நல்ல பாடங்களையும் நல்ல அனுபவங்களையும் நாம் பல இடங்களிலிருந்து பெறமுடியும். அதிலும் குறிப்பாக பயணங்களில் அதிகம் பெறமுடியும். இரயில் பயணங்கள் மிகவும் பயனுள்ள ருசிகரமான விஷயங்களை கற்றுக்கொடுக்கும். அதிலும் நீண்டதூர பயணம் என்றால் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியா, பங்களாதேஷ் போன்ற மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த, பொருளாதார ஏற்றத்தாழ்வு அகன்று விரிந்த, வளரும் நாடுகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்வது என்பது ஒரு சாகசம். அதிலும் பல விடுமுறை பருவங்களில், முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்து, வேண்டிய ரயில் நிலையத்தில் இறங்கும்வரை, அந்த பெட்டிகளில் பயணம் செய்யும் எல்லோரும் ஒரு சர்க்கஸையே நடத்திவிடுவர். பன்னிரண்டு மணிநேர பயணத்தில், தூக்கத்தை கலைத்து, நிற்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் அந்த ரயில் பெட்டிகள் முழுவதும் மக்கள் திணிக்கப்பட்டிருப்பர். சாமான்கள் வைக்கும் மிகக் குறுகிய luggage பெர்த்தில் கூட, பலர் படுத்துக்கொண்டு தூங்கி சாதனை செய்துவிடுவர். ரயில் பெட்டியின் கழிப்பறை வரையிலும், அதிலும் குறிப்பாக வடஇந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் சிலநேரம் கழிப்பறையிலும் உட்கார்ந்து வருவார்கள். என்ன கொடுமை என்று நினைக்க தோன்றும்.
இப்படிப்பட்ட சில ரயில் பயணங்களில் நானும் ஒரு பயணியாய் பயணித்திருக்கிறேன். மூட்டைகளோடு மூட்டையாய் மக்களும் பயணிப்பர், மன்னிக்கவும், கொண்டுசெல்லப்படுவர். சுமைகளை கையிலும், கவலைகளை மனதிலும் சுமந்து கொண்டு பல ஏழைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தையும் அந்த ரயில் பயணத்தில் நடத்துகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோகக்கதைகளை வைத்திருப்பர். அதிலும் குழந்தைகளோடும், முதியவர்களோடும் குடும்பத்தோடு இந்த முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் பயணிப்பவர்கள் நிலையை பார்க்கும்போது, "ஐயகோ! இப்படிப்பட்ட நாட்டில் ஏன் பிறந்தேன்?" என்று நினைக்க தோன்றும். "இந்த நாட்டில் வசதிகளும், வாய்ப்புகளும் பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் மட்டுமா? அனுபவிப்பவர்களே அனுபவித்துக்கொண்டிருக்க, ஏழைகளும் பாமரர்களும் வாழ தகுதியற்ற மூன்றாம்தர குடிமக்களா?" என்று பல பொதுவுடைமை சிந்தனைகளும் அந்த பயணத்தில் ஏற்படும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இன்னும் அதிக கூட்டம் ஏறும். அங்குலம் அங்குலமாக நம்மைச் சுற்றியிருந்த அந்த சிறு இடைவெளியும் காணாமல் போகும். அந்த பன்னிரண்டு மணிநேர பயணத்தில், இடத்திற்காக சில சச்சரவுகளும் அரசியலைப் பற்றி, சினிமாவை பற்றி, அன்றாட வாழ்க்கையை பற்றி, குடும்ப சூழ்நிலையை பற்றி பல விவாதங்கள் காதில் விழுந்து கொண்டே இருக்கும். அதில் சில முதியவர்களின், ஏழைகளின் குமுறல்கள் கண்களில் நீரை பாய்ச்சி, இதயத்தில் வாளையும் பாய்ச்சும். வேலைதேடி குடும்பத்தோடு வரும் வடஇந்திய தொழிலாளர்களின் குமுறல்கள் அவர்களின் புரியாத மொழியையும் தாண்டி மனதில் புரியும்.
கையில் குழந்தையுடன் கணவனை இழந்த இளம் விதவைத்தாய், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், வேலையைத் தேடிச்செல்லும் தொழிலாளர்கள், பட்டதாரிகள், விவசாயத்தை கைவிட்டு கூலி வேலைக்காக நகரைத் தேடி செல்லும் விவசாயிகள் இப்படி பலரை அந்த ஒருசில ரயில் பெட்டிகள் சுமந்து செல்லும். கஷ்டப்பட்டு கூலிவேலை செய்து, விவசாயம் செய்து, பிள்ளைகளை படிக்க வைத்த வயதான பெற்றோர்கள், பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்து, திருமணமானதும் பெற்றோரை அவமதித்து வீட்டைவிட்டு துரத்திவிட, உழைத்து பழக்கப்பட்ட அந்த முதியவர்கள் வேறு அடைக்கலம் தேடாமல் சுயமாய் உழைத்து பிழைக்க நகரினை நோக்கி பயணிப்பதையும் இந்த ரயில் பெட்டி (முன்பதிவு இல்லா) பயணங்களில் காணலாம். இந்த பயணத்தை அதிகார வர்க்கத்தினர் அனுபவித்தால், இந்த நிலை இனியும் நீடிக்காது என்ற ஆதங்கம் மனதில் எழும்.
இப்படி பல பல மனதை நெருடும் பலரின் கதைகளை சுமந்து கொண்டுதான், அந்த ரயில் பெட்டிகள் பயணிக்கின்றன. அந்த பயணங்கள் நம்மைவிட எவ்வளவோ கீழ்நிலையில் உள்ள மக்கள் எவ்வளவு அவதிப்படுகின்றனர் என்ற பாடத்தை நமக்கு எடுத்து சொல்லும். இறைவனுக்கு நன்றி சொல்ல வலியுறுத்தும்.
நமக்கு மேல் வசதிப்படைத்தவர்களை நாம் நோக்கினால்,
நமது வயிறு எரியும்; அமைதியும் கெடும்.
நமக்கு கீழ் உள்ளோரை நோக்கினால்,
நமது மனது கற்றறியும்; இறைவனுக்கு நன்றியும் சொல்லும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக