள் முறையாக வேகவில்லை. அவற்றை சாப்பிட முடியாமல் தலைவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். 

இப்படி, சில வீடுகளில் உணவுகள் சுவையாக இருந்தால், வீடு சுத்தமாக இருக்காது. சில வீடுகளில் வீடு சுத்தமாக இருக்கும், உணவும் நன்றாக இருக்கும்  ஆனால், டைனிங் டேபிள் சுத்தமாக இருக்காது. பலநாட்கள் தங்க வரும் விருந்தாளிகள் இதனால் ஒருசில மணிகளில் கிளம்பி விடுவர்.

இதுபோல் தான்,  நமது உடல் இறைவனின் பிரசன்னமும், அருளும் ஞானமும் தங்கும் வீடு. நமது உள்ளம் ஒரு டைனிங் அறை.  நமது எண்ணங்கள் இறைவனுக்காக கொடுக்கப்படும் உணவு வகைகள்.  இதில் ஒன்றில் குறை தென்பட்டாலும் விருந்தினராக வரும் இறை பிரசன்னமும், அருளும் ஞானமும்  நம்மிடம் இருந்து விரைவில் விலகி செல்லும். 
உடலையும் உள்ளத்தையும்  பரிசுத்தமாக பேணுங்கள். அவற்றில் கறைகளோ, அருவெறுப்புகளோ இல்லாதவாறு உடனுக்குடன் கழுவி தூய்மைப்படுத்துங்கள். எண்ணங்களை இறைவனுக்கு உகந்த உணவுப்படையலாய் ஆக்குங்கள்.  அதிலுள்ள கோபம், வஞ்சம், பொறாமை, பேராசை, தீய சொல், இச்சையான எண்ணங்கள், வெறுப்பு, ஆணவம், செருக்கு, வீண் பெருமை, குறை காணுதல், குற்றம் சொல்லுதல், பழி வாங்கும் எண்ணம் என காரமான அதிகம் உள்ள உணவுகளை நீக்கி விடுங்கள். அன்பு, பொறுமை, பரிவு, சாந்தம், மன்னிப்பு, அமைதி, அடக்கம், தாழ்ச்சி, நன்னடத்தை என்னும் சுவை மிகு உணவுகளை பெருக்குங்கள்.  இவற்றை சுவைக்கும் இறைவன் தம்முடைய பிரசன்னத்தையும், அருளையும் ஞானத்தையும் உங்களோடு என்றும் நிலைக்கும்படி செய்வார்.  

செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்; பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்; நானே ஆண்டவர்! (லேவியர் 19: 28)

உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள். (1 கொரிந்தியர் 6:19-20)

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...