வெள்ளி, 9 அக்டோபர், 2020

காலத்திற் செய்வார் கடவுள் (தமிழ் கவிதை)

 தட்டினேன்  கதவுகள்   ஆயிரம் 
     திறக்க     இல்லை   ஒருவரும் 
ஆட்டினேன்  தலையை  பிறர்க்கு 
     ஆனது    இல்லை   ஒன்றும் 

நாடினேன்   மனிதர்   பலரை 
      நியாயமும்   கிடைக்க  வில்லை 
ஓடினேன்   பலருக்காய்   வீணில் 
      ஓய்ந்தது   என்னுடல்   மட்டுமே 

சுயபுத்தி   திறனென்றே   என்னில்
      சூழவும்   செருக்கு  கொண்டேன் 
இயலாமை   தனையும்   குறையென்று 
      இணங்க    மனம்    விரும்பவில்லை 

பட்டபின்,    யாவும்    விட்டபின் 
     புரிந்தேன்   இறைவனே  எல்லாமென்று!
ஆட்டமிட்ட    வாழ்க்கை   யாதும் 
     அடங்கிடுமே   ஒருநாள்   என்றே 

வாழ்க்கைக்    கொடுத்ததும்  இறைவன் 
       வாழ     வைப்பதும்   இறைவனே 
ஊழ்வினை    அகற்றி    நம்மை 
       உயிர்பெறச்   செய்வதும்   இறைவனே 

எல்லாம்   என்னால்    என்று 
     ஏற்றிய    நாட்களும்  உண்டு 
இல்லாமை  நானென்று உணர்ந்து 
     இறைவனை அறிந்தேன்  எல்லாமென்று 

காலம்    எனக்குக்   கற்பித்தது 
    கடந்துப்    போகும்   யாவையுமே
கோலம்    மனிதர்     போடும் 
    கூத்தாடும்   வெளி   வேடம் 

ஜனனம்   முதல்   மரணம்வரை 
      ஜீவனும்  இறைவன்  சொந்தம் 
தானமும்    வாழ்வு   முழுதும் 
      தந்தவர்   இறைவன்   தாமே 

நானென்றே  பிறரென்றே  வாழ்வின் 
     நாள்முழுதும்  தொலைத்து  நின்றேன் 
தேனென்ற    வார்த்தை   பலவும் 
     தேடிநான்    அலைந்து  நின்றேன் 

காலம்    எனக்குப்    போதித்தது 
     கடவுள்   மட்டுமே   எல்லாமென்று 
கலம்     இக்காலம்   வேண்டிய  
     கரையை   அடைதலை  உணர்ந்தது 

எத்தனை   நாட்களும்   ஆண்டுமாய்  
     எட்டவில்லை   சிந்தனை  யாதும் 
இத்தனை    நன்மைகள்   எனக்கு 
     இறைவன்  தாமே   ஈன்றாரென்று 

கழித்தேன்   நாட்கள்    பலவும்  
    களித்தேன்   வீண்   வாதத்தில் 
அழித்தேன்   வாய்ப்பு  அனைத்தும் 
    ஆண்டவர்   புகழைப்   பாடிட 

கடந்தபின்  உணர்ந்தேன்   எனினும் 
     கடவுளின்   சித்தம்    இதுவும்.
தொடர்ந்தே   அந்நிலை  கொள்ளாது 
     தொலைத்து  விட்டேன்  பழமைதனை 

தெளிந்தேன்   இப்பொழுது   நானும்
     தேடியோடி   இறைவனை  அடைய 
ஒளிந்தேன்     பாவச்சூழ்  நிலைநின்று 
     ஒளிமிகு    இறைமுன்  நிலைநின்று

எதிரிகள்    என்முன்   நிற்பதில்லை 
     ஏனெனில்    இறைவன்  என்முன்னே 
பதறியோடும்   பதறுகள்   யாவும் 
     பரமனின்    தீர்ப்பின்  முன்னே    

 
  

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...