வெள்ளி, 18 டிசம்பர், 2020

இறைவன் என் காவியத் தலைவன் (தமிழ் கவிதை) பாகம் - 3

 பல்லுயிர்    படைத்த   ஆதிபகவன் 
   படைப்பின்   உச்சமாய்  மானிடரை 
சால்புடை   மிகும்தன்   சாயல்தனில் 
   சிருஷ்டிக்க   கடவோம்  என்றீர் 

தனித்திரு   மனிதன்   வேதனை 
    தாமும்    எண்ணி   தக்கத்துணை 
இனிவேண்டும்  என்றே  பெண்ணை 
    இணையாக  அவனுக்கு ஈந்தீர் 

ஆணும்    பெண்ணுமாய்   படைத்தீர் 
    அனைத்தும்   ஆண்டிட  ஆசியளித்தீர் 
ஈணும்வழி   பலுகிப்   பெருகி 
     இந்தபூமி   நிரப்புங்கள்   என்றீர் 

மண்ணும்   மண்ணின்   யாவும் 
    மனிதனுக்கு  கீழ்ப்   படுத்தினீர் 
உண்ணும்   உணவாக  விளைச்சலை 
    உயிர்கள்   யாவுக்கும்   தந்திட்டீர் 

மண்ணால்  உண்டான  மனிதன் 
    மண்ணையே   ஆளச்  செய்தீர் 
விண்ணாள்   இறைவன்   உயிர்மூச்சை 
    வீழ்ந்திடும்  மனிதர்க்கு  கொடுத்தீரே 

படைத்தவை   யாவும்   நலமென 
   பார்த்து  மானிடனுக்கு  தந்திட 
கிடைத்ததை  எல்லாம்  சுவைத்திடும் 
   குணத்தால்  கெட்டுப்   போனான்
 
படைத்தவர்   கட்டளை   மீறினான் 
    பாவத்தின்   கனியைச்  சுவைத்தான் 
ஆடையின்றி   இருந்த  நிலையுணர்ந்து 
    அத்திஇலை   ஆடை  அணிந்தான்   


கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...