ஞாயிறு, 1 நவம்பர், 2020

இறைவன் எனது ஆசான் (தமிழ் கவிதை )


 இறைவன்   எனது   ஆசான்;
   இனியநல் போதனை அருள்வார். 
குறைவிலா  அறிவை  எனக்கூட்டி, 
   கூர்மதி   ஞானம்   தருகின்றார். 

தவறி   நடக்கும்  பாதையில்,
   தட்டுத்  தடுமாறும் வேளையில்,
தவறிடாமல்   என்னை  நோக்கி,
   தகுந்த   பாதையில்  நடத்திடுவார்.

யாரும்  அறியா    ஞானத்தை, 
    யானும்   நிறைவாய்  பெற்றிடவே,
பாரும்  வியக்கும்  படைப்பாற்றல்,
    பரமன்   எனக்குள்  கொடுத்திட்டார்.

நேரியவை   நாளும்    கற்பித்து,
    நெறிகளை   யாவும்  போதித்து, 
அரியன    பலவும்   எனக்கீந்து, 
    அறிவை   என்னுள்  வளர்த்திட்டார்.

புதியன   பலவும்  பழக்கினார்; 
   புதிர்களை  யாவும்  விளக்கினார்;   
துதியனைத்தும்   எந்தன்  நெஞ்சம், 
   துள்ளலாய்   இசைக்கச்   செய்தார்.

கல்வியை  எனக்கு  கனிந்தூட்டி, 
    கற்கும்   திறனை  பெருக்கினார்.
நல்வினை    நானும்   செய்திடவே,
    நலம்தரும்   ஞானம்   நல்கினார்.

தேர்ந்தோன்    அறிவைக்  கருவாக்கி,
    தெளிவை    என்னுள்   உருவாக்கி,
கூர்ந்த    நுண்மதி  பெருக்கி, 
    குன்றா  செல்வம்  குவித்திட்டார்.

கட்டளை  யாவும்   கற்பித்து,
    கருணை  அன்பு   போதித்து,
இட்டதை   நானும்   மீறிடவே,
    இனிய   சொல்லால்  கண்டித்தார்.

பட்டங்கள்   எனக்குச்  சூட்டினார்; 
   பகுத்தறிவு  சேர்த்து   ஊட்டினார்;
சட்டங்கள்    சொல்லும்  பாதையில்,
   சரியான    வழியைக்   காட்டினார்.

உழைப்பின்   மாண்பை   உயர்த்தியே,
     ஊக்கம்    கொடுத்து   உதவினார்.
அழைக்கும்   அவர்தம்    குரலுக்கு,
     அடிமையாய்   நானும்  பணிந்திடுவேன்.       

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...