எத்தனை மெரிபா என்வாழ்வில் !
ஏன்நான் உருவாக்கிக் கொண்டேன்?
அத்துணை நலன்கள் கண்டிருந்தும்
அடிக்கடி இறைவனிடம் முறுமுறுத்தேன்.
ஏன்நான் உருவாக்கிக் கொண்டேன்?
அத்துணை நலன்கள் கண்டிருந்தும்
அடிக்கடி இறைவனிடம் முறுமுறுத்தேன்.
நல்லது எனக்கு எதுவென்றும்
நாளது உகந்தது எதுவென்றும்
வல்லவர் யாவும் அறிந்திடவே
வீணில் நானும் புலம்பினேன்.
செதுக்கப்படா கல்லும் சிற்பமாகா !
செழிப்படையா பண்படா நிலமும்!
பிதுக்கப்படா கட்டியும் குணமாகா !
பிசையாத களிமண் கலமாகா !
குறையென்று புலம்பும் நானும்
குறையென்ன வைத்தீர் என்றே
நிறை மனதோடு சிந்தித்தால்
நிறைவாய் உள்ளதே நிதர்சனம்.
சோதனை வேதனை என்றேன்
சொல்ல முடியா துயரமென்றேன்.
சாதனை என்னால் படைத்திடவே
சக்தியை எனக்கு அளிக்கின்றீர் !
செல்வர் நிலைகண்டு தாழ்வில்
சோர்ந்து போனது உள்ளமும் !
இல்லார் நிலைகண்டு உள்ளம்
இருப்பதில் நிறைவு காணும் .
வலிமை என்னில் குறையும்போது
வலிகளைச் சொல்லி கதறினேன்.
பலிகிடா நானோவென்று உள்ளம்
பதறி வேதனைக் கொண்டேன்
மெய்யில் வலிமைக் கூட்டினீர்
மெருகேற்றி அழகு கொடுத்தீர்
தீயில் புடமிட்ட பொன்போல்
தீதுநீக்கி எனை தூய்மையாக்குவீர்.
மேலானதைத் தேடியது உள்ளம்,
மேலானவர் நீரேயென மறந்து.
பாலாறு ஓடுமென விரும்பினேன்
பாதைமாறி ஓடாமல் காத்தீர்.
புகழைத் தேடியானும் ஓடினேன்.
புதையுண்டு கிடந்தேன் புழுதியில்.
புகலிடமாய் எனக்கு நீர்நின்றீர்
புகழையன்று புதுமை உருவாக்க .
பதவி பெருமை என்றழைந்தேன்
பட்டம் பலவும் தேடிநின்றேன்
உதவியின்றி நிந்தன் உதவியின்றி
உதவிடா எதுவும் எனக்கு .
நின்னருள் தேடுகையில் எனக்கு
நிம்மதி நாளும் கிடைத்தது
பொன்பொருள் தேடிட என்னுள்ளே
பொறாமை பேராசை மிகுந்தது.
ஒன்றைக் கேட்கிறேன் உம்மிடம்!
ஒதுக்கி மறுக்க வேண்டாம்!
இன்றே நீர்அதைச் செய்வீர் !
இனியதொரு மனம் போதும்.
இருமனம் என்று இல்லாது
இனி நிறைவில் நிலைத்த
ஒருமனம் என்னுள் வேண்டுமென
ஒத்த சிந்தனையாய் கேட்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக