வியாழன், 8 அக்டோபர், 2020

உடலே இசைக் கருவியாய்....... (தமிழ் கவிதை)

 சர்வ  வல்ல  தேவனுக்கு 
    சங்கீத  மொழியால்  பாட்டிசைப்பேன்
ஆர்வமுடன்  அவரின் புகழை 
     ஆலாபனை  யுடனே  இசைத்திடுவேன்  

இசையால்  உம்புகழ்  இசைப்பேன் 
        இறைவா!  என்னுடலே  கருவியாய்
அசையும்   கைகள்    தட்டியே 
      அழகிய  மெட்டு   இசைப்பேன்

சிரமே   அசைத்து  உந்தன்
      சீர்புகழ்  எடுத்து   உரைப்பேன் 
சுரமே   எந்தன்   மொழியாக 
      சுவையோடு   வாய்  மொழிவேன் 

விழிகளின் நர்த்தனம்   தான்
      வீணையின் நாதம் போலாகும் 
தாழிடும்  இதழ்களின்   ஓசையும் 
      தாளமாய்   உம்மைப்   போற்றும் 

மூச்சிடும்   நாசியின்   ஒலியும்
      மூங்கிலின்  குழலோசை  ஒலிக்கும்
பேச்சுறும்  நாவின்    நடனம் 
      பேரருளாளன்  பெருமை  இயற்றும் 

குருதியின்   ஓட்டம்  உயிரின் 
     குரலாய்   கானம்  பாடிடும்
சுருதியுடன்   நரம்பும்   நிந்தன் 
     சூட்டும்   புகழ்   மீட்டிடுமே 

தாங்கிடும்  எலும்புகள்   யாவும் 
      தம்புரு   என்றே   ஆகிடுமே 
ஓங்கிடும்   இதயத்   துடிப்பும் 
     ஓசையிடும்   தாளம்  ஆகிடுமே 

மூளையின்  கட்டளை யாவும்
     மேளதாள  முழக்கம்  ஆகுமே 
சளைத்திடா  எந்தன் மூச்சும் 
     சரணம்   தொடுத்து   இசைத்திடுமே 

மறைக்கும்  தோலும்  தசையும் 
      மத்தளம் கொட்டி  மகிழ்ந்திடுமே
அரைக்கும் பற்களும் பல்லவியாய்
      அரும்புகழ்  நாளும்   பாடிடுமே
 
நடக்கும்   கால்களின் அசைவும் 
      நர்த்தனம்  செய்து  நயந்திடுமே  
அடங்கும்  உள்ளவயம்   யாவும் 
      யாழாய்   மீட்டி  ஒலித்திடுமே

சுதியும்   லயமும்  போன்றே 
      சுரமாய்  உடலும்  உயிருமிருக்க
மதியும்   பாக்கள்  படைத்திடுமே 
      மகிபன்  திருநாமம்  போற்றியே 


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...