செவ்வாய், 15 டிசம்பர், 2020

உறையினின்று வாளை வீசும்வரை (தமிழ் கவிதை)


இறைவா!   உம்மௌனத்தை  கலைத்து 
    இங்கு     நிலவும்  அநீதிக்கெதிராய் 
உறையினின்று   வாளை  வீசும்வரை 
     உம்மை   தொந்தரவு   செய்வேன்.

சாதிக்கொரு   நீதிமதத்திற்கு  ஒன்றென்று 
     சட்டங்கள்    அநீதியாய்    மாறுகின்றன 
ஆதிக்குடிகளோ   இங்கு    மதத்தின்பேரில் 
     அடக்கி   ஒடுக்கப்  படுகின்றனர்.

யாருடைய   தேசமிது  உரிமைகொண்டாட?
    யாருக்கு    நாங்கள்  அடிமையாவோம்?
பாரும்      நீரும்உம்    மக்களுக்கெதிரான 
    பகைவரின்   சதிமிகு  பாகுபாட்டினை.

பிறப்பால்   நீரெமக்கு   கொடுத்த - இந்த 
    பாரத      தேசத்தில்   நீதி,உரிமை 
பெறமுடியாது  இரண்டாம்   தரக்குடியாய் 
     பாரபட்சம்   நீதியிலும்   பணியிலும் 

சாதீய   ஆளுமையில்   ஒடுக்கும் 
    சண்டாளர்கள்   சதியால்   எம்மை 
மோதியழித்து  ஒடுக்க  நினைக்க 
    மும்முரமாய்   வேலை  செய்கின்றனர் 

அரசிலும்    ஆதிக்கம்   வேலைதரும் 
    அந்நியநாடு   நிறுவனத்திலும்  ஆதிக்கம் 
ஓரங்கட்ட   கல்வியிலும்  வேலையிலும் 
     ஓரங்கட்ட   எமக்கெதிராய்  நிற்கின்றனர் 

மோசடிகள்  பலவும்   செய்து -  நாங்கள் 
     மோசம்    போகவும்    நினைக்கின்றனர் 
பாசமாய்      பேசியும்      பலரை 
     படுகுழியில்    தள்ளப்   பார்க்கின்றனர் 

பாம்பினை    விடவிஷம்   மிக்கவர்கள் 
     பாதையில்   மறைந்து    தாக்குவார்கள் 
அம்பினை    நெஞ்சிலே    நீட்டாமல் 
     அமைதியாய்   முதுகில்   குத்துவார்கள் 

எமக்காய்   நீரும்போரிட  வரும்வரை 
    எதற்கும்   எவருக்கும்   அஞ்சிடோம்
ஒடுக்க    ஒடுக்க   எழும்பிநிற்போம் 
    ஓங்கியும்   நாம்குரல்  கொடுப்போம் 

அஞ்சுவது   இஸ்ரேலின்  தேவனுக்கே 
     அடிபணிவதும்    சர்வ   வல்லவருக்கே 
தஞ்சம்    எமக்கென்றும்     நீர்தாமே! 
     தகர்த்தெறிவீர்  சதிகள்   யாவும் !

விரைந்து   வாரும்  எமக்காய் 
    வீணர்களை   எதிர்த்துப்   போரிடும் 
கரைந்து   போகும்    இம்மனிதர் 
    கண்டிட   வலியகையை  ஓங்கிடும் 

கருத்துகள் இல்லை:

புதிய திருக்குறள் - இயற்கை சிறப்பு Couplet - Preserve the Nature (New Thirukkural)

வல்லோன்   கைவினை   யாதும்    மாசின்றி எல்லோர்    நயம் படும்   பொருள்:   எல்லாம் வல்லவனாகிய   இறைவனின் கைவினைப் பொருளாகிய இயற்கையின் எல்லாம...