வெள்ளி, 20 நவம்பர், 2020

தூயோனுக்குத் துதிகள் (தமிழ் கவிதை) பாகம் - 2

பணிவதிலும்   சிறந்த   பலியொன்று
   பாங்காய்   நீரும்  விரும்புவீரோ ?
பிணிதீர்க்கும்   வரத்தை   எந்தன்
   பீனிசம்    நீக்க    தருவீரோ !
 
புரிதலில்   நானும்   புடம்பெற
   பூரணமாக்கும்  பூச்சியம்  என்னை !
பெரிதென  உம்மால்  செய்து
   பேறுபெற  வகைச்  செய்வீர் !
 
பைங்கண்    மீதே   பசியாற
   போசனம்  காட்டும்  ஆயனே !
பொங்கும்  சினத்தையும்  மாந்தர்
   பௌவம்  என்றே   அடக்கினீர் !
 
நற்றவை    யாவும்   படைத்தவரே !
   நாளும்   பல்லுயிர்   காப்பவரே !
நிற்குணம்   தன்னை  உடையவரே !
   நீதியின்   செங்கோல்  பிடித்தவரே !
 
நுகம்தனை   என்மேல்  விலக்கி
   நூலோர்   தம்திறம்   அமைத்தீர் !
நெகிழ்ச்சி     எனும்   ஆடையுடுத்தி
   நேர்த்தியாய்  எனை அழகூட்டினீர்.
 
நொடிந்து   போகாது   என்மனதை
   நோவுநீக்கி  புத்துயிர்  அளித்தீர் !
நைபடாது    எந்தன்   வாழ்வை
   நௌவிபோல்   துள்ளச்  செய்தீர் !
 
மகத்துவம்  ஆடையாய்  அணிவீர் !
  மாண்புறு  ஆற்றல்   கொண்டீர் !
மிகவல்லோர்  உமக்கு   கவியால்
  மீளவும்   போற்றிப்   பாடுவேன் . 
 
முற்றறிவீர்   முற்றிமை   அருள்வீர்  !
  மூத்தோர்   மிக்கறிவு    தருவீர்   !
மேற்றிசை வீற்றிருந்து  ஆசிபொழிவீர் !
  மெய்ஞ்ஞானம்   அகத்தே  இடுவீர் !
 
மையம்   கொண்டீர்  உமதன்பால்
   மொத்தமும்  மூழ்கித்  திளைத்தேன் !
மாயமோகம்  எனைச்    சூழாது
   மௌனியாய்   புனிதம்  ஆக்கும் !

வல்லமை  மிக்க    வேந்தரே !
    வார்த்தை   வாளை   ஏந்துவரே !
வில்லினில்   பாயும்  அம்பைப்போல் 
    வீரிட்டுப்   போகும்   உம்வாக்கு !

வெறுமையை  போக்கிடும் நிறையே !
     வேண்டுவோர் தேடிடும்  மறையே !
உறுத்தருணம்  உதவிடும்   இறையே !
      ஊழிக்காலம் உம்புகழ்  போற்றி !



 

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...