புதன், 18 நவம்பர், 2020

உருவ வழிபாடு - முதல் பெரும் பாவம்

நான் கத்தோலிக்க கிருஸ்துவ மதத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன். சேவை மனப்பான்மை,  பொதுநலம், நாட்டுப்பற்று, சமூக அக்கறை என்ற பல்வேறு உயர்ந்த கோட்பாடுகள் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இருந்தாலும் சில அருவருக்கத்தக்க வழிபாட்டு முறைகள் இன்னும் இங்கு தொடர்கின்றன. அதில் ஒன்று, சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு. பெரும்பாலான கத்தோலிக்க வழிபாட்டுமுறைகள் மக்களை திருப்திபடுத்தவே இருக்கின்றன தவிர கடவுளுக்காக அல்ல.  கடவுளுக்காக மனிதர்களை மாற்ற வேண்டுமே ஒழிய, மனிதர்களுக்காக கடவுளை நாம் மாற்றமுடியாது. ஒன்றை இந்த கத்தோலிக்க திருச்சபை  விளக்க வேண்டும். நீங்கள் பைபிள் சொல்லும் வழியில் நடக்கின்றீர்களா? அல்லது மக்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு செவிசாய்த்து, அவர்கள் விருப்பம்படி வழிபாடு நடத்த அனுமதிக்கின்றீர்களா?  "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது." (மத்தேயு 6:24 ). எனக்குத் தெரிந்தவரை விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் தொடக்க நூல் முதல் புதிய ஏற்பாட்டில் 
திருவெளிப்பாடு வரை எந்த ஒரு எந்த ஒரு ஆகமத்திலும் சிலை அல்லது உருவ வழிபாட்டிற்கான அங்கீகாரம் இல்லை மாறாக, எல்லாவற்றிலும் சிலை வழிபாட்டை மிகவும் கண்டிக்கின்ற வசனங்களே இடம் பெற்றுள்ளன. பத்து கட்டளை என்பது என்றென்றைக்கும் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை. அதன் முதல் கட்டளையே உருவ வழிபாட்டை முதல் பாவம் என்று அங்கீகரிக்கிறது.
ஆதாமின் முதல் பாவமும் கண்முன் தோன்றிய அந்த உருவ வழிபாடுதான்(ஆப்பிள்). அதுதான் கடவுளிடமிருந்து ஆதாமை நெறிபிறழ வைத்தது.  ஏசாயா, திருப்பாடல்கள் என பல்வேறான பழைய ஏற்பாடு நூல்களில் உருவ வழிபாடு மிகவும் கண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய முன்னோடியான, புதிய ஏற்பாட்டின் ஒரு முக்கிய ஆளுமையாக விளங்கும் பவுல் உருவ வழிபாட்டினை ஒரு வேசித்தனம் அல்லது விபசாரம் என்றே சொல்கின்றார்.  இந்த திருச்சபைக்கு மக்களும் அவர்களது சடங்கு சம்பிரதாயங்களும் தான் முக்கியம் என்றால், தயவு செய்து கத்தோலிக்க திருச்சபை, பழைய ஏற்பாட்டை தங்கள் விவிலியத்திலிருந்து நீக்கி விடுங்கள்.  ஏனெனில், பல கத்தோலிக்கர்கள் தங்கள் உருவ வழிபாட்டிற்கு கொடுக்கும் வியாக்கியானங்கள் 

1)  இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு, பழைய ஏற்பாட்டின் சட்டங்கள் எல்லாம் 
      மாற்றப்பட்டுள்ளன.  இதர பிற, கிருஸ்துவ சபைகளும் தங்கள் பல 
      வியாக்கியானங்களுக்கு, இதையே காரணமாக சொல்வர்.
என் பதில்:  “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். “விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.  (மத்தேயு 5:17-19)

2) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். (எண்ணிக்கை 21:8-9)
என் பதில்:  பாம்பு என்பது இங்கு பாவத்தினால் ஏற்படும் விளைவுக்கான ஒரு எச்சரிக்கையன்றி, அது வழிபடுவதற்காக கடவுள் சொல்லவில்லை. பல கத்தோலிக்கர்கள் இந்த பாம்பின் விளக்கத்தையும் கிறிஸ்துவின் சிலுவை உருவத்தையும் தொடர்பு படுத்துவார்கள். எவ்வளவு ஒரு அருவருக்கத்தக்க ஒரு விளக்கம்.

3) திருப்பேழை.  திருப்பேழை என்பது திருச்சட்டங்களை தாங்கிய ஒரு அமைப்பே அன்றி அதை வழிபட சொல்லவில்லை. திருநூலின் முக்கியத்துவம் கருதி, அது காலப்போக்கில் அழிந்துவிடா வண்ணம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

4) வீட்டில் நாம் நம் இறந்துபோன தாய் அல்லது தகப்பனின் புகைப்படத்தை மாட்டி வைக்கவில்லையா?  கடவுளும் மனிதரும் ஒன்றா?    கடவுளை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? தகப்பனை நினைவு கூர்கிறேன் என்று சொல்லி,  ஒரு குரங்கு, நாய், கழுதை இவற்றின் உருவத்தை வைத்து எவனாவது வழிபடுவானா? 

எனவே, என் அன்பார்ந்த கத்தோலிக்க மக்களே, நம்மை படைத்தவரது மாட்சிமை  நம் கண்களுக்கோ அறிவுக்கோ தெரியும் வண்ணம், குறுகியதும் இல்லை, அவரை காணும் வண்ணம் மனிதர்கள் உயர்ந்தவர்களும் இல்லை. 
சொரூபம் என்ற வார்த்தை கத்தோலிக்கர்கள் சிலைக்கும், உருவத்திற்கும் கொடுக்கும் ஒரு அழகிய கவர்ச்சி வார்த்தை.
உருவ வழிபாட்டிற்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களை விவிலியத்திலிருந்து என்னால் கொடுக்க முடியும் புதிய ஏற்பாடு உட்பட. ஆதரவாக, உங்களால் ஒரு வசனத்தை எனக்கு காட்ட முடியுமா? ஒன்று உங்கள் வழக்கமான சடங்கு முறைகளை பின்பற்றுங்கள் விவிலியத்தை விட்டு.  அல்லது விவிலியத்தை பின்பற்றுங்கள் உங்கள் வழக்கமான வழிபாடுகளை தவிர்த்து. 
மனிதனா?   கடவுளா?  யார்  முக்கியம் என்பதனை நீங்களே தேர்வு செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...