சனி, 7 நவம்பர், 2020

எவ்வளவு அழகு வாய்ந்த உலகம் இது!

எவ்வளவு அழகு வாய்ந்த உலகம் இது!
எத்தனை அதிசயங்கள் இங்கு இருக்கின்றன!
அவ்வளவு அற்புதங்கள் நிறைந்து கிடக்கின்றன!
அத்தனையும் சொல்ல ஆண்டுகள் போதாது!
அந்தரத்தில் பூமி சுழல்வதும், அதன் 
அச்சு     நிலைபெயராது  இருப்பதும்,
மந்திரத்தால் அன்று  இறைவா உந்தன் 
மகத்துவதால் மட்டுமே ஆனது  உண்டு.
விரிந்து பரந்த பெருங்கடல்களும், அதில்
விதானமாய்  தோன்றும் நிலப்பரப்பும்,
பிரிந்து கிடக்கும்  தீவுக்கூட்டமும் 
பிணைந்திருக்கும் கண்டங்களும் உந்தன் கைவினை அன்றோ!
எழில் மிஞ்சும்  இயற்கையும், -  அதில் 
எண்ணற்ற வர்ண  ஜாலங்களும், 
செழிப்பான பசுமை வனங்களும், 
யாவும் செய்தவர் இறைவன் நீரன்றோ!
பச்சை  பசுமையும்  வளங்களும்,
பரந்த புல்வெளியும்  சோலையும் 
உச்சைத்  தொடும்   உயர்மலையும் 
உந்தன் செயலின் மேன்மையை பறைசாற்றும் 
அழகாய் வீழ்ந்திடும்  அருவிகள், 
ஆர்ப்பரித்தோடும்  ஆறுகள், 
ஆழமாய் தோன்றும் பள்ளத்தாக்குகள்,
ஆண்டவர்  செயலின்  அதிசயமே. 
வெள்ளி பாதை  போல் ஓடும் ஓடைகள்,
மலர் மொட்டுகள் மலர்ந்த  குளங்கள், ஏரிகள்
முளைக்கும் செடிபோன்ற நீரூற்றுகள் 
ஆஹா!  உம் படைப்புகள் எத்தனை அற்புதமானவை!
ஆர்ப்பரித்து வரும் கடல் அலையின் ஓசையும்,
மேகங்களின் மோதலில் உருவாகும் இடியோசையும், 
மலையின் மேலிருந்து பாயும் அருவியின் ஓசையும்,
மத்தளங்களின் பெரிய ஓசையை  விஞ்சிடும்.
வண்ண வண்ண பூக்கள் அவற்றின் 
வடிவமும் வாசனையும் பலவகைகள்.
குட்டை செடிமுதல் ஓங்கிவளரும் மரங்கள் வரை 
எத்தனை எத்தனை வகைகள் படைத்திட்டீர்!
வண்ண வண்ண பழவகைகள், காய்கறிகள்!
வடிவமும் வாசனையும் ருசியும் தனித்தனி.
எண்ணற்ற உணவு தானியங்கள், கீரைகள் 
ஒவ்வொன்றிலும் சத்துக்களை வைத்திட்டீர்.
வண்ண வண்ண பறவைகள் அவற்றின் 
வண்ணமும் வடிவமும் மனதிற்கு இனிமையூட்டும். 
வகை வகையான விலங்கினங்கள் அவற்றின்
வடிவமும் நடத்தையும் வேவ்வேறு.
கண்ணுக்கு தெரியா நுண்ணுயிரிகள்  முதல் 
கண்ணில் தெரியும் பூச்சிகள் வரை அவற்றின்
வடிவமும் எண்ணிக்கையும்  பலகோடி.  
எண்ண  எண்ண நான் வியந்து போகின்றேன்.
எத்தனை எத்தனை நிலத்தின் அமைப்புகள்!
மலைகள், காடுகள் மற்றும்  பள்ளத்தாக்குகள்.
சமவெளிகள், உவர்நிலம் மற்றும் பாலைவனம்.
புல்வெளிகள், புகலிடங்கள் மற்றும் பனிப்பிரதேசங்கள்.
படைப்பின் உச்சமாய் மனிதரை படைத்தீர்!
அவர்களில் ஞானமும் அறிவும் வைத்தீர்.
படைக்கும் ஆற்றலை அவனுக்கு கொடுத்தீர்,
உந்தன் படைப்பை கெடுத்து படைப்பதற்கல்ல.


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...